|
சிவத்தலம் என்று சொன்னவுடன் காசி எவ்வாறு நினைவுக்கு வருகிறது. அதுபோல, பாரதத்தின் புகழ் பெற்ற ஒரு நகரம் உருவாவதற்கு காரணமாக இருந்தவரும் சிவனே. இன்று பாட்னா என அழைக்கப்படும் அந்நகரம், அக்காலத்தில் பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டது. மாபெரும் அரசர்கள் ஆண்ட பெருமையைக் கொண்டது அந்நகரம். அந்நகர் உருவான வரலாறை கேளுங்கள்.அட்சயன், மாட்சயன், சூட்சயன் என்பவர்கள் சகோதரர்கள். இவர்களின் தந்தை தனவான். பெயரில் தான் தனம் இருந்ததே ஒழிய, இவனிடம் செல்வம் வற்றிப்போயே இருந்தது. வறுமையின் பிடியில் சிக்கிய தனவான், பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு, அவர்கள் அறியாமல் ஊரை விட்டு ஓடி விட்டான். அந்த அந்தண சகோதரர்கள், வீடு வீடாக பிச்சை எடுத்து வாழ்ந்தனர். உள்ளூரில் இவர்களுக்கு பிச்சை தர யாரும் முன்வராததால், பசி பொறுக்காமல், பக்கத்து நாட்டிற்கு நடந்தே சென்றனர். அங்கு தனவந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரிய செல்வந்தர். ஏழைகளுக்கு இல்லை எனாமல் கொடுப்பவர். அவரது வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டனர் சகோதரர்கள். அவர்களை பார்த்த தனவந்தர், அந்த வாலிபர்கள் சூழ்நிலை காரணமாக பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள் என்பதை பார்வையாலேயே உணர்ந்து கொண்டார். தனவந்தருக்கு அகல்யா, கவுசல்யா, ரம்யா என்ற மகள்கள் இருந்தனர். மூவரையும், இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விட்டு, தனவந்தர் தவ வாழ்க்கைக்கு சென்று விட்டார். தம்பதிகள் சுகமாக வாழ்ந்தனர். இளையவள் ரம்யா கர்ப்பவதியானாள். திடீரென அவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது. அனைவர் கையிலிருந்த பொருளும் கரைந்தது. சகோதரர்களின் குடும்பமும் வறுமைப்புயலில் சிக்கிக் கொண்டது. தந்தை வீட்டில் வறுமை துரத்தியது போதாதென்று, மாமனார் வீட்டிலும் வறுமை துரத்துகிறதே, என தங்களைத் தாங்களே நொந்து கொண்ட சகோதரர்கள், தந்தையின் வழியைக் கடைப்பிடித்தனர். தந்தை எப்படி குழந்தைகளை விட்டு விட்டு ஓடினாரோ, அதே வழியில் தனயன்களும் தங்கள் மனைவியரை தவிக்க விட்டு ஓடி விட்டனர். சகோதரிகள் அழுது புலம்பினர்.
ரம்யா குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவன் அழகில் உயர்ந்தவனாக இருந்ததால், சுந்தரன் என பெயர் சூட்டினாள். ரம்யா மட்டுமின்றி, பெரியம்மாக்களின் அரவணைப்பிலும் வளர்ந்தான் சுந்தரன். ஆனால் அவனுக்கு சோறூட்ட பொருள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஒருமுறை குழந்தை பசியால் துடித்து அழுதான். சரியான உணவு இல்லாததால், ரம்யாவுக்கு தாய்ப்பாலும் வற்றிவிட்டது. பசும்பாலுக்காக, பக்கத்து வீடுகளில் அலைந்தனர். வறுமையில் சிக்கிய நாட்டில், யார் தானம் தர முன் வருவார்கள்? பால் கிடைக்கவில்லை. அப்போது லோகநாயகனான சிவபெருமானும், பார்வதியும் வான சஞ்சாரம் செய்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு மனமிரங்கிய பார்வதி, சிவபெருமானிடம் அந்தக் குழந்தைக்காக சண்டை பெரியவர்களை கஷ்டப்படுத்தினால் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், மழலையிடம் உங்களுக்கு என்ன சோதனை வேண்டிக்கிடக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஏதாவது வழி செய்யுங்கள், என்றார். சிவன் சிரித்தபடியே, மக்கள் துயரப்படும் போது அதுகண்டு பொறுக்காத அம்மையே, அந்த ஆண் குழந்தைக்கு ஆயுள் தீர்க்கம். அவன் முற்பிறவியில் பல தான தர்மங்கள் செய்தவன். எனவே நல்வினையையே அவன் அனுபவிப்பான். பெரிய நகரை உருவாக்கி அதன் அரசன் ஆவான், என்றார். பார்வதி மகிழ்ந்தாள். பாலுக்காக அலைந்த சகோதரிகள், எதுவும் கிடைக்காமல், தனியே இருந்த குழந்தையைப் பார்க்க ஓடோடி வந்தனர். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையிடம் இருந்து சத்தமே இல்லை. குழந்தை இறந்து விட்டதோ எனக்கருதிய ரம்யா, ஓடோடி வந்து குழந்தையை தூக்கினாள். குழந்தை அவளைப் பார்த்து சிரித்தான். அவன் வயிறு பொம்மென்று மெத்தை போல இருந்தது. சற்று தூரத்தில் ஒரு வெள்ளிக் கெண்டி கிடந்தது. அதில் பால் இருந்ததற்காக அடையாளம் தெரிந்தது. அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. யார் பால் கொடுத்தது என அறியும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
