|
தீபாவளிக்கு ஒரு வீட்டில் பட்டுப்புடவை, நெய் பலகாரங்கள்... இன்னொரு வீட்டிலோ நூல் புடவைக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை...பக்கத்து வீட்டார் யாராவது தானமாக பலகாரம் கொடுத்தால் அதை மட்டுமே சாப்பிட வேண்டிய நிலை... இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால், முதலாமவர் கடும் உழைப்பாளி யாய் இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கிராமத்தில் மழை பொய்த்து விட்டது. விவசாயிகள் பயிரே செய்யவில்லை. வயல்வெளியை விட்டு சற்று தள்ளியிருந்த குளத்தில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. இதை ஒரு விவசாயி போய் பார்த்தான். இருக்கிற இந்த குறைந்த நீரை நமது வயல் வரைக்கும் கொண்டு வந்து விட்டால் பயிர் விளைந்து விடும். அதற்கு தேவை சிறிய ஓடை. நாமே அந்த ஓடையை வெட்டிவிட்டால், இந்த தண்ணீரை வயல் வரை கொண்டு வந்து விடலாம். நமது பயிர் எப்படியாவது விளைந்து விடுமென நினைத்தான். முயற்சியை தொடங்கிவிட்டான். ஓடைப்பணி வேகமாக நடந்தது. இதே வேகத்தில் பணிநடந்தால் மாலைக்குள் முடிந்து விடுமென்ற நிலை. அவனது மனைவி சாப்பாட்டுடன் வயலுக்கு வந்தாள்.
என்னங்க! நீங்க வெட்டிவேலை செய்துகிட்டு இருக்கீங்க! குளத்துநீர் நம் வயலை எட்டாது. இப்பதான் பாதிதூரமே ஓடை வெட்டி யிருக்கீங்க! முழுசா வெட்டினா கூட தண்ணீர் வயலை எட்டுமே எட்டாதோ! என்று அவனுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்தும் வகையில் பேசினாள். அவனுக்கு கோபம் வந்துவிட்டது. போடி போ! இந்தமுறை விளையாவிட்டால் நீயும், நம் குழந்தைகளும் பட்டினி கிடப்பீர்கள்! எப்படியும் இதை முடித்தே தீருவேன், அதுவரை சாப்பிடக்கூட மாட்டேன், என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு பணியைத் தொடர்ந்தான். மாலையில் தண்ணீர் வயலுக்குள் பாய ஆரம்பித்து விட்டது. மற்றவர்கள் செய்யாததை அவன் செய்தான். அறுவடையாகி நெல் அவன் வீட்டுக்கு வந்தது. அந்த ஆண்டு அவன் வீட்டில் இன்பத் தீபாவளி..நம்பிக்கையற்ற மற்ற விவசாயிகள் வீட்டில்... கேட்கவே வேண்டாமே! அடுத்த ஆண்டு தீபாவளியை இனிமையாகக் கொண்ட கடுமையாக உழையுங்கள். சிக்கனமாக இருங்கள். நிறைய பணம் சேருங்கள். வெறும் ஆடைகள் மட்டுமல்ல! கார் கூட வாங்கலாம். ரிதானே! |
|
|
|