Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சந்திர சாபம்
 
பக்தி கதைகள்
சந்திர சாபம்

பிரம்மலோகத்தில் நான்முகனான பிரம்மா தன்னை மறந்தநிலையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த நேரத்தில் மிக பயங்கரமான சிரிப்பொலியுடன் அரக்கன் ஒருவன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். அவனைக்கண்டு தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். வந்தவனின் நோக்கம் பிரம்மதேவர் வசம் இருந்த வேதங்களை அபகரித்துச் செல்லவேண்டும் என்பதுதான். பிரம்மன் தியானத்தில் இருந்ததால் அசுரனுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. அவன் நேராக பிரம்மதேவர் வேதங்களை வைத்திருந்த இடத்திற்குள் புகுந்து அவற்றை தூக்கி சென்றான். அவனைத் தடுப்பார் யாருமில்லை. எதிர்த்துவந்த ஒரு சிலரையும் அடித்ததில், அவர்கள் மூர்ச்சையாகிவிட்டனர்.தியானம் கலைந்து எழுந்தார் பிரம்மா. நடந்த விஷயத்தை அறிந்தார். வேதங்களை மீட்பது எப்படி என்று யோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு ஸ்ரீமன் நாராயணனின் நினைவுதான் வந்தது.நேராக வைகுண்டத்திற்கு சென்றார்.லோகநாயகனே! பரந்தாமா! உன்னிடம் ஒரு உதவி கேட்டு வந்துள்ளேன். அரக்கன் ஒருவன் பிரம்மலோகத்திற்குள் புகுந்து வேதங்களை அபகரித்துச் சென்றுவிட்டான். தாங்கள்தான் அதை மீட்டுத்தர வேண்டும், என்றார் பணிவுடன். வைகுண்டவாசனான நாராயணன், பிரம்மனே! கவலை வேண்டாம். நடந்ததை நான் அறிவேன். இதற்கு முந்தைய கல்பத்தில் சத்திய விரதன் என்ற அரசன் என்னிடம் உளப்பூர்வமான பக்தி வைத்திருந்தான். அவன் மூலமாக உனது வேதங்களை மீட்டுத்தருவேன், என்றார். சத்தியவிரதன் ஒரு ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தான். ஆற்றுநீரை இரண்டு கைகளாலும் அள்ளியபோது கையில் மீனாக மாறி சிக்கிக் கொண்டார். நாராயணன். கருணை மிக்க அவன் மீனின் வாழ்க்கையோடு விளையாடாமல் மீண்டும் தண்ணீரிலேயே விட்டுவிட்டான். அப்போது அந்த மீன், உன்னைப்போன்ற கருணை குணம் உள்ளவர்களிடமே நான் வசிக்க விரும்புகிறேன்.

நீ என்னை நதியில் விடவேண்டாம். உன்னோடு அழைத்துச்செல், என்றது. அரசனும் செவிசாய்த்தான். தனது கமண்டலத்தில் தண்ணீருடன் சேர்த்து மீனையும் எடுத்துக் கொண்டான். அரண்மனைக்கு சென்று ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மீனை போட்டுவிட்டான். மீன் வளர்ந்து. காண்டே இருந்தது. எனவே அதை தன் நாட்டிலுள்ள குளம், குட்டைகளில் விட்டு வளர்த்து வந்தான். அது இன்னும் பெரிதானதால் வேறு வழியின்றி கடலில் சேர்த்தான். மீன் கடலின் ஆழத்திற்குள் சென்றது. அங்கே வேதங்களை கவர்ந்து சென்ற அசுரன் அமர்ந்திருந்தான். அவனது பெயர் ஹயக்ரீவன். அவனைக் கொன்று, வேதங்களை எடுத்து வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தது.வேதத்தை தேடிச் சென்ற பிரம்மன் நீண்ட நாளாக வராததால் கவலை அடைந்த அவரது மனைவி சரஸ்வதி தேவி, வேதங்களை மீட்டுத்தருவதற்கு யாரை அணுகலாம் என்ற யோசனையில் இருந்தபோது, ஆதிமூலமான கணபதியே இந்த காரியத்தை செய்ய இயலும் என கருதினாள். கணபதியை துதித்தாள். விநாயகப் பெருமானும் சரஸ்வதி தேவி முன்பு காட்சி கொடுத்தார். சரஸ்வதி தேவி மகிழ்ச்சி அடைந்தாள்.விநாயகப் பெருமானே! எனது கணவர் வைத்திருந்த வேதங்களை ஒரு அரக்கன் தூக்கிச் சென்றுவிட்டான். அதை அவர் தேடிச் சென்றுள்ளார். அந்த வேதங்கள் அனைத்தையும் நான் படித்திருக்கிறேன். எனவே அவற்றை நான் மீண்டும் சொல்கிறேன். நான் சொல்ல சொல்ல நீ அதை எழுதித்தர வேண்டும், என வேண்டினாள். விநாயகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.தாயின் கட்டளையை நிறைவேற்றுவது பிள்ளையான எனது கடமை. நீங்கள் சொல்லச்சொல்ல நான்விரைவாக எழுதுகிறேன். ஒரு நன்னாளை குறியுங்கள், என்றார். அதன்படி வேதம் எழுதுவதற்குரிய நாள் குறிக்கப்பட்டது. சரஸ்வதி தேவி விநாயகருக்கு மணை இட்டாள். அதில் விநாயகரை அமர்த்தி, பாலாலும், சந்தனத்தாலும், இளநீராலும், பஞ்சாமிர்தத்தாலும், தயிராலும், விபூதியாலும் அபிஷேகங்கள் செய்தாள். விநாயகர் சின்னக்குழந்தை என்பதால் அவருக்கு பிரியமான மோதகம், அதிரசம், முறுக்கு, சீடை ஆகிய தின்பண்டங்களை கொடுத்து மகிழச் செய்தாள்.

