Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உனது வாழ்க்கைப்பாதையில் ..
 
பக்தி கதைகள்
உனது வாழ்க்கைப்பாதையில் ..

ஆன்மிகத்தின் பெயரால் பலர் விரதமிருக்கிறார்கள். ஆன்மிகத்திற்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி இதில் எழும். உணவு, உடல் சார்ந்த விஷயம்தான். ஆனால், இங்கே நீங்கள் வாழ உடலே அடிப்படை. துரதிருஷ்டவசமாக பலரும் கொடூரமான விரத முறைகளை பயன்படுத்தி உடலை வருத்திக்கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் வெறித்தனமாக ஈடுபட்டு தங்கள் வளர்ச்சிக்கான படிக் கற்களையே தடைக்கற்களாக மாற்றிக் கொள்ள முற்படுகிறார்கள். ஒருசிலர் உடலை அதீதமாக வருத்தி அதனை சிறுமைப்படுத்துவது, இன்னும் சிலர் உடலையே பிரதான படுத்தி அதனை தேவைக்கு அதிகமாக கொண்டாடுவதும் நடைபெறுகிறது. இரண்டுமே தேவையில்லாதது. ஒவ்வொன்றுக்கும் உரிய இடத்தை தருகிறபோதுதான் அது உங்களுக்கு பயன்படும். மிகையான முக்கியத்துவமோ, சிறுமைப்படுத்துதலோ உடலை சீர்குலைக்கத் தான் செய்யும். உடல் என்பது எவ்விதத்திலும் சிக்கல் இல்லாத ஒன்று என்கிற முறையில் உடலைக் கையாள வேண்டும்.

சத்சங்கத்தில், சரியான கேள்விகள் வருமாயின் அவற்றுக்கு விடிய விடிய பதிலளிக்க நான் தயார். ஏனெனில், உடல் எனக்கொரு பிரச்னையில்லை. ஆனால், கேள்வி கேட்பவர்களுக்கு அப்படியில்லை. எல்லையின்மையில் விரிவடைவது பற்றி நான் பேசிக் கொண்டே போகலாம். கேட்கும் பலருக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடலே வெடிப்பது போல் தோன்றும். உங்கள் உள்ளம் அன்பால் வெடிக்காமல் இருக்கலாம். உங்கள் மனம் ஞானோதயத்தால் வெடிக்காமல் இருக்கலாம். ஆனால், உங்கள் உடலின் சில பாகங்கள் வெடித்துவிடுமோ என்று உங்களுக்கு தோன்றலாம். பங்கேற்பாளர்களைவிடவும் அதிகமாக நான் நீர் அருந்தியிருப்பேன். ஆனால், கழிப்பறைக்கு போகும் அவசியம் எனக்கு கிடையாது. ஏனெனில் உடல் எனக்கு ஒரு பிரச்னையே கிடையாது. உடலை இந்த தன்மையில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கிவிட்டால், அது உங்களை வேறெதையும் செய்யவிடாது. உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், அப்போது நான் ஞானோதயத்தை பற்றி பேசினால், ஞானோதயம் உங்களுக்கு முக்கியமாக இருக்காது. உங்கள் சிறுநீர் அவ்வளவு சக்தி வாய்ந்தது.
சக்கரவர்த்தி அக்பர் மிகவும் அறிவு பூர்வமான கேள்விகள் என்று கருதி சிலவற்றைக் கேட்பார். அவர்சக்கரவர்த்தி என்பதாலேயே பலரும் அவை அறிவுப்பூர்வமான கேள்விகள் என்று ஆமோதித்து பதில் சொல்வார்கள். தங்கள் தலையை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சிதான் அது. ஒருமுறை உலகிலேயே மிக இன்பமான அனுபவம் எது? என்று அவர் கேட்டார்.

சக்கரவர்த்தி அவர்களே! உங்களுக்கு சேவை செய்வதுதான், என்று சிலர் சொன் னார்கள். இப்படியே அவருக்கு சந்தோஷம் தரும் செய்திகளை பலரும் சொல்லச் சொல்ல, அவையில் பீர்பால் அலுப்புடன் அமர்ந்திருந்தார். சக்கரவர்த்திகளின் முகத்தை பார்ப்பதுதான் இன்பம் தரும் செயல், என்றெல்லாம் பலரும் பதில் சொல்லிக்கொண்டிருக்க, பீர்பால் பதில் தரவேண்டிய நேரம் வந்தது. சற்றும் தயங்காமல், மனிதனுக்கு அதீத இன்பம் தரும் செயல் மலம் கழிப்பதுதான், என்று பதிலளித்தார். அனைவரும் அதிர்ந்தனர். அவையில் இப்படி ஆபாசமாக பேசியதால், அதை நிரூபிக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் பீர்பால் தலைக்கே ஆபத்து என்றும் அக்பர் எச்சரிக்க, 15 நாட்கள் அவகாசம் கேட்டார் பீர்பால். ஒரு வாரம் கழித்து அக்பருக்கு வேட்டை பயணம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்தார். அரண்மனையில் இருந்த அத்தனை பெண்களும் அதில் பங்கேற்கும்படி செய்தார். வேட்டைக்குப் போன காட்டில் ஓரிடத்தில் அக்பர் மலங்கழிக்க ஒரு கூடாரத்தை அமைத்து, அதைச்சுற்றி பெண்களும், குழந்தைகளும் தங்குமிடங்களை அமைத்தார். சமையற்காரர்களிடம் சொல்லி, அக்பருக்கு விருப்பமான உணவுகளை சமைக்கச் செய்தார்.

