கிருஷ்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கிருஷ்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கிருஷ்ண பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கிருஷ்ணன், ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா, என்று உத்தரவிட்டார். சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது? என்றாள் அவள். நீ யமுனையின் அருகில் போய், நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும், என்று பதிலளித்தார் கிருஷ்ணர்.
என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்? அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள். யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர், யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக்கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது, என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா!