|
மன்னன் அரிச்சந்திரன் மிகவும் நேர்மையாக அரசாட்சி செய்து வந்தான். வசிஷ்டர் அவனுக்குக் குலகுருவாக விளங்கினார். ஒருமுறை தேவலோகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உலகிலேயே மிக நேர்மையான மனிதன் யார்? என்று கேட்டான் தேவேந்திரன். சந்தேகமே வேண்டாம். மன்னன் அரிச்சந்திரனுக்குத்தான் அந்தப் பெருமை. எந்தச் சூழலிலும் பொய் பேசாதவன் அவன் என்றார் வசிஷ்டர். வசிஷ்டருடன் பல விஷயங்களில் ஒத்துப் போகாத விஸ்வாமித்திரர், அவருக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். தேவேந்திரா, வசிஷ்டர் கூறுவது உண்மையல்ல. சோதனை வந்தால் அவனும் பொய் கூறுவான். தன்னுடைய சிஷ்யன் என்பதற்காக, வசிஷ்டர் அரிச்சந்திரனை உயர்த்திக் கூறுகிறார் என்றார் விஸ்வாமித்திரர்.
வாதம் தீவிரம் அடைந்தது. அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைப்பேன் என்றார் விஸ்வாமித்திரர். அது நடக்காத காரியம் என்றார் வசிஷ்டர். வஞ்சக முறையில் அரிச்சந்திரனைச் சத்தியம் செய்ய வைத்து, நாட்டிலிருந்து அவனைக் குடும்பத்துடன் வெளியேற்றினார் விஸ்வாமித்திரர். ஒரே ஒரு பொய் சொன்னால், மீண்டும் ராஜ்ஜியத்தை அளிப்பேன் என்று விஸ்வாமித்திரர் கூறியதை அரிச்சந்திரன் ஏற்றுக்கொள்ள வில்லை. மனைவி சந்திரமதி மற்றும் மகன் லோகிதாசனுடன் காசியை நோக்கிப் பயணம் செய்தான் அரிச்சந்திரன். இந்த நிலையில், எப்போதோ மன்னன் தானம் அளிப்பதாகச் சொன்ன தொகையையும் அவனிடம் கேட்டார் விஸ்வாமித்திரர். சுடுகாட்டில் வெட்டியானுக்கு உதவியாக அரிச்சந்திரன் பணிபுரிய, மனைவி சந்திரமதி ஒருவனுக்கு அடிமை சேவகம் செய்தாள். இப்படியாக அவர்கள் வாழ்க்கை நடக்கும்போது, பாம்பு தீண்டி மகன் லோகிதாசன் இறந்தான். அப்போதும், ஒரே ஒரு பொய் கூறினால், எல்லா துரதிர்ஷ்டங்களும் நீங்கும் என விஸ்வாமித்திரர் கூறினார். அந்த நிலையிலும் மன்னன் அரிச்சந்திரன் பொய் பேச மறுத்தான். விஸ்வாமித்திரர் வியந்தார். தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
|
|
|
|