|
முரன் என்னும் அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய தொல்லை தாளாத தேவர்கள், வைகுண்டம் சென்று திருமாலிடம் முறையிட்டனர். அசுரனை அழிக்க திருமால் புறப்பட்டார். முரனுக்கும், திருமாலுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. திருமாலின் சக்ராயுதத்தின் முன் முரனால் நிற்கக்கூட முடியவில்லை. பலமாய வடிவங்கள் எடுத்து, மறைந்திருந்து தாக்கினான். தினமும் சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை போர் நடக்கும். அதன்பின், முரனும், திருமாலும் ஓய்வெடுக்கச் சென்று விடுவர். பத்ரிகாசிரமத்திலுள்ள ஒரு குகையில் திருமால் இரவுப் பொழுதைக் கழிப்பது வழக்கம். ஒருநாள் திருமால் படுத்திருந்த நேரத்தில், முரன் குகைக்கு வந்து திடீரென தாக்கத் தொடங்கினான். அப்போது, திருமாலின் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, முரனின் முன் வந்தாள். அவன், அவளது அழகைக் கண்டு மோகம் கொண்டான். ஆனால், அந்த பெண் சக்தியோ, கையில் ஆயுதங்களைத் தாங்கி விஸ்வரூபம் எடுத்தாள். அசுரனைக் கொன்றாள். திருமால் அவளிடம், சக்தியே! உனக்கு ஏகாதசி என்று பெயரிடுகிறேன். நீ முரனைக் கொன்ற இந்த நாளில் விரதமிருந்து வழிபடுவோர், எம் அருளால் செல்வவளமும், மறுபிறவியில் வைகுண்ட பதவியும் பெறுவர், என வரம் அளித்தார். இந்தக் கதை பத்ம புராணத்தில் இடம் பெற்றுள்ளது.
|
|
|
|