|
தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த குரு ஒருவருக்கு, தனக்குப் பின் ஆசிரமத்தை யார் பொறுப்பில் விட்டுச் செல்வது என்ற மனக்கவலை ஏற்பட்டது. ஆசிரமத்திற்கு தலைமை ஏற்க தகுதியானவர் யார் என்பதைக் கண்டறிய சீடர்களுக்கு பலகட்ட தேர்வுகள் வைத்தார். அதில் அவர்கள் சரிநிகர் சமமாகவே விளங்கினர். குழப்பத்தில் இருந்த குரு, தன் முதன்மைச் சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். உங்கள் ஒவ்வொருவரிடமும் இரு ரொட்டித் துண்டைக் கொடுத்து சாப்பிடச் சொன்னால், எப்படிச் சாப்பிடுவீர்கள்? பாலுடன் சாப்பிடுவேன் என்றான் ஒருவன். தேன் கலந்து சாப்பிடுவேன்! என்றான் மற்றொருவன். நான் வெண்ணெய் தடவி சாப்பிடுவேன் சுவாமி! என்றான் இன்னொரு சீடன். எஞ்சியிருந்த கடைசிச் சீடன் சொன்னான். குருவே நான் எனக்களித்த ரொட்டியை உடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து உண்பேன் என்றான். மகிழ்ந்த குருநாதர், தனக்குப் பின் இவனே குருகுலத் தலைமை ஏற்கத் தகுதியானவன் என்பதை உணர்ந்து ஆசி வழங்கினார். |
|
|
|