|
ஞானி ஒருவரை சந்தித்த சீடன் ஒருவன், சுவாமி! நான் ஞானம் பெற தாங்கள் எனக்கு உபதேசியுங்கள்! என்றான். ஞானி அவனை வேறொரு குருவிடம் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார். அவனும் அப்படியே செய்து, ஏற்கனவே தான் சந்தித்த குரு கூறியதை அப்படியே கூறினான். உடனே அந்த குரு, இன்னொரு குருவை சந்திக்குமாறு கூறி அனுப்பினார். அவரும் வேறு குருவை சந்திக்குமாறு கூறி அனுப்பினார். இப்படியே பல குருமார்களைப் பார்த்த அவன் பொறுமை இழந்து, யார்தான் தனக்கு ஞான உபதேசம் செய்வார்கள்? என்பதைக் கேட்டுவிட, முதலில் சந்தித்த குருவிடமே வந்தான். கண்கள் சிவக்க கோபத்துடனேயே குருவிடம் பேசினான். அப்போது குரு, ஒருவனுக்கு ஞானம் ஏற்பட வேண்டுமானால் முதலில் பொறுமை தேவை. பலர் பலவிதமாகப் பேசுவதைப் பொறுமையாகக் கேள். இறுதியில் உனக்கு எது எது சரியானது என்பதை அறிந்து நடந்து கொள். அதுதான் ஞானம். குருவாகிய நாங்கள் எல்லோருமே ஞானம் பெறுவதற்காக தவம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். பிறரிடம் உபதேசம் பெற்று விடுவதால் மட்டும் ஞானம் கிடைத்துவிடாது. ஆதலால் முதலில் பொறுமையைப் பெற்று, அதன்பின் ஞானத்தைப் பெற முயற்சி செய்! என்றார். |
|
|
|