|
இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த மனிதன் ஒருவன், ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழுவைக் கண்டான். அந்தக் கூட்டுப்புழுவின் கூட்டில், ஒரு சிறு விரிசல் ஏற்படுவதைக் கவனித்தான். சில நிமிடங்கள் கழித்து அந்தக் கூட்டில் இருந்து வண்ணத்துப்பூச்சி ஒன்று வெளியே வர முயற்சிப்பதைப் பார்த்தான். அந்த வண்ணத்துப்பூச்சி சில மணி நேரங்களாக வெளியே வரப் போராடிக்கொண்டு இருந்தது. கருணை உள்ளம் கொண்ட அந்த மனிதன், ஓர் ஊசியை எடுத்து கூட்டின் துவாரத்தில் குத்தி அதைப் பெரிதாக்கி, வண்ணத்துப்பூச்சி வெளியே வர உதவி செய்தான்.
சில நொடிகளில், வண்ணத்துப்பூச்சி சுலபமாக வெளியே வந்தது. ஆனால், அதன் உடல் பெருத்திருந்தது. சிறகுகள் விரியாமல் உடம்போடு ஒட்டியிருந்தன. அது பறக்கமுடியாமல் கீழே விழுந்து, ஊர்வதற்கு முயற்சித்தது. வண்ணத்துப்பூச்சி பறந்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான் அந்த மனிதன். ஆனால், அது பறக்கவில்லை. பருத்த உடலுடன், சிறகுகள் விரியாமல் தரையில் தவழ்ந்துகொண்டுதான் இருந்தது. கூட்டுப்புழு பருவத்தில் உருவாகும் வண்ணத்துப்பூச்சி, தன் சுய முயற்சியால் கூட்டைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்போதுதான், அதன் வயிற்றுப் பகுதியிலுள்ள நீர் வெளியேறி, சிறகுகளுக்குச் சக்தி கிடைத்து, தானாகவே பறக்கும் திறன் கிடைக்கும். இது இறைவன் வகுத்த நியதி. அந்த வண்ணத்துப்பூச்சியானது தனக்குக் கிடைக்கும் புதிய பரிமாண வளர்ச்சிக்காகவும், சுதந்திரத்துக்காகவுமே போராடுகிறது என்பதை, பாவம் அந்த மனிதன் உணரவில்லை. |
|
|
|