|
திப்புலபட்டினம் கடற்கரை கிராமத்தில் வசித்தவன் வெங்கடாராயன். கடலுக்கு சென்று மீன்பிடிப்பது இவனது பணி. கட்டுமரத்தில் ஏறி ஒரு இரவில் புறப்பட்டால், இரண்டு, மூன்று நாள் கழித்துதான், கரைக்கு திரும்புவான். இவனது மனைவியும், குழந்தைகளும் இவன் திரும்பும் நாளில், கடற்கரைக்கு வந்து விடுவார்கள். ஒருமுறை இவன் கடலுக்கு சென்றிருந்தான். வலையை கடலில் வீசியதும், ஏதோ கனமான பொருள் சிக்கியது. ஆஹா! இன்று சரியான வேட்டை தான். வலையில் சிக்கிய மீன் மிகக்கனமாக இருக்கிறது. இதை விற்றால், மனைவி கேட்கும் நகைகளையும், குழந்தைகளுக்கு பண்டிகைக்கு நல்ல துணிமணிகளும், தின்பண்டங்களும் வாங்கித்தரலாம் என கற்பனை செய்தான் வெங்கடாராயன். வலையை வேகமாக இழுத்தான். படகில் தூக்கில் போட்டான். வலையில் மீனுக்கு பதிலாக ஒரு பெரிய பெட்டி சிக்கி இருந்தது. கடலுக்குள் இந்த பெட்டி எப்படி வந்தது? இவ்வழியாகச் சென்ற கப்பலில் இருந்து தவறி விழுந்திருக்குமோ? சரி..சரி...என்ன தான் இருக்கும் என பார்த்து விடுவோமே? என மனதில் நினைத்தவனாய், பெட்டியை திறக்க முயன்றான். ஒரு இரும்புத்தடியை எடுத்து பூட்டை உடைத்தான்.பெட்டியை திறந்ததும், அவன் முகம் அதனுள் இருந்த பொன்மணி மாலைகளைப் போல மின்னியது. அத்தனையும் தங்கை, வைர, வைடூரிய நகைகளா, ஐயோ! யாரோ ஒரு செல்வந்தர் இதை தவற விட்டு விட்டாரே! இதை அவரிடம் எப்படி ஒப்படைப்பது? என சிந்தித்தான். நட்ட நடு கடலுக்குள் யாரிடம் யோசனை கேட்பது? சக நண்பர்களும், ஏற்கனவே கரைக்கு போய் விட்டார்கள்.
வெங்கடாராயன், நகைப் பெட்டியுடன் வீட்டுக்கு வந்து விட்டான். அவனது மனைவி, குழந்தைகள், இப்பொருள் நமக்கு வேண்டாம். செல்வம் அதிகமுள்ள வீட்டில் நிம்மதி இருக்காது. இதை நம்நாட்டு அரசரிடம் ஒப்படையுங்கள். அவர் உரியவரைக் கண்டுபிடித்து ஒப்படைப்பார், என்றனர். அவனும் பெட்டியுடன் அரண்மனைக்குச் சென்றான். வழியில் ஒரு வண்டியில் இளைஞன் வந்தான். அண்ணா! தாங்கள் பெட்டியுடன் வேகாத வெயிலில் எங்கே செல்கிறீர்கள். பெட்டியை வண்டியில் ஏற்றுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்து விடுகிறேன், என்றான். வெங்கடாரயனும் வண்டியில் ஏறினான். சற்றுதூரம் சென்றதும், வண்டி அரண்மனை பாதையை விட்டு விலகி, காட்டுப்பகுதிக்குள் சென்றது. வெங்கடராயன் அலறினான். ஏய்! வண்டியோட்டி! எங்கே போகிறாய். நான் அரண்மனைக்கு வண்டியைக் கொண்டு போகச் சொன்னால், நீ எங்கோ போகிறாயே, என்றான். வண்டி நின்றது. மீனவனே! வாழ்க்கையை அனுபவித்து வாழவே கடவுள் நம்மைப் படைக்கிறார். செல்வத்தை அதற்காகவே படைத்திருக்கிறார். உன் பெட்டியில் ஏராளமான பொருள் உள்ளதை நான் அறிவேன். அறியாமையால், அதை அரசனிடம் ஒப்படைக்கச் செல்கிறாய். இந்தப் பொருள் வீட்டிற்கு வேண்டாம் என்றால், அதை அனுபவித்து காலி செய்து விடு. பொருளைச் சேர்ப்பது தான் சிரமம். செலவழிப்பது மிகவம் எளிது. இப்பொருளை ஆனந்தமாக செலவிடு. உன்னோடு என்னையும் சேர்த்துக் கொள், என்றான். ஏற்கனவே சபலத்தில் இருந்த வெங்கடாராயன் இதற்கு சம்மதித்தான். சற்று தூரம் சென்ற வண்டி, ஒரு வீட்டின் முன்பு நின்றது. வண்டிச்சத்தம் கேட்டதும், ஒரு பெண் அந்த வீட்டின் உள்ளிருந்து வெளிப்பட்டாள். ராஜகுமாரி போல காட்சி தந்தாள். வண்டியோட்டி வெங்கடராயனிடம், அண்ணா! நீ பெட்டியில் பெரும்பொருள் வைத்திருக்கிறாய் என எனக்கு தெரியும். இதை அரசனிடம் ஒப்படைக்க நீ போய்க் கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரு ஆசை. இதோ! இவள் ஒரு தாசி. இவளது நடனத்தை காண வேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்ட நாளாக இருக்கிறது. இங்கே இன்னும் பல தாசிகள் உள்ளனர். அவர்கள் ரம்பை, ஊர்வசியையும் மிஞ்சுபவர்கள். வா! நீயும் இவர்களின் நடனத்தைப் பார். பெட்டியிலிருந்து ஒன்றிரண்டு நகைகளை இவர்களுக்கு கொடுத்தால் போதும். மீதியை அரசனிடம் ஒப்படைத்து விடுவோம், என்றான். இதற்குள் தாசிப்பெண்கள் பலர் அவனைச் சூழ்ந்தனர். அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
வெங்கடராயனும் மனிதன் தானே! எத்தனையோ நாள் கடலுக்குள் சென்றிருக்கிறோம். வருவது கைக்கும், வாய்க்கும் சரியாகி விடுகிறது. இதுமாதிரி கேளிக்கைகளை அனுபவிக்க பணக்காரர்களால் மட்டுமே முடிகிறது, எனக்கருதியவன், அந்தக் கணிகையருடன் சந்தோஷமாக பொழுதைப் போக்கினான். அவர்களின் ஆடல், பாடல்களை ரசித்தான். பொழுது விடிந்தது கூட தெரியாமல், அவன் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவனிடமிருந்த பெரும் பொருளை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கத்தில், கணிகையர் அவனுக்கு அளவுக்கதிகமாக மது புகட்டி மயக்கமடையச் செய்தனர். அன்று பகல் முழுவதும் அங்கேயே தங்க வைத்தனர். மாலையில் ஒரு வியாபாரி அங்கே வந்தான். அவன் அடிக்கடி அங்கு வருபவன் என்பதால், வரவேற்பு தடபுலாக இருந்தது. அவன், வெங்கடராயன் தங்கியிருந்த அறையைக் கடந்தான். அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டான். எந்த பெட்டியை கடலில் தவறவிட்டானோ, அந்தப் பெட்டி அங்கே இருந்தது. இது எப்படி வந்தது? இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் இவன் யார்? என்று கர்ஜித்தான். கணிகைப் பெண்கள் கலங்கிப் போனார்கள். நடந்ததைச் சொன்னார்கள். வியாபாரி வெங்கடராயனை உலுக்கி எழுப்பினான். ஏய்! இந்தப் பெட்டியை எப்படி திருடினாய்? என கேட்டான். வெங்கடாரயனுக்கு தூக்கி வாரிப்போட்டது. கடலில் கண்டெடுத்ததைச் சொன்னான். வியாபாரி நம்பவில்லை. இல்லை, நீ பொய் சொல்கிறாய். கப்பலில் ஏற்ற வைத்திருந்த இந்த பெட்டியை நீ எப்படியோ திருடி இருக்கிறாய், வா, அரசனிடம். பெட்டியைக் களவாடிய உனது கைகளைத் துண்டிக்கச் செய்கிறேன், என்றான். ஒரு நிமிட சபலத்திற்காக, வசமாய் மாட்டிக் கொண்டோமே, என்ற வெங்கடராயன் இறைவனை மனதில் வேண்டினான். துன்பம் வந்தால் தானே மக்களுக்கு இறைவனின் நினைவு வரும்? இறைவன் இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் துணை வருவாரா? அவனைக் கைவிட்டார். மீனவனை இழுத்துக் கொண்டு அரண்மனைக்கு சென்றான் வியாபாரி. அரசர், விசாரித்தார். வெங்கடாராயனின் கையை வெட்ட உத்தரவிட்டார். மனம் ஒரு நிமிடம் கூட சபலப்படக்கூடாது. அப்படி சபலப்பட்டால், இறைவனும் உதவமாட்டார். நம் வாழ்வே அழிந்து போகும். ஒரு நிமிட பொருளாசையாலும், பெண்ணாசையாலும் துடுப்பு தள்ளும் கைகளையும் இழந்தான் வெங்கடாராயன். அவனது மனைவியும், தன் சொல் கேளாத கணவனை விட்டு விலகி விட்டாள். அனாதையாக நின்றான் வெங்கடாராயன். அடுத்தவர் பொருளை அனுபவிக்க முயலக்கூடாது. அதனால் ஏற்பட்ட துன்பத்தை பார்த்தீர்களா? |
|
|
|