|
கங்கைக்கரைக்கு வந்தார் ஒரு மகாமுனிவர். தவத்தால் மிகவும் சிறந்தவர் என்றாலும், கர்வம் என்பது சிறிதும் இல்லாதவர், அத்துடன், தன் பலத்தை தானே அறியாதவரும் கூட. கங்காதேவிக்கு தன்னில் வந்து நீராடும் மற்ற பக்தர்களெல்லாம் வீணே பாரத்தை சுமத்திவிட்டு செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவள் சிவபெருமானின் பத்தினியாக, அவரது சிரசில் இருந்தவரை மிகமிக புனிதமாக இருந்தாள். பகீரதன் என்பவன் தன் முன்னோருக்கு முக்திவேண்டி, அவளை பூலோகத்திற்கு இழுத்து வர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானான். கடும் பிரயத்தனம் செய்து பூமிக்கும் இழுத்து வந்து விட்டான். அதனால் தான் இப்போதும் கூட, கடுமையான முயற்சி செய்து ஒரு வேலையை முடிப்பவர்களை இவர் பகீரத பிரயத்தனம் செய்தார் என்று சொல்கிறோம். பூமிக்கு வந்த கங்கைக்கு மக்களின் பாவங்களைச் சுமக்கும் பணி தரப் பட்டது. அந்தப் பாவங்களை அவளை விட்டு அகன்று சிவபெருமானின் நெற்றிக்கண்களில் பட்டு பஸ்பமாக வேண்டுமானால், ஒரே ஒரு வழி தான் இருந்தது. யாராவது ஒரு நல்லவனோ, குறிப்பாக ஆசையை முற்றிலும் அழித்த துறவிகளோ, மகான்களோ அந்த நதியில் வந்து நீராடினால்தான், பாவங்கள் கரையும். கங்கை மகிழ்ச்சியடைவாள். அதனால் தான் தீர்த்தங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், சமண மதத்தினர் தங்கள் துறவிகளுக்கு தீர்த்தங்கரர் என்றுபெயர் வைத்தனர். நாரம் என்றால் தீர்த்தம்.
நாராயணன், நாரதர் போன்ற பெயர்களும் தீர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதே. இந்த பூமியிலும் பாவச்செயல்கள் தானே அதிகமாக நிகழ்கிறது. அந்தப் பாவிகள் தானே கங்கையில் ஏராளமாக நீராடுகிறார்கள்! எனவே, தன்னில் கரைந்த அவர்களது பாவங்களைச் சுமக்க முடியாமல் கங்கை கஷ்டப்பட்டாள். போதாக்குறைக்கு, பாழாய் போன மக்கள் சாக்கடையையும் கங்கையில் விழும்படி செய்தனர். இதனால் அவள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. தவமுனிவர் வந்தார். கங்கையைப் பார்த்தார். சாக்கடை கலந்தது. அவர் முகம் சுளித்தார். அப்படியே திரும்பி விட்டார். கங்கைக்கு மனது கனத்தது. ஐயோ! இப்படி நல்லவர்களெல்லாம் என்னைப் புறக் கணித்தால் நிலைமை என்னாவது? நான் பாவச் சுமை தாளாமல் மடிந்தும் வற்றியும் போவேனே! என நினைத்தவள், சாதாரணப் பெண் போல் மாறி, முனிவர் முன் சென்றாள். மகானே! ! கங்கையில் தங்களைப் போன்றவர்களை நீங்கள் நீராடாவிட்டால் அவள் எப்படி புனிதமாவாள்! இந்த சாக்கடை மகான்களின் உடலுக்கு பாதகம் ஏதும் செய்யாதே! தயவுசெய்து தாங்கள் நீராடிச் செல்லுங்கள், என்றாள்.
முனிவர் சம்மதிக்கவில்லை. அவர் தன் வழியில் சென்றார். உடனே கங்கையே சுயரூபத்தில் காட்சி தந்தாள். முனிவர் அந்த பரமசிவன் தேவியை வணங்கினார். அன்னையே! உன்னில் கரையும் பாவங்கள் என்னவாகின்றன என்பதை எனக்கு விளக்கியருளினால், நான் மகிழ்வுடன் உன்னில் நீராடிச் செல்வேன், என்றார். ஐயனே! பாவிகள் என்னுள் கரைக்கும் பாவங்களை நான் கடலரசனிடம் சேர்த்து விடுகிறேன். எனவே அது பாவத்தைப் பெறுகிறது. கடல்நீர் ஆவியாகி சூரிய பகவானை அடைகிறது. சூரியபகவான் அதை மேகமண்டலத்திடம் ஒப்படைக்கிறான். அது மழையாய் கொட்டுகிறது. மீண்டும் அது பூமிமாதாமூலம் என்னையே வந்டைகிறது. என்னிலுள்ளதை கரைக்கும் சக்தி உங்களைப் போன்ற மகான்களுக்கே உண்டு. அதனால் தான் கும்பமேளாவில் சாதுக்கள் நீராடுகின்றனர். அவர்களது சக்தியால் கரையும் பாவம், என் நாதனான சிவனின் நெற்றிக்கண் வெப்பத்தில் பஸ்பமாகி காணாமல் போய்விடுகிறது. எனவே தான் என்னில் குளிப்பதை உயர்ந்தது என்கிறார்கள், என்றாள். மனத்தெளிவு பெற்ற முனிவர் கங்காஸ்நானம் செய்தார். தீபாவளியன்று நம் மனதில் நல்ல எண்ணங்களுடன் நீராடினால், கங்கையின் பாவத்தையே கரைத்த புண்ணியத் திற்கு ஆளாவோம். செய்வோமா! |
|
|
|