குழந்தை விநாயகர் வேதத்தை எழுதாமல், தனது மூஞ்சூறு வாகனத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார். சரஸ்வதி, அவரிடம், வேதத்தை விரைவாக எழுதவேண்டும், உடனே வா என்று அவரது கவனத்தை தன்பக்கம் திருப்பினாள். தாயே! வேதத்தை நான் எழுதப்போவது உறுதி. அதற்கு முன் உங்கள் சத்தியலோகத்தை ஒருமுறை சுற்றிப்பார்க்க வேண்டும். சுற்றிவந்தவுடன் நிச்சயமாய் வேதத்தை எழுதி விடுவேன். ஒரே நாளில் என் பணி முடிந்துவிடும். தாங்கள் கவலைப்பட வேண்டாம், என பணிவுடன் சொன்னார். என்னதான் இருந்தாலும் விநாயகர் குழந்தைதானே! எனவே சரஸ்வதி சத்தியலோகத்தை சுற்றிவர விநாயகருக்கு அனுமதி அளித்தாள். மூஞ்சூறு மீது ஏறி அமர்ந்து விநாயகர் சத்தியலோகத்தை சுற்றிக் கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஒரு நாகப்பாம்பு எதிரே வந்தது. அதைக்கண்டு மூஞ்சூறு பயந்து ஓட ஆரம்பித்தது. ஆனைமுகம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு மீதிருந்து கீழே தவறி விழுந்துவிட்டார். உடனே எதிரே வந்த சந்திரன் இதைப்பார்த்து கலகலவென நகைத்தான். கைகொட்டி கேலிசெய்தான். விநாயகருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. எனது உருவத்தையும் மூஞ்சூறிலிருந்து நான் கீழே விழுந்ததையும் பார்த்து சிரித்த நீ, இனி உலகத்தில் இருக்கக் கூடாது, என்றவராய், தனது வலது கொம்பை முறித்து சந்திரன் மீது எறிந்தார். சந்திரன் இறந்து விட்டான். இதனால் உலகமே இருண்டு போயிற்று. தேவர்கள் அனைவரும் விநாயகரை நோக்கி ஓடிவந்தனர். விநாயகா! சந்திரனின் ஒளியில்லாமல் இவ்வுலகம் சிரமப்படும். நீ தயவு செய்து மனம் பொறுத்து, சந்திரனை மீண்டும் எழச் செய்ய வேண்டும் என்றனர். உலகில் ஊனமாக பிறந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து யாரும் நகைக்கக்கூடாது. அவர்களுக்கு ஆதரவாக இருந்து, ஊக்கப்படுத்த வேண்டும். சந்திரன் என் உருவத்தைக் கண்டு கேலி செய்தான். அதன் பலனையே அனுபவித்துக் கொண்டிருக்கிறான். உலகத்திற்கு இவன் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இவன் 15 நாட்கள் வளர்ந்துகொண்டே இருப்பான். அதன்பிறகு தேய்ந்துகொண்டே வருவான். ஒரு நாள் முழுமையாக மறைந்து விடுவான், என்றார். ஊனமுற்றவர்களை இனியாவது கேலி செய்யாமல் இருங்கள். சந்திரன் பெற்ற சாபம் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar