|
கிருஷ்ணன் என்ற சிறுவன் தினமும் ஒரு காட்டுவழியைக் கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்து மூன்று மைல் நடக்க வேண்டும். அதில் ஒரு மைல் வரை கடும் காடு. ஆள் நடமாட்டம் பெயருக்கே இருக்கும். அவன் பயந்துகொண்டே அவ்வழியைக் கடப்பான். ஒருநாள், காட்டு விலங்குகள் சில வழியில் நின்றன. கிருஷ்ணனுக்கு கை கால் உதறியது. அவன் ஒரு புதரருகே பதுங்கி நின்றான். அவை சென்று விட்டன. சற்று தூரம் நடந்தான். திடீரென சுழற்காற்று ஊவென்ற சப்தத்துடன் வேகமாக அடித்தது. கிருஷ்ணனின் பயம் அதிகரித்தது. காட்டுக்குள் பேய்களின் மத்தியில் இருப்பது போன்ற உணர்வு. எப்படியோ, அன்று பள்ளி போய்விட்டு திரும்பி விட்டான். அம்மா! அந்தப் பள்ளிக்கு நான் இனி போகமாட்டேன். காட்டுப்பாதையில் தினமும் பயப்படும் படியான சம்பவங்கள் நடக்கின்றன, என்றான்.
கிருஷ்ணா! உனக்கு ஏன் இந்தப் பெயர் வைத்தேன் தெரியுமா? நீ பயப்படக்கூடாது என்பதால் தான்! கிருஷ்ணனை கண்ணன் என்றும் சொல்வார்கள். அந்தக் கண்ணன் தன் சிறுவயதில் கோகுலத்தில் செய்யாத சாகசங்களே இல்லை. குழந்தையான அவன், காளிங்கன் என்ற பாம்பின் மீது கூட ஏறி நின்று அதை அடக்கினான். உனக்கு பயமாயிருந்தால் இனி கண்ணா என்று கூப்பிடு. அவனே உன் வழித்துணைக்கு வருவான், என்றாள் அம்மா. மறுநாளும் இதுபோன்றே காட்டில் சம்பவங்கள் நடக்கவே அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. கண்ணா வா! கண்ணா வா என்று பலம் கொண்ட மட்டும் கத்தினான். கண்ணனின் காதுகளில் இது விழுந்துவிட்டது. அவனே நேரில் வந்தான். காட்டுப்பாதையைக் கடக்கும் வரை சென்று உதவினான். அவனைத் தைரியப்படுத்த பல கதைகளைச் சொன்னான். அதன்பிறகு கிருஷ்ணனே தைரியசாலியாகி விட்டான். குழந்தைகளுக்குச் சொல்லும் நல்ல கதைகள் இறைவனைக் கூட அவர்கள் அருகே அழைத்து வருகின்றன. |
|
|
|