|
விந்திய மலைப்பிரதேசத்தை ஆண்டுவந்தவர் முக்தசேனன். இவர் ஒரு கந்தர்வ மன்னர். விந்தியமலை அப்போது கந்தர்வ லோகத்தில் இருந்தது. அவருக்கு ராஜ்யசேனன், பத்மசேனன் என்ற மகன்கள் இருந்தனர். இவர்களில் ராஜ்யசேனனுக்கு இரண்டு பெண்களிடம் காதல் ஏற்பட்டது. இருவரையும் அவன் திருமணம் செய்துகொண்டான். அவர்களில் ஒருத்தியான பிரபாவதி பொறாமை கொண்டவள். அவள் தனது கணவனின் மற்றொரு மனைவியான சந்திராவதியுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தாள். மனைவியரின் சண்டையால் ராஜ்யசேனனுக்கு தலைவலியாக இருந்தது. அவன் தன் தந்தையான முக்தசேனனிடம் சென்று, தந்தையே! தாங்கள் சொன்னதை கேட்காமல் இரண்டு பெண்களை திருமணம் செய்தேன். அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன். இவர்கள் போடும் சண்டையால் எனக்கு நிம்மதி போய்விட்டது. அதன் காரணமாக போருக்கு சென்ற நான் எதிரி நாட்டிடம், நம் நாட்டின் ஒரு பகுதியை இழந்துவிட்டேன். இதற்கு நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன், என கூறினான். இளையமகன் பத்மசேனனும் பொறுப்பில்லாமல் திரிந்தான். முக்தசேனனுக்கு கோபம் கொப்பளித்தது. அவன் தன் மகன்களிடம், எனது சொல்லை கேட்காத நீங்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டும். எனது மருமகள்களும் அங்கேயே பிறப்பார்கள். பூலோகக் கஷ்டங்களை அனுபவித்தால் தான் உங்களுக்கு புத்தி வரும். நீ பூலோக வாழ்க்கை முடிந்து மீண்டும் கந்தர்வ லோகம் வந்து சேர்வாய், என சாபமிட்டார்.
காசிநகரில் சந்திரசேகரன் என்பவன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மன்னன் மிகுந்த கவலையில் இருந்தான். அப்போது துர்க்காதேவி அவனது கனவில் தோன்றி, உன் அருகில் இப்போது இரண்டு மாங்கனிகளை வைத்திருக்கிறேன். இதில் ஆளுக்கு ஒன்றாக உன் மனைவியருக்கு கொடுத்துவிடு. கர்ப்பம் தரிக்கும், என கூறினாள். திடுக்கிட்டு எழுந்த மன்னன் தன் அருகில் இரண்டு கனிகள் இருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு முதல் மனைவி இருக்கும் அறைக்கு சென்றான். ஒரு பழத்தை அவளிடம் கொடுத்தான். மகிழ்ச்சியோடு சாப்பிட்டாள். மற்றொரு பழத்தை அந்த அறையிலேயே வைத்துவிட்டு களைப்பினால் மன்னன் தூங்கிவிட்டான். சற்று நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது மற்றொரு மாம்பழத்தைக் காணவில்லை. அதை எங்கே என தன் மனைவியிடம் கேட்டான். நல்ல ருசியாக இருந்ததால் அந்த பழத்தையும் சாப்பிட்டுவிட்டதாக மூத்த மனைவி சொன்னாள். இந்த விஷயம் இளைய மனைவிக்கு தெரிந்துவிட்டது. அவள் ஆவேசம் ஆனாள். ஆனாலும் எதுவும் செய்ய முடிய வில்லை. இரண்டு பழங்களையும் சாப்பிட்ட மூத்த மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள்தான் முற்பிறவியில் கந்தர்வ லோகத்தில் மன்னனின் குழந்தைகளாக இருந்தவர்கள்.இரண்டு சகோதரர்களும் கல்வியிலும், வீர விளையாட்டிலும் தேர்ச்சி பெற்று விளங்கினர். துர்க்கா வழிபாட்டை விருப்பத்துடன் நடத்தினர். பல பலிகள் கொடுத்து அம்பிகையை வழிபட்டனர். தாங்கள் உலகின் பல இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என வேண்டிக் கொண்டனர். அதன்படியே பல இடங்களைப் பிடித்தனர்.
இவர்கள் இவ்வாறு புகழ்பெற்று வளர்வது இளைய தாய்க்கு பிடிக்கவில்லை. தனக்கு குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. மூத்தவள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதா? என அவள் பொறாமைப்பட்டாள். எனவே இரண்டு ராஜகுமாரர்களையும் கொன்றுவிட சதித்திட்டம் தீட்டினாள். அவர்கள் ஒருமுறை போர்க்களத்திற்கு சென்றனர். சேனைத்தலைவனை அழைத்து, நீ இரண்டு ராஜகுமாரர்களையும் கொன்றுவிடு. உனக்கு என் செல்வத்தில் பாதியை தருகிறேன். போர்க்களத்தில் எதிரிகளோடு சண்டை போடுவது போல நடித்து இவர்களை வெட்டி சாய்த்துவிட வேண்டும், என ஆலோசனை சொன்னாள். பணத்திற்கு ஆசைப்பட்ட சேனைத்தலைவனும் இந்த சதித்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டான். போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அந்நேரத்தில் துர்க்காதேவி அங்கு தோன்றினாள். என் அன்புக்குழந்தைகளே! உங்களுக்கு ஒரு ஆபத்து வரக் காத்திருக்கிறது. நீங்கள் இங்கிருந்து தப்பிச் சென்றுவிடுங்கள். நான் ஒரு மந்திரக்கோல் தருகிறேன். இதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன நினைத்தாலும் அது உங்கள் கையில் கிடைக்கும். நீங்கள் நினைத்த இடத்திற்கும் செல்லலாம். ஆனால் அரண்மனைக்கு மட்டும் இப்போதைக்கு செல்ல வேண்டாம். எங்காவது தப்பிச் சென்றுவிடுங்கள், என்றாள். துர்க்கையின் உத்தரவுப்படி இரண்டு சகோதரர்களும் ஒரு காட்டில் சென்று மறைந்திருந்தனர். அந்த காட்டில் ஒரு அசுரன் வசித்தான். அவன் தன் மனைவியுடனும், தங்கையுடனும் வாழ்ந்துவந்தான். கொடுமைக்காரனான அவன் தன்னை எதிர்த்து பேசிய குற்றத்திற்காக தங்கையின் கணவனை கொன்றுவிட்டான். வேறு வழியில்லாத அவள் அண்ணனுடன் குடியிருந்தாள். அப்போதுதான் சகோதரர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் மூத்தவன் அந்த பெண் மீது இரக்கப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டான். இதைக்கண்டு அசுரனுக்கு கோபம் அதிகமாயிற்று. அவன் மூத்த ராஜகுமாரனை கொல்ல பாய்ந்து வந்தான். மந்திரக்கோலை கையில் வைத்திருந்த மூத்தகுமாரன் தன் கையில் சக்திவாய்ந்த வாள் வரவேண்டும் என நினைத்தான். அதன்படி வாள் கையில் வந்தது. அதைக்கொண்டு அசுரனை சாய்த்துவிட்டான். அதன்பிறகு தம்பதியர் நிம்மதியாக வாழ்ந்தனர்.
அசுரனின் மனைவி இளைய ராஜகுமாரனை விரும்பினாள். அவனது மனதை கெடுத்தாள். இளையகுமாரன் யோசித்தான். எனது அண்ணன் உன் கணவனின் தங்கையை திருமணம் செய்துள்ளான். எனவே நீ எனக்கு சகோதரி முறை வேண்டும். முறை தவறி திருமணம் செய்வது தவறல்லவா? என்றான். ஆனால் அசுரகுலத்தில் தோன்றிய அந்த ஒழுக்கம் கெட்ட பெண், அவன் மனதைக் கலைத்தாள். அவனை தவறாக நடக்க வைத்தாள். எனவே, அந்த அசுரப் பெண்ணை இளையவன் திருமணம் செய்து கொண்டான். இதனால் சகோதரர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்தது. அசுரனின் தங்கையும், தன் அண்ணியுடன் சண்டை போட்டாள். மூத்தகுமாரன், துர்க்கை தந்த மந்திரக்கோல் இனி தனக்கே உரியது எனக்கூறி எடுத்துக் கொண்டான். ஒழுக்கம் கெட்ட உனக்கு, இனி மந்திரக்கோலை தரமுடியாது, என தம்பியிடம் கூறிவிட்டான். இதனால் கோபமடைந்த இளையவனின் மனைவி, மந்திரக்கோலை திருடி எரித்து விட்டாள். இதனால் அவர்கள் அனைவரின் சக்தியும் குறைந்தது. அவர்கள் படாதபாடு பட்டனர். ஒரு கட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கி, உணவின்றி இறந்து போனார்கள். அத்துடன் அவர்களின் சாபம் தீர்ந்தது. மீண்டும் அவர்கள் கந்தர்வ லோகம் சென்றனர். அங்கு சென்றதும் முற்பிறவி ஞாபகம் வந்தது. அவர்கள் தங்கள் தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறி மன்னிப்பு கேட்டனர். துர்க்காதேவி அங்கு தோன்றி, ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ்வோருக்கே நான் துணை செய்வேன். முறைதவறி நடந்தாலும், பெற்றவர்கள் மனம் புண்படும்படி நடந்தாலும், ஒரு மனைவி இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்தாலும் அவர்களை கடுமையாக தண்டிப்பேன். அவர்களின் மனதை படாதபாடு படுத்துவேன். உங்களது வாழ்க்கை உலக மக்களுக்கு பாடமாக அமையட்டும், என்றாள். |
|
|
|