|
சுட்டெரிக்கும் பாலைவனம். தொண்டை எச்சிலைக் கூட காய வைக்கும் உஷ்ணம். சன் ஸ்ட்ரோக் வந்து விடுமோ என்ற பயத்துடன் உடலெல்லாம் அனலால் தகிக்கப்பட்டு நடக்க முடியாமல் வேலு திணறினார். கையிலிருந்த காலி நீர் பாட்டிலைத் தூக்கி எறிந்தார். உடன் வந்தவர்ளும் அங்கங்கே தவித்தபடி வருகிறார்கள். வேலு தன் மகன் குமார் பின்னே வருவதைக் கண்டார். திடீரென்று உஷ்ணக் காற்றுடன் கறுப்பாக மணற்புயல் வீசியது. வேலுவின் கண்ணிலும் மூக்கிலும் மணற்துகள்கள் புகுந்தன. ஆ, ஆ, இனி என்னால் ஓர் அடியும் எடுத்து வைக்க முடியாது என எண்ணியபடி வேலு தெப்பென்று சுடுமணலில் மயங்கிச் சாய்ந்தார். உடன் வந்தவர்கள் அவரை எழுப்பப் பார்த்தார்கள். காதில் பலமாகக் கத்தினார்கள் அவர்களுக்கும் மூச்சிரைத்தது. ஓடோடி வந்த குமார் தந்தையைத் தாங்கிக் கொண்டார், வேலுவின் நாக்கு வறண்டிருந்தது. உதடுகள் ஏங்கின ஈரத்துக்காக.
குமார் யாராவது கொஞ்சம் தண்ணீரை இவர் முக்ததில் மீது தெளியுங்கள். ஒரு வாய் நீர் அருந்தினால் மயக்கம் தெளிஞ்சுடும்... என்று கேட்டார். கெஞ்சினார். உடனிருந்த இருவரும் கைகளைச் சட்டென்று பின்னே இழுத்துக் கொண்டனர். அவர்களது பாட்டில்களில் மிகக் குறைவாகவே நீர் இருந்தது. குமார் கெஞ்சியும் அவர்கள் தலைகுனிந்தபடி நின்றார்கள். இதை இவருக்குத் தந்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது? இன்னும் இரண்டு கி.மீ நடக்க வேண்டுமே? என்று நினைத்தார்கள். ஒரு துளி நீர் கிடைக்காத அவலத்தைப் பார்த்து குமார் ஓ வென புலம்பினார். அப்பா ஊர்லே தண்ணீர் பந்தல் வச்சி எல்லோருக்கும் தந்த நம் பரம்பரைக்கா இந்தக் கஷ்டம்? உங்கள காப்பாத்த ஒரு துளி தண்ணி கூட இல்லாம போச்சே... அப்போது அவனது கண்ணீரும் நெற்றி வியர்வையும் சேர்ந்து துளித் துளியாக வேலுவின் முகத்தில் சிந்தின. அப்பா...... எழுந்திருங்கப்பா.....
மகனே, மகனே..... சட்டென்று எழுந்த வேலு தலையில் நங் என்று இடித்துக் கொண்டார். ரயிலில் நடு பர்த்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இரவு 12 மணி. சே, என்ன ஒரு கெட்ட கனவு, வேலுவுக்கு அந்த ஏ.சி.கோச்சிலும் உடலெல்லாம் தலையைத் தேய்த்தபடி சுயநினைவுக்கு வந்தார் வேலு. மெல்லிய இருட்டு, சிரமப்பட்டு இறங்கினார். சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தார். ஒரு துளி நீர்கூட கிடைக்காத கொடுமை எனக்கு ஏன் வந்தது? வேலுவிற்குச் சட்டென ஏதோ தெளிவானது. இருட்டில் செருப்பைத் தேடினார். தட்டுத் தடுமாறி பாத்ரூமில் நுழைந்தார். அங்கே நீர்க்குழாயைச் சரியாக மூடாமல் நீர் வீணாகக் கொட்டிக் கொண்டிருந்தது. 10 மணிக்கே இதைக் கவனித்தார். ஆனால் அப்போது இது என் வீட்டு நீரில்லையே என்று அலட்சியமாக இருந்துவிட்டார். அதனால் வந்த விளைவோ அந்தக் கனவு? குழாயைச சரியாக மூடினார். ஓர் அழும் குழந்தையின் கண்ணீரைத் துடைத்த திருப்தி அவருக்கு, அதன் பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் கண்ணை மூடினார். ஆனால் அந்த நீர் விரயத்தைக் கண்டும் காணாமல் மற்றவர்கள் தூங்கிக் கிடந்தார்கள். வேர்களற்ற மரங்களாக! ஈரமற்ற, காய்ந்த கட்டைகளாக! வேலுவுக்குக் கனவில் நடந்தது வேறு மனிதர்களுக்கு நேரில் நடக்க வாய்ப்பு உள்ளதுதானே? |
|
|
|