|
பெருமாளே! ஆபத்தாந்தவா! ஸ்ரீனிவாசா! நாராயணா! கோவிந்தா! திருமலை வாசா, உளமுருகி பெருமாளின் நாமங்களை கண்மூடி உச்சரித்துக் கொண்டிருந்தான் காஞ்சி மன்னன் கல்யாணவரதன். அவனருகில் பயபக்தியுடன் நின்றாள் அவனது மனைவி அலமேலுபிராட்டியார். மன்னன் கண் விழித்தான். தன்முன் சயனத்தில் இருந்த நாராயணனைப் பெருமையுடன் பார்த்தான். நாராயணன் ரத்தின மாலைகள் சூடியிருந்தார். உடலெங்கும் மூடிய தங்ககவசத்தில் நவரத்தினங்களும் மின்னியது. மன்னன் மனதில் பெருமை...நாராயணா! இவ்வுலகில் எனக்கு கிடைக்கும் செல்வத்தின் பெரும்பகுதியை கொட்டி உன் உடலை தங்கத்தால் இளைத்திருக்கிறேன். நீ அணிந்திருக்கும் நவரத்தின மாலை மட்டும் ஐம்பதாயிரம் பொன் பெறும். உன் கைகளை அலங்கரிக்கும் நவரத்தின கழல்கள் பத்தாயிரம் பொன் மதிப்புடையன. உன் அருகே வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீதேவியின் காசுமாலை ஆயிரம் பவுனால் செய்யப்பட்டது. அவள் உன்னைப் பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்திருக்கிறளா....அல்லது நான் உபயமாக அவளுக்கு அணிந்திருக்கும் காசுமாலையின் எடை தாளாமல் தலை குனிந்திருக்கிறாளா என நீயே சந்தேகப்பட்டிருப்பாய்....கண்ணா! பரந்தாமா! உனக்கு இன்னும் என்ன வேண்டும் கேள்... என்று செல்வச்செருக்கை கடவுளிடம் காட்டிக் கொண்டிருந்தான். உலகளந்த நாயகன்....உலகத்துக்கே சொந்தக்காரனிடம், தான் போட்ட சாதாரண நகைகளைப் பற்றி கதையளந்து கொண்டிருந்தான் மன்னன். அவன் பெரிய பக்திமான் என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவன் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவனது எண்ணம்....உலகத்திலேயே தான் வணங்கும் பெருமாளைத் தவிர, மற்ற கோயில்களில் உள்ள பெருமாளுக்கு வழிபாடும், நகைகளின் அளவும் குறைவாகவே இருக்க வேண்டும் என்பது தான். கண்ணை மூடிக்கொண்டே உலகை கவனிக்கும் கண்ணன், அரசனின் அறியாமையை எண்ணிச் சிரித்துக் கொண்டான். அருகிலிருந்த ஸ்ரீதேவியார், சுவாமி, உங்கள் பக்தனுக்கு தான் உங்கள் மீது எவ்வளவு பாசம்? எனக்கு கூட எவ்வளவு நகைகளை போட்டிருக்கிறான் பாருங்கள்! நீங்கள் குபேரனின் நண்பர். லட்சுமியோ உங்கள் மார்பிலேயே உறைகிறாள். அப்படியிருந்தும் ஒரு கம்மலாவது வாங்கித் தந்திருப்பீர்களா? என செல்லமாக கோபித்துக் கொண்டார். பகவான் சிரித்தார். உம்...பக்தனைக் கண்ட மகிழ்ச்சியில், இப்படியெல்லாம் பேசுகிறாய்! நானே குபேரனிடம் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
உன் சகோதரி பத்மாவதியைத் திருமணம் செய்து கொள்ள, நான் வாங்கிய கடன் தீரவில்லை. இதில் உனக்கெப்படி நகை வாங்கித் தருவேன். உன் பக்தர்கள் வாங்கித் தருவதை அணிந்தே உன் கழுத்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னுமா ஆசை விடவில்லை. இந்தப் பெண்கள் ஏன் தான் இப்படி நகைக்கு ஆசைப்படுகிறார்களோ... என கேலி செய்தார். காஞ்சிமன்னன் காதில் இவர்களின் சம்பாஷணை கேட்குமா? அவன் பூஜையை முடித்து விட்டு புறப்பட்டு விட்டான். நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்த அர்ச்சகருக்கு பெரிய பொன் மூட்டையை பரிசாகக் கொடுத்தான். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரும் வழியில் ஒரு இடத்தில், ஒரு பக்தர் பெருமாளின் சிறிய கற்சிலை ஒன்றுக்கு துளசிமாலை அணிவித்து பூஜை செய்து கொண்டிருந்தார். இதை மன்னன் கவனித்து விட்டான். தேரிலிருந்து இறங்கி அங்கு சென்றான். ஐயா! இங்கே பெருமாளை ஏன் அவமதித்துக் கொண்டிருக்கிறீர். இவ்வூர் கோயிலிலே பெருமாளுக்கு ஆடம்பரமாய் நகைகள் அணிந்து, மலர் மாலைகள் கமகமக்க, பூஜை, புனஸ்காரம் தொடர்ந்து நடக்கிறது. பக்தர்கள் வயிராற உண்டுசெல்ல அன்னக்கூடமும் அமைத்திருக்கிறேன். நீரோ பெருமாளை அவமானப்படுத்தும் வகையில், காய்ந்து போன துளசிமாலையை அணிந்து பூஜை செய்து கொண்டிருக்கிறீர். உடனே இந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும். பூஜையை நிறுத்த வேண்டும். என் பெருமாளை அழுக்கடைந்த துணி கட்டி பூஜிப்பதை அனுமதிக்க மாட்டேன்,என்றான். பக்தர் அதிர்ந்து போனார். விஷ்ணுதாசர் என்ற பெயர் கொண்ட அவர், மன்னா! தங்களை எதிர்த்துப் பேசுவதாக கருத வேண்டாம். கடவுளை காசு கொடுத்து வாங்க முடியாது. அவன் எளிய பூஜாமுறைகளையே விரும்புகிறான். நான் மனச்சுத்தத்துடன், என்னால் ஆன பூஜையை செய்து கொண்டிருக்கிறேன். இதை தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை, என்றார். மன்னனுக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது. அடேய் ! என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா? உன்னைத் தொலைத்திருப்பேன். இருந்தாலும் விஷ்ணுபூஜை செய்ததால் உன்னைக் விட்டு விடுகிறேன். ஓடிவிடு, என்றான். மன்னன் கட்டளையிட்ட பிறகு அவ்வூரில் எப்படி இருக்க முடியும்? ஆனாலும் விஷ்ணுதாசரும் மன்னனை விடவில்லை. மன்னா! நாம் இருவருமே பக்தர்கள் தான். ஆனால் வழிபாட்டு முறையில் தான் மாறுதல் இருக்கிறது.
என் வழிபாட்டுக்கு மகிழ்ந்து, இந்த ஏழைக்கே பகவான் முதலில் காட்சி கொடுப்பார். ஒருவேளை உன் ஆடம்பர பூஜை அவருக்கு பிடித்திருந்தால் உனக்கு காட்சி தரட்டும். யாருடைய பூஜையை பகவான் ஏற்றுக்கொள்கிறார் பார்ப்போம், என சவால் விட்டார். பின்பு விஷ்ணுசித்தர் சிலையுடன் பக்கத்து நாட்டுக்கு போய் விட்டார். பகவானே! விரைவில் எனக்கு காட்சி தா! நான் ஏழை என்பதற்காக என்னை ஒதுக்கி விடாதே, என கண்ணீருடன் வழிபட்டார். ஒருவேளை மட்டும் பகவானுக்கு உணவு படைத்து, அதன் பிறகே உண்டார். ஒருநாள் பூஜையை முடித்து விட்டு, சற்று நேரம் கழித்து சாப்பிடலாம் எனக் கருதி, வெளியே போய் விட்டார். திரும்பி வந்து பார்த்த போது, உணவைக் காணவில்லை. அன்று பட்டினியாக இருந்தார். இதே போல தொடர்ந்து ஒருவாரம் உணவு காணாமல் போனது. பட்டினியுடன் பகவானை வழிபட்டார் விஷ்ணுதாசர். அன்று உணவை படைத்து விட்டு, மறைவான இடத்தில் ஒளிந்து நின்று, கவனித்தார். அப்போது கிழிந்த ஆடையும், ஒட்டிய வயிறுமாய் ஒருவன் வந்தான். இலையோடு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஓ! இவன்தான் இதற்கு காரணமா? பாவம், இவனுக்கு எவ்வளவு பசி இருந்தால் இப்படி செய்திருப்பான். இதற்காக ஒளிந்து வருவானேன்? நேரடியாக வந்து என்னிடமே கேட்டிருக்கலாமே, எனக் கருதியவர், நெய் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அவனை நோக்கிச் சென்றார். தன்னை பிடிக்கத்தான் விஷ்ணுதாசர் வருகிறார் எனக்கருதிய அந்தப் பிச்சைக்காரன் ஓடத் துவங்கினான். தாசரும் விடாமல் பின் சென்றார். ஒரு இடத்தில் பிச்சைக்காரன் தடுக்கி விழுந்து மூர்ச்சையானான். பதறிப் போன விஷ்ணுதாசர், அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும், அவன் பெருமாளாக உருமாறி நின்றான். பெருமாளே! தாங்களா இப்படி நாடகம் ஆடினீர்கள். தங்கள் தரிசனம் கிடைத்ததது மகாபாக்கியம், என்றார். அவரை மகிழ்வுடன் பெருமாள் அணைத்துக் கொண்டார். புஷ்பக விமானத்தில் ஏற்றி வைகுண்டத்துக்கு அனுப்பினார். அந்த விமானம் காஞ்சிநகர் வழியாகப் பறந்தது. அங்கே அரசன் பெருமாளை வரவழைக்க பல கோடி செலவழித்து யாகம் நடத்திக் கொண்டிருந்தான். பெருமாள் வரவே இல்லை. புஷ்பக விமானத்தில், விஷ்ணுதாசர் செல்வதைப் பார்த்தான். அவமானம் அடைந்தான். அவனது பணத்திமிர் அடங்கியது. தனது சவாலில் தோல்வி அடைந்த அவன், யாக குண்டத்தில் விழ யத்தனித்தான். பெருமாள் அங்கு தோன்றி அவனைத் தடுத்தார். இறைவனை அவரவர் சக்திக்கு தக்கபடி வழிபடலாம். எளிமையாக வழிபடுபவர்களை கிண்டல் செய்யக்கூடாது. கடன் வாங்கியோ, பெரும் பொருள் செலவழித்தோ என்னை வழிபட வேண்டும் என்பதில்லை. மனதை மலராக்கி வழிபட்டாலே போதும், எனக்கூறி மன்னனையும் வைகுண்டத்துக்கு அனுப்பி வைத்தார். |
|
|
|