மறுநாள் காலை அக்பர் தன் இருப்பிட கூடாரத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தால் மலம் கழிக்கும் கூடாரத்தைக் காணோம். (அந்த கூடாரம் எவ்வளவு முக்கியம் என்று கைலாஷ் மானசரோவர் யாத்திரை வந்தவர்களுக்கு தெரியும்) அக்பர் அங்குமிங்கும் நடந்தார். பொறுமையிழந்த நிலையில் காட்டுக்குள் மறைவிடம் தேடிப் போனார். அங்கே எல்லா இடங்களிலும் பெண்கள் நின்றுகொண்டிருக்கும்படி செய்திருந்தார் பீர்பால். பெண்கள் நிற்கும் போது அக்பரால் என்ன செய்ய முடியும்! தாங்கவே முடியாது என்ற நிலை வந்தபோதுதான் கழிப்பறை கூடாரத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுத்தார் பீர்பால். ஒரு வழியாய் கூடாரம் அமைக்கப்பட்டு, அவசரமாய் கூடாரத்திற்குள் நுழைந்தார். நிம்மதிப்பெருமூச்சு விட்டார். கூடாரத்திற்கு வெளியே பீர்பாலின் குரல் கேட்டது. நான் சொன்னதை ஒப்புக் கொள்கிறீர்களா?. ஆமாம்! உண்மைதான். இதுதான் உலகிலேயே இன்பமான விஷயம், என்றார் அக்பர். தாங்கமுடியாத ஒன்றிலிருந்து கிடைக்கும் விடுதலைதான் உலகிலேயே இன்பமான விஷயம். அது எதுவாக இருந்தாலும் சரி. உடல் அவ்வளவு முக்கியமானதாக ஆகிவிட கூடும். காலை வேளைகளில் சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் ஆகியவற்றை சரியாக பயிற்சி செய்து வந்தீர்கள் என்றால், எவ்வித சிரமமுமின்றி நீங்கள் இங்கே அமர்ந்திருக்கலாம். உடல் எவ்விதத்திலும் உங்களை சிரமப்படுத்தாது.

உங்கள் உடலை எதற்கு தயார் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே நீங்கள் சாப்பிடும் உணவு அமைகிறது. ஒரு நாயைப்போலவோ, சிறுத்தையைப் போலவோ ஓடுவதற்கு உங்கள் உடலை தயார் செய்கிறீர்களா? அல்லது 100 கிலோ எடையை தாங்கி நடைபோட தயார் செய்கிறீர்களா?
உடலை தெய்வீகத்திற்கான ஏணியாகவும் பயன்படுத்தலாம். பள்ளத்தில் கொண்டு சேர்க்கும் கருவியாகவும் பயன்படுத்தலாம். சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போதோ அல்லது வேறு வகையான உணர்வுகளிலோ அந்த நிர்ப்பந்தத்தை அகற்றுவது மிகவும் முக்கியம். ஆசிரமத்தில்கூட, நீங்கள் பசியாக இருக்கும்போது உங்கள் முன் உணவு பரிமாறப்படும். அள்ளி விழுங்க நீங்கள் ஆயத்தமாகும்போது, கைகூப்பி இறைவணக்கப்பாடல் சொல்லத் துவங்குவார்கள். ஐயோ பசிக்கிறதே! என்று நீங்கள் அயர்ந்துபோகலாம். சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற உந்துதல் வரும் போது அதனை இரண்டு நிமிடங்கள் ஒத்திப்போடுகிற உத்திதான் இது. இப்படி ஒத்திப்போடுவதால் நீங்கள் இறந்துவிட மாட்டீர்கள். மாறாக மேலும் வலிமையடைவீர்கள். கவுதம புத்தர் ஒருமுறை சொன்னார், நீங்கள் பசியாக இருக்கும்போது உங்கள் உணவை வேறொருவருக்கு கொடுத்துவிட்டால் நீங்கள் வலிமையடைவீர்கள், என்று. நான் அந்தளவுக்கு போகவில்லை.

கடுமையாக பசிக்கும்போது உணவு சாப்பிடுவதை இரண்டு நிமிடங்கள் ஒத்திப்போடுங்கள் என்றுதான் சொல்கிறேன். இது உங்களை மேலும் வலிமையாக்கும். உடல் சார்ந்த நிர்ப்பந்தங்களை அகற்றுவது மிகவும் முக்கியம். இது தொடர்பாக பல விஷயங்கள் உள்ளன. என் பாட்டியும் என் அம்மாவும் இத்தகைய முயற்சிகளை கையாண்டுள்ளார்கள். என் அம்மா உணவு சாப்பிடும் முன் ஒரு கைப்பிடி சோறை ஈ, எறும்புகளுக்கு இடுவார்கள். உலகின் எல்லா உயிரினங்களும் இந்த உலகில் உண்டு வாழவும், வளரவும் வாய்ப்புண்டு என்பதன் வெளிப்பாடே இது.  மக்கள் மனதில் எறும்பு மிகச் சிறியது. யானை மிகப்பெரியது. இருப்பதிலேயே சின்னஞ்சிறு ஜீவராசிக்கு முதலில் உணவு படைத்தார்கள். உணவுக்கு நீங்கள் அடிமையானால் ஒருவேளை உணவை துறந்திடுங்கள்.  இது உங்களைக் கொடுமைப்படுத்துவதற்கு அல்ல. உடம்பின் கொடுமையிலிருந்து விடுபட... நிர்ப்பந்தங்களிலிருந்து நீங்கவே விரதங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar