|
கோபத்தில் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. எதிராளிகளின் இடத்தில் இருந்து, யோசித்துப் பார்க்க வேண்டும். மருத்துவமனைக்குள் நுழைந்தேன். பார்வையாளர் அனுமதி நேரம் என்பதால், கூட்டம் அதிகம் இருந்தது. சரவணனின் அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தபோது, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன், தரையில் சிந்திக்கிடந்த எண்ணெயில் கால் வைத்து வழுக்கி கீழே விழுந்ததில், தலை தூணின் மீது விசையாக மோதியதில் ஏற்பட்ட காயம். பக்கத்தில் சரவணன் உட்கார்ந்திருந்தான். நான் நுழைந்ததைப் பார்த்ததற்கு அடையாளமாக தலையசைத்தான். நான் வாங்கிச் சென்றிருந்த சாத்துக்குடிகளை அங்கிருந்த சிறு பீரோவின் உள்ளே வைத்தேன். அம்மா எப்படி இருக்காங்க? டாக்டர் என்ன சொல்றார்? என்றேன். உயிருக்கு ஆபத்தில்லே. ரொம்ப தேங்ஸ்டா என்றான்.
நன்றிக்கான பின்னணி புரிந்தது. அம்மாவுக்கு உடனடியாக ரத்தம் செலுத்தப்படவேண்டும் என்றதும் நானும் சரவணனும்தான் ரத்தம் அளித்தோம். எனக்கு இந்த உறவுகளே வேணாம்னு தோணுது. அடுத்த தடவை பார்க்கும்போது, இதை வெளிப்படையாகவே சொல்லிடப் போறேன். சமுதாயத்தின் மேலேயே வெறுப்பா இருக்கு என்றபோது, அவன் கண்கள் சிவந்திருந்தன. நடந்தது தெரிந்திருந்ததாலும், ஏற்கனவே சரவணன் சிலவற்றைச் சொல்லியிருந்ததாலும், என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சரவணனுக்கு இரண்டு அண்ணன்கள்; ஒரு அக்கா. டெல்லியில் இருக்கும் பெரிய அண்ணன் இன்னும் அம்மாவைப் பார்க்க வரவில்லை. உயர் பதவி. அதனால், உடனடியாக வரமுடியவில்லையாம். தினமும் மூன்று முறை தொலைபேசியில் மட்டும் விசாரித்துக் கொண்டிருக்கிறானாம். பணம் தேவைன்னா தயங்காம கேளு என்ற அவனது பேச்சு, சரவணனின் கோபத்தை அதிகமாக்கி இருந்தது. இரண்டாவது அண்ணனின் மைந்துனனுக்குத் திருமணம். அதற்கான முக்கியத்துவம் அதிகமாகி விடவே, என்ன செய்யறது சரவணா, என் மனசெல்லாம் அம்மாகிட்டதான் இருக்கு. ஆனால், லலிதாவுக்கும் அண்ணன் தம்பி கிடையாது. அதனால் நானும் அவளும்தான் இந்தக் கல்யாணத்துக்கு எல்லாமே செய்ய வேண்டியிருக்கு. ரெண்டு நாளிலே வரேன் என்று மும்பையிலிருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறான்.
அக்காள் உடனடியாக கோவையிலிருந்து வந்துவிட்டாள். ஆனால், அவள் மகனுக்கு அரை இறுதித் தேர்வாம். நான் இருந்தால்தான் அவன் கொஞ்சமாவது படிப்பான். தவிர, அம்மாவையும்தான் ஐ.சி.யூ-வில் இருந்து வெளியே மாத்திட்டாங்களே! சனிக்கிழமை வரேன் என்றபடி கிளம்பிவிட்டாள். சரவணன் கொதித்துக்கொண்டிருந்தான். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாலேயே எங்க அப்பா காலமானது உனக்குத் தெரியும். எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களையெல்லாம் அம்மா வளர்த்திருப்பாங்க! அதுக்கு இவங்க காட்டற நன்றியைப் பார்த்தியா? இவங்க யாரும் இனிமே இங்க வரவேணாம்னு சொல்லிடப் போறேன் என்றான். எனக்கு ஏனோ அவனிடம் துஷ்யந்தனின் அணுகுமுறையைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. விசுவாமித்திரருக்கும், மேனகைக்கும் பிறந்தவள் சகுந்தலை. பிறந்த குழந்தையைப் பார்க்கக்கூட மறுத்துவிட்டார் விசுவாமித்திரர். மேனகை மீண்டும் தேவலோகம் சென்றுவிட்டாள். சகுந்தலையை வளர்த்தவர் கண்வ முனிவர். அவரது ஆசிரமத்தில்தான் சகுந்தலை வளர்ந்தாள். இளமைப் பருவத்தை அடைந்தாள்.
தவம் புரிவதற்காக கண்வ முனிவர் வேறிடத்துக்குச் சென்றிருந்தபோது, மன்னன் துஷ்யந்தன் மான் ஒன்றைத் துரத்தியபடி ஆசிரமத்தின் பக்கம் வந்தான். சகுந்தலையைக் கண்டவன், தான் வேட்டையாட வந்ததையே மறந்தான். இருவரும் காதல் கொண்டனர். கலந்தனர். விரைவில் முறைப்படி வந்து அவளை மணப்பதாகக் கூறிவிட்டு, நாடு திரும்பினான் துஷ்யந்தன். புறப்படுவதற்கு முன் தனது மோதிரம் ஒன்றை அவள் விரலில் அணிவித்தான். சகுந்தலை கர்ப்பம் அடைந்தாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். நடந்ததை அறிந்த கண்வர், சகுந்தலையையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு துஷ்யந்தனின் அரசவைக்குச் சென்றார். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சகுந்தலை கூற, நீ யார்? என்று கேட்டான் துஷ்யந்தன். துர்வாசரிடமிருந்து சகுந்தலை பெற்ற சாபத்தால், துஷ்யந்தன் சகுந்தலையை மறக்கும்படி நேர்ந்தது. கண்வர் நடந்ததை நினைவுபடுத்த, மன்னன் மறுத்தான். நான் சகுந்தலையை இதற்கு முன் சந்ததித்தே இல்லை என்றான். அவன் அளித்த மோதிரத்தை சாட்சியாகக் காட்டலாம் என நினைத்த சகுந்தலைக்கு அதிர்ச்சி! மோதிரத்தைக் காணோம். அவள் நதியில் குளித்தபோது, அந்த மோதிரம் கழன்று நதிக்குள் விழுந்துவிட்டிருந்தது.
இந்த நிலையில் மீனவன் ஒருவன் அந்த மோதிரத்துடன் அரசவைக்கு வந்தான். மன்னா, பெரிய மீன் ஒன்று என் வலையில் பிடிபட்டது. அதை வெட்டியபோது இந்த ராஜ மோதிரம் கிடைத்தது என்றான். மோதிரத்தைப் பார்த்ததும் துஷ்யந்தனுக்கு நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. கண்வரையும், சகுந்தலையையும் அரசவைக்கு வரவழைத்தான். இந்தச் சிறுவனின் தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டாயா? என்று அவன் கேட்க, சகுந்தலை மிகவும் கலங்கிப் போனாள். இதைக் கேட்கவா மன்னன் தன்னை மீண்டும் வரவழைத்தான்? எனத் துடித்துப்போனாள். அப்போது வானிலிருந்து ஓர் அசரீரி கேட்டது. துஷ்யந்தா, சகுந்தலை உன் மனைவிதான். உனக்கும் அவளுக்கும் பிறந்தவன்தான் இந்தச் சிறுவன். முனிவரின் சாபத்தால் இதை நீ மறக்க நேர்ந்தது. நீ சகுந்தலையை அரசியாக ஏற்பதுதான் நியாயம்! என்றது. உடனே, சிம்மாசனத்தில் இருந்து இறங்கி வந்த துஷ்யந்தன், கண்வரின் காலில் விழுந்தான். சகுந்தலையிடம் மன்னிப்பு கேட்டான். தன் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான். இந்தக் கதையைச் சொன்னதும் சரவணன் கோபம் கொண்டான். சரியான கிராதகனாக இருக்கிறானே! மோதிரத்தைப் பார்த்ததும் அவனுக்கு உண்மை விளங்கிவிட்டதே. அப்புறமும் எதற்காக அசரீரி சொல்லும் வரை தாமதித்தான்? என்று கேட்டான்.
அவனுக்கு இன்னும் தெளிவாக விளக்கினேன். ராஜசபையில், அத்தனைப்பேர் நடுவில் சகுந்தலையை தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறான் துஷ்யந்தன். மோதிரத்தைப் பார்த்ததும் நினைவு வந்துவிட்டதுதான். ஆனாலும், அக்கணமே சகுந்தலையை அவன் ஏற்றுக்கொண்டிருந்தால், மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? மன்னன் முதலில் பொய் சொல்லியிருக்கிறான். அவன் ஏமாற்றுக்காரன் என்று எண்ணி இருப்பார்கள். அல்லது சகுந்தலை யாருக்கோ பெற்ற பிள்ளையை பெருந்தன்மையாக நம் மன்னர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று யோசித்திருப்பார்கள். இந்த இரண்டுமே விரும்பத்தகாதவை. எனவே, இறைவனே சரியான தீர்ப்பளிப்பான் என்று காத்திருந்தான். அசரீரி வெளிப்பட்டதும், சகுந்தலையை சேர்த்துக்கொண்டான். இப்போது, புராணத்திலிருந்து நிதர்சனத்துக்குத் திரும்பினேன். கோபத்தில் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எதிராளியின் இடத்தில் இருந்து, யோசித்துப் பார்க்க வேண்டும். துஷ்யந்தன் கதையைச் சொன்னதும், அவன் மீது உனக்குக் கோபம் வந்தது. அதனால்தான் அவனது நிலைபாட்டை உனக்கு எடுத்துச் சொன்னேன். ஆக, உறவுகளையும் நட்புகளையும் கத்தரித்துக்கொள்ளக்கூடாது என்று கூறிமுடித்தேன். எப்போது கண் விழித்தார் என்று தெரியவில்லை. மெல்லிய குரலில் உன் நண்பன் சொல்றது உண்மைதான் சரவணா என்றார் சரவணனின் அம்மா. பாசத்துடன் அவர் கைகளைப் பற்றிக்கொண்டான் சரவணன். அவன் முகத்தில் இப்போது கோபம் இல்லை; புரிதல் இருந்தது. |
|
|
|