|
ஒரு மலையை வலம் வந்தால் எல்லாப் பெருமையும் கிடைத்து விடுமாமே! பாறைகள் நிறைந்த மலையை வலம் வருவதால் என்ன கிடைத்து விடும் என்று கிரிவலம் குறித்து கேலி பேசுவோர் உண்டு. இதற்கு சூரியபகவானும் விதிவிலக்கல்ல! இதனால் அவருக்கு ஏற்பட்ட சோதனையைக் கேளுங்கள். சூரியபகவான் உலகமெங்கும் உள்ள பல மலைகளின் மேல் தன் கதிர்களை வீசியபடியே, ஏழு குதிரைகள் பூட்டிய தன் தேரின் மீது உலா வந்துகொண்டே இருப்பார். ஒரு முறை, அவர் திருவண்ணாமலையின் மீது, வழக்கமான அலட்சியத்துடன் சுட்டெரிக்கும் கதிர்களை வீசியபடியே வந்து கொண்டிருந்தார். சிவனே அல்லவா அண்ணாமலையாக அங்கு எழுந்தருளியிருக்கிறார்! அவரது நெற்றிக்கண் முன், சூரியனின் வெப்பம் மிகச்சாதாரணமானதல்லவா! இதை உணராத சூரியன், கர்வத்துடன் தன் உஷ்ணத்தை அண்ணாமலை மீது பாய்ச்ச வந்தது வினை! அவரது தேர்சக்கரங்கள் வெடித்துச் சிதறின. தேர் சரிந்தது. ஏழு குதிரைகளும் தங்கள் உயிரை விட்டன. சூரியன் பிரம்மாவை நோக்கி, பிரம்மனே! காலத்தின் இயக்கமே நின்று விட்டதே! இதென்ன சோதனை, எனக்கதறினான். அப்போது அசரீரி ஒலித்தது. சூரியனே! நீ மற்ற மலைகளைப் போல் அண்ணாமலையை வெறும் கற்பாறையென நினையாதே. அங்கே சிவனே மலையாக இருக்கிறார். அங்கு செல்லும் போது மலையை வலம் செய்தபடியே ஒதுங்கிச் செல்ல வேண்டும். அந்த கிரிவலத்தால் உனக்கு நன்மையும் உண்டாகும், என்று கூறியது. சூரியனும் தன் தவறை உணர்ந்து மலையை வலம் வந்தான். இழந்த தேரையும், குதிரைகளையும் பெற்றான். சிவனும், பார்வதியும் ரிஷபத்தில் காட்சியளித்து அருள் புரிந்தனர். சூரியன் சிவதரிசனம் பெற்று மகிழ்ந்தான். |
|
|
|