|
அம்மா! கால் வலிக்குது. இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? சிணுங்கினான் சீனு. சீனப்பா, சமத்துல்ல! அதோ அந்த அனுமார் கோயில் வரைதான். அங்கே போய் உட்கார்ந்துடலாம் தம்பியைச் சமாதானப்படுத்தினான் மூத்தவன் பாகண்ணா. அம்மா! சீனுவை இதுக்கு மேல நடக்க வைக்க முடியாது. நீங்களும் கைக்குழந்தையைத் தூக்கிகிட்டு எவ்வளவு தொலைவுதான் நடப்பீங்க? இந்த சங்கராபுரத்துலேயே தங்கிடுவோம் என்றான். வெங்கம்மாவும் உடன்பட்டாள். அதிகாலையில் வெங்கம்மா கோயிலைப் பெருக்கி நீர் தெளித்து கோலமிட்டாள். மாலை வேலைகளில் பிள்ளைகளோடு பஜனை செய்தாள். ஒரு பண்ணையார் வெங்கம்மாவின் நிலையைக் கண்டு வருந்தி, அம்மணி! உன் புருஷன் அகால மரணமடைந்தாலும் குழந்தைகளுக்காக பிழைப்புத் தேடி இங்கு வந்திருக்கிறாய்! உன் தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். இவ்வூரிலுள்ள எனது நிலத்தில் ஒரு ஏக்கரை உனக்குத் தருகிறேன். உன் பிள்ளைகள் தலையெடுக்கும் வரை உழுது பயிரிடும் உரிமை உன்னுடையது. நீ ஒழுக்கம் தவறாமல் வாழ, இது என் உதவியாக இருக்கட்டும் என்றார்.
வெங்கம்மா மனம் மகிழ்ந்தாள். நெல்லாகக் கிடைத்த பிட்சைகளை ஒரு மண் கலயத்தில் போட்டு வைத்திருந்தாள். அது விதையானது. ஒரு குடியானவன் கருணையோடு, கலப்பையும் மாடுகளும் தந்தான். பாகண்ணாவும், தாசப்பாவும் நிலத்தை உழுதனர். வெங்கம்மாவும் சீனப்பாவும் களையெடுத்தனர். நல்ல விளைச்சல்! ஊராரின் ஒத்துழைப்போடு வைக்கோலும் நெல்லுமாய் பிரித்து, மூட்டை கட்டி கோயிலில் அடுக்கினர். ஒரு சில பொறாமையாளர்கள் கிராம தாசில் தாரரிடம், வெங்கம்மா, முன்னே ஆதரவற்றிருந்தாள். இப்போதுதான் நெல்மூட்டை அடுக்கி வைத்திருக்கிறாளே! இவளுக்கு மட்டும் வரி கிடையாதா? என்று குமுறினர். சினமுற்ற தாசில்தாரர் வரி, அபராதம் என்ற பெயரில் தானிய மூட்டைகளைப் பறித்துக் கொண்டார். இனி, கோயிலில் தங்கக் கூடாதென்ற ஆணையும் பிறப்பித்தார்.
சில நல்லவர்கள் வீட்டில் வெங்கம்மா வேலை பார்த்தாள். குடியிருக்கவும் இடம் கிடைத்தது. அவ்வூர் ஆசிரியர் வீட்டில் வேலை செய்து, கூலியாக பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். ஆசிரியரும் சம்மதித்தார். வெங்கம்மா வேலை பார்த்த ஒரு குடும்பத்தினர் பாகண்ணாவுக்கு உபநயனம் செய்து வைத்தனர். மூன்று வேளையும் காயத்ரி மந்திரத்தை ஜபித்தான் பாகண்ணா. காயத்ரி மந்திர மகிமையால் காயத்ரி தேவி ஒருநாள் நிஷ்டையில் பாகண்ணா நாவில் பீஜாட்சரத்தை எழுதினாள். அது முதல், சந்தங்களோடு பக்திப் பாடல்களை பாகண்ணா இயற்றினார். நடக்கப்போகும் கெடுதல்களை முன்கூட்டியே அறிந்து சொல்லி எச்சரித்தார். தாசப்பா தலையெடுத்த பிறகு, பாகண்ணா அவனிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஆதோணியில் விஜயதாசரிடம் தீட்சை வாங்கிக் கொண்டு பக்தியைப் பரப்பி கோபால தாசரானார். 18-ம் நூற்றாண்டில் கர்நாடகாவில் வாழ்ந்த மகான் இவர்.
|
|
|
|