|
ஒரு சீடனுக்கு கெட்ட சகவாசத்தால் மதுப் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த குரு அப்பழக்கத்தினால் உண்டாகக் கூடிய கெடுதல்களையெல்லாம் எடுத்துச் சொன்னார் மதுவை மறந்து விடு என்றார். ஆனால் சீடனோ, நானா அதைப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். இல்லையே, ஸ்வாமி! அதுதான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. என்னை விட்டு விடும்படி அதனிடம் சொல்லுங்கள்.... என்றான். குருவும் சரியென்று போய் விட்டார். மறுநாள் கோயில் மடைப்பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சீடனை ஆசிரமம் வரச் சொல்லி ஆள் அனுப்பினார் குரு. அவனும் வந்தான். அங்கே குரு தூணை வளைத்துப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். சீடனைப் பார்த்ததும் வாப்பா வா, உன்னோடு உட்கார்ந்து பேச வேண்டுமென்று தான் வரச்சொன்னேன். ஆனால் அது இப்போது முடியாது போலிருக்கிறதே... இந்தத் தூண் என்னை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. என்ன செய்யலாம்? என்றார் குரு. குருவே! நீங்கள் சொல்வது உங்களுக்கு அசட்டுத்தனமாக தெரியவில்லையா? உயிரில்லாத தூண் உங்களை எப்படி கெட்டியாகப் பிடித்திருக்க முடியும்? என்றான் சீடன். உயிரில்லாத மது உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று நீ சொன்னால், அது புத்திசாலித்தனம். அது மாதிரி நான் சொன்னால் அது மட்டும் அசட்டுத்தனம், அப்படித்தானே? திருந்திய சீடன், மதுவைத் துறந்தான்.
|
|
|
|