|
தீபாவளி அன்று காலை எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று பரஸ்பரம் விசாரித்துக்கொள்வது வழக்கம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம். தண்ணீரில் கங்கை எழுந்தருளி இருக்கிறாள் என்று நம்பிக்கையுடன் நீராடினால், நமது பாவங்கள் அனைத்தும் நசித்துப்போகும். ஒருமுறை, பார்வதிதேவி எல்லோரும் கங்கையில் நீராடி பாவங்களைத் தொலைத்துக் கொண்டால், நரகத்துக்கு அவசியம் இல்லையே என்று சிவ பெருமானிடம் கேட்டாள். உண்மைதான்! ஆனால் கங்கையால் ஏற்படும் புண்ணியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்ற சிவபெருமான், நாம் இருவரும் கிழத் தம்பதியாக கங்கைக் கரைக்குச் செல்வோம்.
நீ அங்கு வருபவர்களிடம் என்னைத் தூக்கிச்சென்று கங்கையில் நீராடினால், பொன் - பொருள் பரிசு தருவதாகக் கூறு. ஆனால், அப்படி என்னைத் தூக்கினால் எனது பாவங்கள் அவர்களைச் சேரும் என்று கூறு என்றார். பார்வதியும் அப்படியே கங்கையில் நீராடி வருபவர்களிடம் மன்றாடினாள். ஒருவரும் முன்வரவில்லை. கடைசியில் திருடன் ஒருவன் முன்வந்தான். அவனிடம், இவரைத் தூக்கினால் இவரது பாவம் உன்னைச் சேருமே என்றாள் மூதாட்டியாக இருந்த பார்வதி. அதற்கு முரடன், அதனால் என்ன.. அப்படியே பாவங்கள் சேர்ந்தாலும் அதைக் கரைப்பதற்குத்தான் கங்கா மாதா இருக்கிறாளே! என்றான் நம்பிக்கையுடன். அவ்வளவில் அவனுடைய பாவங்கள் தொலைந்ததுடன் அவனுக்கு சிவ - பார்வதி தரிசனமும் கிடைத்தது. வழிபாட்டில் நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம். |
|
|
|