|
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்று நடத்தினார். யாகக் குதிரை திக் விஜயம் புறப்பட்டது. விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்தனர். குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக கபில முனிவரின் ஆசிரமத்தில் அதைக் கண்டுபிடித்தனர். கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதி, முனிவரைத் தாக்க முயன்றனர். ஆனால், கபில முனிவரின் ஒரு பார்வையிலேயே எரிந்து சாம்பலானார்கள் சகரனின் புதல்வர்கள்.
அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்சத்தின் சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பலவாறு முயற்சித்தனர். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கை பூமிக்கு வந்தால் அவள் மூலம் முன்னோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதை அறிந்து, அவளை நோக்கி தவம் செய்தான். கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தி, சிவனாரைக் குறித்து தவமியற்ற அறிவுறுத்தினாள். பகீரதன் சிவனாரைக் குறித்து கடும் தவம் இருந்தான். சிவனார் மனம் கனிந்தார்; பகீரதனுக்கு அருள் புரிந்தார். அதன்படி, கங்கையை சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர். அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு பாகீரதி என்றும் ஒரு பெயர் உண்டு! |
|
|
|