|
படித்து முடித்து விட்டு இளைஞன் குமரன் தன்னை படிக்க வைத்த பெற்றோரை எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பான். எனக்கென்று அப்பா என்ன வெச்சிருக்கிறார். பிள்ளையைப் பெத்தால் மட்டும் போதாது. நாலு காசு சேத்து வைக்க வேண்டாமா? என்பான். ஏண்டா! இப்படி கத்தறே! உன் கையும் காலும் நல்லாத்தானா இருக்கு! பட்டப்படிப்பு படிச்சிருக்கிறே! உழைச்சு முன்னேறு! என்று அறிவுரை சொல்வாள் அம்மா. அவன் காதில் அது ஏறாது. ஒருநாள் அவனுடைய தமிழாசிரியர் செழியன் வீட்டுக்கு வந்தார். குமரா! என் நண்பர் தணிகாசலம் இந்தப் பக்கம் குடிவந்திருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் வீடு எதுன்னு தெரியுமா? என்றார். ஆமாய்யா! இந்த தெருக்கடைசியிலே இருக்கிற வீட்டுக்கு புதுசா வாத்தியார் ஒருத்தர் குடிவந்ததா கேள்விப்பட்டேன். அவராக தான் இருக்கணும் என்று சொல்லி ஆசிரியரை அழைத்துச் சென்றான். செல்லும் வழியில் ஆசிரியர் குமரனின் வேலை பற்றி விசாரித்தார்.
ஐயா! படிப்பு முடிச்சு ஒருவருஷம் ஓடிவிட்டது. வேலை எங்க ஐயா கிடைக்குது! அதுவு மில்லாமல் எனக்குன்னு சொத்து சுகமா இருக்கு! என்று விரக்தியாகப் பேசினான். குமரா! நீ சொல்வது பெரிய தப்பு. உன்னால் எதையும் சாதிக்க முடியாததால் மற்றவர்கள் மீது கோபத்தைக் காட்டி மனநிம்மதி இழந்து தவிக்கிறாய். நான் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல். உனக்கு ஒருலட்சம் ரூபாய் தருகிறேன். அதற்குப் பதிலாக உனது கைகளை எனக்குத் தருவாயா? என்று கேட்டார். நல்லாச் சொன்னீங்க! பத்துலட்சம் கொடுத்தாலும் கைகளை எப்படித் தரமுடியும்! என்று பதில் கேள்வி கேட்டான். நீ தான் என்னிடத்தில் என்ன இருக்கு என்று சொன்னாயே. உடலில் குறையோடு இருப்பவர்களே மன உறுதியோடு உழைத்து வாழ விரும்பும்போது, இரண்டு கைகளையும், நல்ல உடலையும் கொண்ட நீ ஊர் சுற்றி பொழுதை வீணாக்குவது நியாயமா? நீயே உனக்கு மூலதனம் என்பதை மறந்து விடாதே. வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம் என்ற அறிவுரையை கேட்டதில்லையா? நம்பிக்கையோடு தீவிர முயற்சியில் இறங்கு. உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது, என்று நம்பிக்கையூட்டும் நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னார். அதற்குள் தணிகாசலத்தின் வீடு வந்துவிட்டது. வழிகாட்டிய உனக்கு நன்றி! என்றார் செழியன். குமரனோ, வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஆசிரியரின் கைகளை தன் மார்போடு அணைத்துக்கொண்டான். |
|
|
|