|
திதத்தத்தத், தித்தத, திதிதாதை, தாததுத், தித்தத்திதா திதத்தத்தத், தித்த, திதிதித்த, தேதுத்து, தித்திதத்தா திதத்தத்தத், தித்தத்தை, தாத, திதேதுதை, தாததத்து திதத்தத்தத், தித்தித்தி, தீதீ, திதிதுதி, தீதொத்ததே
இப்படி ஒரு பாட்டை படித்து விட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார் கார்த்திகை நகரான திருவண்ணாமலையில் அவதரித்த பெரும்புலவர் அருணகிரிநாதர். அவரது எதிரே மகாபாரதத்தை தமிழில் வில்லிபாரதம் என்ற பெயரில் எழுதிய வில்லிப்புத்தூரார். அவர் பெரும் புலவர். கொங்குநாட்டை ஆண்ட வரபதியாட்கொண்டான் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கவே, மகாபாரதத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அவருக்கு பல பரிசுகளை வழங்கிய மன்னன், வாள் ஒன்றையும் வழங்கினான். இதன்பிறகு, அவர் தன்னிடம் கவி பாடி தோற்கும் புலவர்களின் காதை அறுக்க அந்த வாளைப் பயன்படுத்தி வந்தார். பலரது காதுகள் பறிபோய் விட்டன. இதைக் கேள்விப்பட்டார் அருணகிரியார். ஒருசமயம், அவருடன் அருணகிரியாருக்கு போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அருணகிரியார் பாடும் பாடல் களுக்கெல்லாம், அவர் மிக எளிதில் பொருள் சொல்லி வந்தார். இப்படியே 53 பாடல்கள் போய்விட்டன. 54வதாக, அருணகிரியார் கொளுத்திப் போட்ட அதிர்வேட்டு தான் மேற்கண்ட பாடல். இந்தப் பாடலைப் பாடிவிட்டு, உம்! சொல்லுங்கள், பொருளை! என்றார் அருணகிரியார்.
வில்லிப்புத்தூரார் திகைத்துவிட்டார். பாடலுக்கு பொருள் தெரியாத அவர், இப்படி ஒரு பாடலே இருக்க முடியாது. இது பொருளற்ற பாடல். இதற்கு மட்டும் நீர் பொருள் சொல்லிவிட்டால், நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன், என்றார். அருணகிரியார் கடகடவென பொருள் சொல்ல அதிர்ந்து போனார் வில்லிபுத்தூரார். தனது வாளை அருணகிரியாரிடம் கொடுத்து, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளச் சொன்னார். ஆனால், முருக பக்தரான கருணை மிக்க அருணகிரிநாதர் அவரிடமே வாளை ஒப்படைத்தார். சரி...அந்தப் பாட்டின் பொருள் தான் என்ன!
திதத்தத் தத்தித்த போன்ற தாளங் களுக்கேற்ப ஆடும் சிவனாலும், பிரம்மனாலும், தயிரை உண்டவனும், பாற்கடலையும் ஆதிசேஷனையும் படுக்கையாகக் கொண்டவருமான திருமாலாலும் வணங்கப்படும் முருகப் பெருமானே! தெய்வானை தாசனே!
பிறப்பு இறப்பிற்கு இடமான எலும்பு முதலான தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடல், தீயில் வேகும்போது கூட உன்னை வணங்கும் வகையில் என் புத்தியை உனது திருவருளுக்கு ஆட்படுத்த வேண்டும். பிரித்துப் பொருள் படித்தால் இன்னும் சுவையாக இருக்கும். திதத்தத் தத்தித்த- தாள ஸ்வரங்கள், ததி- நடனம், தாதை- சிவன், தாத- பிரம்மா, துத்தி- படமெடுக்கும், தத்தி- பாம்பு, தா- இடத்தையும், தித- நிலைபெற்று, தத்து- ததும்புகின்ற, அத்தி- பாற்கடலைப் பாயாகக் கொள்தல், ததி- தயிர், தித்தித்ததே- இனிக்கிறதென்று, து- உண்ட கண்ணனும், துதித்து- வணங்கப்படுகிற, இதத்து- பேரின்ப சொரூபி, ஆதி- முதல்வன், தத்தத்து- தந்தத்தையுடைய, அத்தி- ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட, தத்தை- கிளிபோன்ற தெய்வானை, தாத- தொண்டனே. திதே- தீமையே, துதை- நெருங்கிய, தாது- தாதுக்களால் ஆனது, அதத்து- மரணத்தோடும், உதி- பிறப்போடும், தத்து- பல தத்துகளோடும், அத்து- இசைவுற்றதுமான, அத்தி- எலும்புகளால் மூடிய, தித்தி- பையாகிய உடல், தீ- அக்னி, தீ- எரிக்கப்படுகின்ற, திதி- நாளில், துதி- உன்னைத் துதிக்கும், தீ- புத்தி, தொத்தது- திருவருளுக்கு ஆட்படுத்துதல். திருவண்ணாமலைக் கவிஞர் என்ன கலக்கு கலக்கியிருக்கிறார் பார்த்தீர்களா! |
|
|
|