|
யோகரதோ வா போகரதோ வா ஸங்க ரதோ வா ஸங்க விஹீன: யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ
பொருள் : ஒருவனுடைய சுற்றுப்புற சூழ்நிலை எப்படி இருந்தாலும் அவன் மனது மட்டும் எப்போதும் இறைவன் பால் ஈர்க்கப்பட்டு இருந்தால், அவன் மகிழ்ச்சியாகத்தான் இருப்பான். அவன் அஷ்டாங்க யோக வழியில் இருந்தாலும் சரி, உலக போகங்களில் திளைத்து இருந்தாலும் சரி, அவனைச் சுற்றி உற்றார் உறவினரின் கூட்டம் இருந்தாலும் சரி, யாரும் இல்லாமல் தனியாக இருந்தாலும் சரி - எப்போதும் ஆனந்தம்தான்!
கோரா என்பது அவர் பெயர். பொம்மை செய்ய பிசைந்து கொண்டிருந்த மண்ணில், தன் குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் போகுமளவுக்கு விட்டலன் மேல் பக்தி. இதனால் கோபம் கொண்ட அவர் மனைவி துளசி, ஒரு பெரிய ரம்பத்தை எடுத்து விட்டல் சிலையை வெட்டப் போனாள். ஹேய் துளசி, நில்லு என்று அவள் கையைப் பிடித்தார் கோரா. திமிறிய துளசி, விட்டல் மீது ஆணை, என்னைத் தொடாதீர்கள் என்றாள்.
அவ்வளவுதான்! கோரா கும்பர் தன் மனைவியைத் தொடவே இல்லை. துளசி தனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசையால், தன் சகோதரி சாந்து பாயை தன் கணவருக்குத் திருமணம் செய்து வைத்தாள்.
நடந்தது எதுவும் அறியாத துளசியின் தந்தை கோராவிடம், மாப்பிள்ளை! நீங்க துளசியின் மீது அன்பு வைத்திருப்பது எனக்குத் தெரியும். என் குட்டி மகள் சாந்துவும் சந்தோஷமாக இருக்கணும். விட்டல் மீது ஆணையாக துளசியை நடத்துவது மாதிரியே நீங்க சாந்துவையும் நடத்தணும் என்றார். துளசியைத்தான் கோரா தொடுவது இல்லையே! அதனால் சாந்துவையும் தொடவில்லை அவர்! விட்டல் மீது அல்லவா சத்தியம்! மீறுவாரா? இருவரையும் தொடவில்லை.
துளசியும் சாந்துவும் ஒருநாள் இரவு அவர் உறங்கும் போது, அவர் நம்மைத் தொடவேண்டாம், நாம் இருவரும் அவரைத் தொடலாமே... என்று கோராவின் இரு பக்கத்திலும் போய் அவரைக் கட்டிக் கொண்டனர். பதறிப்போன கோரா, பெரிய ரம்பத்தால் தன் இரு கைகளையும் வெட்டிக் கொண்டார்.
மண் பொம்மை செய்பவருக்கு கைகள் இல்லாமல் என்ன செய்வார்? விட்டல் நினைவில் காலால் மண் பிசைவார். துளசியும் சாந்துவும் பொம்மை செய்வார்கள். ஆனால், அவற்றை வாங்குவார் இல்லை! வருமானம் குறைந்தது. கடன் ஏறிற்று. வீடு ஏலத்துக்கு வந்தது. கோரா கலங்கவில்லை. விட்டலா, விட்டலா என்றே நாளைக் கழித்தார். அவர் வீட்டை ஏலத்தில் எடுத்தான் சியாமா என்ற பையன். கவலை வேண்டாம் உங்களுக்கு நான் இருக்கிறேன் என்றவன், அவருக்கு உதவியாக மண் பொம்மைகள் செய்து விற்று வந்தான்.
ஒரு நாள்.. கோராவிடம் வந்த நாமதேவர், என் விட்டல் உன்னிடம் இருக்கிறானே! அப்பா! என்ன தவம் செய்தாய்? என்றார். விட்டலா, பாண்டுரங்கா! உன்னை வேலை வாங்கிய என்னை மன்னித்து விடப்பா! என அரற்றினார் கோரா. எல்லாரும் பண்டரிபுரம் வாருங்கள் என்று கூறி மறைந்தான் விட்டல சியாமளன். எல்லாரும் பண்டரிபுரம் சென்றனர். நாமதேவர், பஜனை முறைப்படி கோராவுக்கும் ஜால்ரா கொடுத்தார். அதைப் பெற தம்மை அறியாமலேயே கை நீட்டினார் கோரா. வாழை குருத்து போல் இரு கைகள் நீண்டன. அவை கோராவின் கைகள்! எல்லோரும் ஆனந்தப்பட்டனர். பிரம்மத்தில் லயித்த கோரா கும்பருக்கு, விட்டலனே சேவகனாக வந்ததில் வியப்பில்லை அன்றோ! |
|
|
|