Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பராசரன் பெருமை
 
பக்தி கதைகள்
பராசரன் பெருமை

மாமுனிவரான வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் எப்போதுமே பிடிக்காது. ஒருமுறை இந்திரசபையில் அவர்களிடையே பெரிய விவாதம் ஏற்பட்டது. உலகத்தில் உள்ள மனிதர்களில் சத்தியம் தவறாதவர் யாருமே இல்லை. எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் சத்தியம் தவறியவர்களாகவே இருக்கிறார்கள் என வாதிட்டனர். இந்த கருத்தை வசிஷ்டர் ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னுடைய சிஷ்யனான அரிச்சந்திரன் இந்த உலகிலேயே மிகப்பெரிய சத்தியவான் என அவர் வாதிட்டார். இதை சோதித்துப்பார்க்க வேண்டும் என விஸ்வாமித்திரர் கூறினார். இதன் காரணமாக அரிச்சந்திரனுக்கு பல்வேறு துன்பங்கள் ஏற்பட்டன. தனது மனைவி, குழந்தையைக் கூட பிறரிடம் விற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அவன் ஆளானான். ஆனால் கடைசிவரை சத்தியம் தவறாமலேயே வாழ்ந்தான். இந்திரசபையில் சபதம் செய்தபடி வசிஷ்டர் தன்னுடைய சபதத்தில் வெற்றி பெற்றார். இதனால் விஸ்வாமித்திரர் வசிஷ்டர் மீது மேலும் கோபமடைந்தார். வசிஷ்டரை மட்டம் தட்டியே தீருவதென கங்கணம் கட்டினார். அவரது உள்ளத்தில் பொறாமை தீ எரிந்தது. வசிஷ்டரை தொலைத்துக்கட்ட ஆபிசாரவேள்வி ஒன்றை ஆரம்பித்தார். இந்த வேள்வியின்போது கொடிய மந்திரங்கள் உச்சரிக்கப்படும். சாதரணமான வேள்விகளில் மங்கலப்பொருட்களே அக்னியில் ஆகுதி செய்யப்படும். ஆனால் ஆபிசார வேள்வியில் அமங்கலப் பொருட்கள் ஆகுதி செய்யப்படும். விஸ்வாமித்திரர் அமங்கலப் பொருட்களை ஆகுதி செய்து வசிஷ்டரின் புகழை அழிக்க வேள்வியை நடத்திக் கொண்டிருந்தார். அந்த வேள்வி அவருக்கு பயனையும் கொடுத்தது. வேள்வித்தீயிலிருந்து பயங்கர பூதம் ஒன்று உருவானது. அந்த பூதத்தை வசிஷ்டர் மீது ஏவி அவரை கொன்றுவிடும்படி விஸ்வாமித்திரர் உத்தரவிட்டார். விஸ்வாமித்திரரின் கட்டளையை ஏற்று வசிஷ்டரின் பர்ணசாலைக்கு பூதம் சென்றது. அப்போது அங்கு வசிஷ்டர் இல்லை. அவரைப்போலவே உருவம் கொண்ட ஒரு முனிவர் உறங்கிக்கொண்டிருந்தார். அவர் இள வயதுக்காரராக இருந்தார். பூதத்திற்கு குழப்பம் உண்டாகிவிட்டது. தன்னை திசைதிருப்ப வசிஷ்டர் இளமை வடிவம் பூண்டு அங்கு உறங்கிக் கொண்டிருப்பதாக பூதம் கருதியது. அந்த இளம் முனிவரை வசிஷ்டர் என்றே நினைத்து பூதம் கொன்றுவிட்டது.