மறுநாளும் இதே போல தங்கக்கிண்ணங்கள் கிடந்தன. வெள்ளியும், தங்கமுமாக அவர்கள் வீட்டை கிண்ணங்களும், கெண்டிகளும் நிறைத்தன. அவற்றை விற்று, உணவுப் பொருளை வாங்கி வந்து, மனம் மகிழ வாழ்ந்தனர் சகோதரிகள். சுந்தரனும் வளர்ந்து பெரியவன் ஆனான். பல ஆண்டுகளாக மழையில்லாத கொடுமை ஓய்ந்து, மீண்டும் அவர்களது ஊர் செழிப்படைந்தது. சகோதரிகள் எந்தக் கஷ்டத்திலும் தங்கள் வீட்டையோ, நில புலனையோ விற்காததால், இப்போது அவர்கள் கையில் சேர்ந்த பொருளைக் கொண்டு, ஒன்றுக்கு பல மடங்காக பொருள் சேர்ந்தது. அவர்கள் முன்பை விட பெரிய பணக்காரர்கள் ஆயினர். சுந்தரனோ கடும் உழைப்பாளி. பொன்னையும், பொருளையும் குவித்து ஒரு சிற்றரசன் போல் ஆகிவிட்டான். ஓடிப்போன தந்தைகளுக்கு, இந்த விஷயம் தெரிய வந்தது. பல ஆண்டுகளாக பாராமுகமாக இருந்த அவர்கள், ஊருக்கு திரும்பி வந்தனர். தாங்கள் ஓடிச் சென்றதற்கு உண்மையிலேயே வருத்தப்படுவது போல நடித்தனர். இதை நம்பிய மனைவியர் மூவரும், எப்படியோ கணவரோடு சேர்ந்து வாழ்ந்தால் போதுமெனக் கருதி, அவர்களின் மனம் கோணாமல் நடந்தனர். தந்தையரோ இஷ்டம் போல் செலவழித்து இனிது திரிந்தனர். ஒருமுறை வயல்காட்டில் சுந்தரனுக்கு பெரும் புதையல் கிடைத்தது. அதைக் கொண்டு அவன் அரசன் போலவே மாறிவிட்டான். தந்தையரின் செலவுக்கு மகன் கட்டுப்பாடு விதித்தான். மீண்டும் வறுமை நிலைக்கு போய்விடக்கூடாது என எச்சரித்தான். ஆனால் மகனின் புத்திமதியை தந்தையர் கேட்கவில்லை. இவன் மட்டும் பொருளை அனுபவிப்பதா? என பொறாமை கொண்டனர். இரண்டு பெரியப்பாக்களும் சொத்தில் பங்கு கேட்டனர்.
தன் சுய உழைப்பையும், தாத்தா சொத்தையும் தர மகன் மறுத்து விட்டான். அவனைக் கொல்ல முடிவு செய்த அவர்கள், நல்லவர் போல் பேசி, ஒரு காளி கோயிலுக்கு அழைத்துச் சென்று பலியிட முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிய சுந்தரன், வெறுப்படைந்து ஊரை விட்டே போய் விட்டான். ஒரு கானகத்தில் இரண்டு சகோதரர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ஒரு பறக்கும் பாதணி, மந்திரக்கோல், சித்திரம் வரைந்தால் உயிர் பெறும் தூரிகை ஆகியவை இருந்தன. இவற்றை யார் அடைவது என்பதில் அவர்களுக்குள் சண்டை நடந்தது. சண்டையை நிறுத்திய சுந்தரன், இருவருக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தான். யார் முதலில் ஓடி ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைகிறார்களோ அவர்களுக்கே இப்பொருள், என்றான். சகோதரர்கள் ஓடினர். இதுதான் சமயமென மந்திரக்கோல், தூரிகை ஆகியவற்றுடன் பறக்கும் பாதணியை காலில் மாட்டிக் கொண்டு பறந்து விட்டான் சுந்தரன். அவன் பக்கத்து நாட்டிற்கு சென்றான். அந்நாட்டின் இளவரசி பறந்து வந்த வாலிபனைப் பார்த்தாள். அவனது அழகில் மயங்கினாள். இருவரும் காந்தர்வ மணம் செய்து கொண்டனர். விஷயம் அரசனுக்கு எட்டியது. மகளையும், சுந்தரனையும் கொல்ல உத்தரவிட்டான். பறக்கும் பாதணியின் உதவியால், மற்றொரு பகுதிக்கு மனைவியுடன் தப்பி விட்டான். தன்னிடமிருந்த தூரிகையால் அரண்மனை படம் வரைந்தான். மனிதர்களை வரைந்தான். அவை யாவும் உருவம் பெற்றன. மந்திரக்கோலால் செல்வத்தை வரவழைத்தான். பின்பு தான் உருவாக்கிய ஊரின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். அந்த நகரமே பாடலிபுத்திரம் ஆனது. இந்த நகரம் வரலாற்று சிறப்பு மிக்க நகரமாக திகழ்ந்தது. |
|
|
|