|
சாமிநாதன் அம்பாளின் பக்தர். தினமும் ஏதாவது அம்பாள் கோயிலுக்குப் போவார். பாவம்... குழந்தை தான் இல்லை. அவர் அம்பாளிடம்,அம்மா! எனக்கு குழந்தை இல்லை. நீ நினைத்தால் உடனே என் மனைவி கர்ப்பவதியாகி விடமாட்டாளா? மனம் வை, என்று உருக்கமாக வேண்டுவார். அந்த நல்லநாளும் வந்தது. சாமிநாதனின் உருக்கமான பிரார்த்தனைக்கு மனமிரங்கிய அம்பாள், தானே அவருக்கு மகளாகப் பிறக்க உத்தேசித்தாள். சாமிநாதனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பகவதி என பெயர் சூட்டி வளர்த்தார். செல்லப்பெயராக தேவி என்று அழைப்பார். தேவி படுசுட்டி. கேள்வி கேட்பதில் அவளை மிஞ்ச ஆளில்லை. பொதுவாகக் குழந்தைகள், பெற்றவர்கள் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட, வழக்கம் போல கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் அந்த மழலையில் மகிழ்ச்சியடையும் பெற்றோர் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்வார்கள். சமயங்களில் எரிச்சலுடன் இருந்தால்,சனியனே, வாயை மூடிக் கொண்டு போய் தொலையேன், என்பார்கள். சாமிநாதன் பொறுமைசாலி தான். மகள் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதிலளிப்பார். மகளின் மழலை கேட்டு மகிழ்வார். ஒருநாள், ஏதோ கடும் பணியில் இருந்தவர், போய் அந்த குளத்தில் விழுந்து தொலையேன்! உன் கேள்விக்கு பதில் சொல்ல நேரமில்லை, என்று எரிந்து விழுந்தார். குழந்தைக்கு என்ன தெரியும்! நேற்று வரை என்ன கேட்டாலும் அப்பா சரியாகப் பதில் சொல்வார்! இன்று குளத்தில் விழச்சொல்லி விட்டாரே! குழந்தை மடமடவென தண்ணீரில் இறங்கி விட்டாள். அவளை சாமிநாதன் இழந்து விட்டார். குழந்தைகள் பெரியவர்களிடம் நிறைய கேள்விகளுக்கு பதில் எதிர் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுமையுடன் கையாள பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். |
|
|
|