சற்றுநேரத்தில் வசிஷ்டர் பர்ணசாலைக்கு திரும்பிவந்தார். அங்கே தன் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு ஆத்திரம் கொண்டார். யாரோ அவனைக் கொன்றிருப்பது தெரியவந்தது. வசிஷ்டரின் மகனான சத்திமுனிவருக்கு வசிஷ்டரைப் போலவே சாயல் உண்டு. அவரைத்தான் பூதம் கொன்றுவிட்டது. வசிஷ்டருக்கு ஒரே மகன்தான். தனது வம்சம் தழைக்க வழியில்லாமல் போய்விட்டதே என அவர் வருத்தப்பட்டார். அவனைக் கொன்றது யார் என்பதும் அவருக்கு புரியவில்லை. அவர் அழுது புலம்பிக்கொண்டிருக்கும் போது சக முனிவர்கள் அவரை தேற்றினர். அவரது சோகத்தை தாங்கமுடியாத பிரம்மனும் அங்கு வந்தார். நடந்த விஷயத்தை வசிஷ்டரிடம் எடுத்து கூறினார். அவரது வம்சம் அழியாமல் இருக்கும் வகையில் சத்திமுனிவரின் மனைவி கர்ப்பமாக இருப்பதை எடுத்துக் கூறினார். அதன்பிறகே வசிஷ்டருக்கு திருப்தி ஏற்பட்டது. தனது மருமகளை அவர் கண்போல பாதுகாத்தார். மருமகளின் வயிற்றிலிருக்கும் கருவிற்கு கேட்கும்படியாக, வேத மந்திரங்களை சொல்லி வந்தார். தாயின் வயிற்றிற்குள் இருந்த அந்த குழந்தை வேத மந்திரங்களை கேட்டு கேட்டு பெரும் ஞானம் பெற்றது. ஆண் குழந்தையாக உலகில் அவதரித்தது. அதற்கு பராசரன் என பெயரிட்டனர். பராசரன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கினான். வளர்ந்தபிறகு தனது தந்தைக்கு ஏற்பட்ட அநியாயத்தை அறிந்தான். எனவே பூதகணங்களை எல்லாம் கொன்று தீர்ப்பது என்று முடிவு செய்தான். தனது தாத்தாவிடம் விடைபெற்று ஊர் ஊராக சென்று பூதங்களை அழித்தான். அவனது ஒரே நோக்கம் அநியாயமாக கொல்லப்பட்ட தனது தந்தையை உயிர்பிழைக்க வைத்து தாயை மீண்டும் சுமங்கலியாக்க வேண்டும் என்பதுதான். அதற்காக உலகம் முழுவதும் சுற்றி அலைந்தான். அவனுக்கு வழி ஏதும் தெரியவில்லை. இறுதியாக சிலமுனிவர்களை சந்தித்து இறந்தவர்களை உயிர் பிழைக்க வைக்க ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டான். யாருக்கும் எதுவும் சொல்லத் தெரியவில்லை.

ஒருமுறை இறந்தவன் திரும்பவும் பூமிக்கு வந்தால் உலகம் தாங்காது என்ற நியதிக்கு உனது தந்தையும் விதிவிலக்கல்ல, என்றே எல்லோரும் கூறினர். இறுதியாக அவன் திருவானைக்காவல் என்னும் தலத்திற்கு வந்தான். அந்த கோயிலில் இருக்கும் சிவபெருமானை மனப்பூர்வமாக பூஜித்தான். கண்ணீர் பூக்களால் அர்ச்சனை செய்தான். தனது தந்தை அநியாயமாக கொல்லப்பட்டதால் அவருக்கு மீண்டும் உயிர்தர வேண்டும் என்றும், தனது தாய் விதவையாக இருப்பதை தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் சிவபெருமானிடம் விண்ணப்பித்தான். பொதுவாக கொலை செய்யப்படுபவர்களோ, தற்கொலை செய்து கொள்பவர்களோ பூமியில் பேயாக அலைவார்கள் என்றும் அவர்களது ஆத்மா சாந்தியடையாது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. பராசரனின் தந்தை சத்தி முனிவரும் இதே போல பேய் உருவில் அலைந்து கொண்டிருந்தார். பராசரன் செய்த சிவபூஜையின் காரணமாக மீண்டும் தனது உடலை அடைந்து உயிர்பெற்றார். பராசரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். தந்தையை அழைத்துக்கொண்டு தாயிடம் வந்து அவரது கையாலேயே தாய்க்கு மங்கலப்பொட்டு வைக்கச் செய்தான். சத்தி முனிவரும் தன்னைக் கொன்ற பூத இனத்தை அழிக்க முடிவு செய்தார். திருவானைக்காவல் கோயிலின் ஒரு பகுதியில் வேள்விக்கூடம் அமைத்து மாபெரும் யாகம் ஒன்றை செய்தார். அந்த தீயில் உலகிலுள்ள அனைத்து பூதகணங்களும் விழுந்து உயிரை விட்டன. அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான நிருதி பகவானை மட்டும் சத்திமுனிவரால் அழிக்க முடியவில்லை. ஆனாலும் அவன் வேள்வித்தீயினால் மிகவும் துன்பப்பட்டான். அவன் திருவானைக்காவல் ஈஸ்வரரை வணங்கி தன்னைக் காக்கும்படி வேண்டினான். அந்தப் பூதகணத்தை மட்டும் விட்டுவிடும்படி ஈஸ்வரன் சத்திமுனிவருக்கு உத்தரவிட்டான். அதன்படியே நிருதி காப்பாற்றப்பட்டான். பூதத்தின் மீது கூட இறைவன் பச்சாதாபம் கொண்டதால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு பச்சாதாபேஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar