|
சகுனியின் ஆலோசனையின்படி பாண்டவர்களை சூதாட அழைத்தான் துரியோதனன். அதில் கலந்துகொண்ட தருமர் நாடு, நகரம் அனைத்தையும் இழந்தார். அதன் காரணமாக பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்யும் நிலை. பாண்டவர்கள் வனம் செல்ல, அவர்களின் தலை நகரான இந்திரபிரஸ்தத்தின் மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்திரபிரஸ்த நகரமே இருண்டு போனது. காலம் கழிந்தது. பல்வேறு சோதனைகளைக் கடந்து வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் நிறைவு செய்து நாடு திரும்பினார்கள் பாண்டவர்கள். அவர்களது வருகையை அறிந்த இந்திரபிரஸ்த மக்கள் பேரானந்தம் அடைந்தனர்.
அந்த நகரமே விழாக்கோலம் பூண்டது. தென்னை, வாழை, பாக்கு, கமுகு மரங்களால் தோரணங்கள் அமைத்து, வீதியெங்கும் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு அலங்கரித்தார்கள். எங்கும் மங்கல ஒலி முழங்கின. அதுமட்டுமா? வீட்டுக்கு வீடு தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து மகிழ்ந்தார்கள் மக்கள். தீபாவளி கொண்டாட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்றும், பாண்டவர்கள் நாடு திரும்பியது ஒரு தீபாவளித் திருநாள் என்றும் கூறுவார்கள். தீய எண்ணங்களை ஒழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ வேண்டும். ஆனால், அதற்கான முயற்சியில் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கும்; பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியது வரும். இதை பாண்டவர்கள் மூலம் உணர்த்தி, அவர்கள் துன்பங்களைத் தாண்டி வெற்றி பெற்ற கதையை, தீபாவளித் திருநாளில் நினைவுகூர்வது சிறப்பாகும். அப்போது, நமக்கும் தீமைகளை அணுகாத திடசிந்தையும், கடவுளின் அணுக்கமும் வாய்க்கும். |
|
|
|