|
ஞானி ஒருவரை அறிஞர் ஒருவர் மிகவும் புகழ்ந்து துதி பாடிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டு ஞானி மிக்க மகிழ்ச்சியோடு தலை யசைத்துக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஞானி, அறிஞரால் பாராட்டப்பட்ட ஞானியைப் பார்த்து, குருவே! நான் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவர் நம்மைப் புகழ்ந்து பேசுகிறார்கள் என்றால். அதைக் கேட்டு நாம் மகிழ்ந்துவிடக்கூடாது. மேலும் அவ்வாறு புகழ்வரைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதானே முறை? அதற்கு மாறாக அவர் புகழ்வதைக் கேட்டு நீங்கள் ஆனந்தம் கொள்கிறீர்களே. எப்படி? என்றார். அதற்கு அந்த ஞானி, நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான். ஆனால் நான் எந்த நேரமும் இறைவனுடன் லயித்து இருப்பதால், யார் என்னைப் பாராட்டினாலும் அது இறைவனையே பாராட்டுவது போல உணர்கிறேன். புகழ்ச்சி என்னைப் படைத்த இறைவனுக்குரியது. அதைக்கேட்டு நான் இன்புறக்கூடாதா? மேலும் ஒருவன் ஒரு புத்தகத்தைப் பாராட்டுகிறான் என்றால் அது உண்மையில் புத்தகத்தைப் பாராட்டினதாகாது. அதை எழுதியவனுக்குரிய பாராட்டுத்தான் அது! நான் புத்தகத்தின் நிலையில் இருந்து கொண்டுதான் பாராட்டுதல்களுக்கு மகிழ்ந்துகொண்டிருக்கிறேன். உண்மையில் அது படைத் தவனுக்குண்டான பாராட்டுத்தான். அவன் பாராட்டுவது என்னையல்ல. என்னிலுள்ள நல்ல தன்மை இறைவனைத்தான்!
|
|
|
|