|
முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ஓரிடத்தில் சேர்த்து, அவர்கள் மூலம் உலகை உய்விக்க எம்பெருமான் திருவுளம் கொண்டார். அதன்படி மூவரும் திருக்கோவிலூர் தலத்தை அடைந்தனர். அங்கே, வைணவர் ஒருவரது இல்லத்தில் இருந்த இடைகழியில் தங்கியிருந்தார் பொய்கையாழ்வார். அப்போது பூதத்தாழ்வாரும் அங்கு வந்தார். இந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம் என்று பொய்கையாழ்வார் சொல்ல, இருவரும் அமர்ந்தனர். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் வந்தார். இங்கு இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி, மூவரும் நின்றுகொண்டனர். மூவரும் பகவானின் மகிமைகளைப் பேசிக் களித்திருத்தனர். அப்போது நான்காவதாக ஒரு நபர் உட்புகுந்தது போன்று நெருக்கம் ஏற்பட்டது. இருள் சூழ்ந்துவிட்ட அந்த வேளையில் புதிதாக வந்திருப்பது யார் என்று தெரியவேண்டாமா?
எனவே பொய்கையாழ்வார், வையம் தகழியா.. என்று துவங்கி தமது பாசுரத்தால், பூமியாகிய தகழியில் கடல் நீரையே நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தாழ்வார், அன்பே தகழியா.. எனத் துவங்கி அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தனையைத் திரியாகவும் கொண்டு ஞான தீபம் ஏற்றினார். பேயாழ்வார் இந்த இரண்டு ஒளியினாலும் இருள் அகன்றதால் எம்பெருமானைக் கண்டேன் என்று பாசுரம் பாடுகிறார். நாமும் நம் மனத்துள் அன்பெனும் விளக்கேற்றி, மாசுகள் எனும் இருளகற்றி, உள்ளே பரம்பொருளைக் குடியிருத்தி, நாளும் நல்லதே செய்து, உள்ளொளி பெருக்கி மகிழ்வோம்! |
|
|
|