|
பக்த பிரகலாதனின் பேரன் மகாபலி. பண்பும் பரிவும் கொண்டவன். ஆனாலும், தான் செய்யும் புண்ணிய காரியங்கள் குறித்து கர்வமும் இருந்தது அவனுக்கு. அதேநேரம், அவன் பெற்றிருந்த வரங்களால் இந்திர பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என்று தேவர்களும் அச்சத்தில் இருந்தனர். அவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள். மகாபலியை தடுத்தாட்கொள்ள நினைத்த பரம்பொருள் வாமன அவதாரம் எடுத்தார். மகாபலி இந்திர பதவி வேண்டி யாகம் செய்துகொண்டிருந்த யாகசாலைக்குச் சென்றார். மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அவ்வளவுதானே! தந்தால் போச்சு என்று இறுமாப்புடன் ஒப்புக்கொண்டான் மகாபலி. ஆனால் வந்திருப்பது யார் என்பதை அறிந்த அசுரகுரு சுக்கிராச்சாரியர் மகாபலியைத் தடுத்தார். ஆனால், மகாபலி அவர் கருத்தை ஏற்கவில்லை.
வாமனருக்கு மூன்றடி நிலம் தானமாகக் கொடுப்பதாகக் கூறி, தாரை வார்த்துக் கொடுத்தான். மறுகணம் வாமனர் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்தார். முதல் நாள், தம் ஒரு திருவடியால் பூமியை அளந்தார். அடுத்த நாள், தம் மற்றொரு திருவடியால் விண்ணை அளந்தார். 3-வது நாள், இன்னும் ஓர் அடியை எங்கே வைப்பது என்று பகவான் கேட்க, மகாபலி தன் தலையைக் காட்ட, பகவான் அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்தபடி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். மகாபலி நான் தங்களுக்கு தானம் கொடுத்த மூன்று தினங்களில் நடுவில் வரும் சதுர்த்தசி திதியில் மக்கள் எல்லாரும் அதிகாலையில் எழுந்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டான். பகவானும் அப்படியே அனுக்கிரஹம் செய்தார். |
|
|
|