|
ஒரு நாட்டில் மழையில்லாமல் வறட்சி அதிகரித்தது. மக்களின் நிலையை தெரிந்து கொள்ள, மன்னர் மந்திரியுடன் குதிரையில் மாறு வேடத்தில் வலம் வந்தார். நகர்ப்புறத்தைக் கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள் மாமரத்தின் அடியில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு கல் மன்னரின் தலையில் விழுந்து ரத்தம் வெளிப்பட்டது. கல் வந்த திசையை மந்திரி வெகுண்டு பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு மூதாட்டி நின்றாள். மன்னர் மீது கல் எறிய உனக்கு என்ன தைரியம்? என்று அதட்டி, அவளை இழுத்து வந்தார். நடுங்கியபடி அவள் மன்னர் முன் நின்றாள். மன்னா! அறியாமல் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். மூன்று நாள் பட்டினியாக என் கணவர் படுக்கையில் கிடக்கிறார். அவருக்கு பழம் பறிக்க மரத்தின் மீது கல்லெறிந்தேன். தவறுதலாக அது உங்கள் மீது பட்டு விட்டது என்று சொல்லி கும்பிட்டாள். மந்திரியிடம் மன்னன், அரண்மனைக்கு இவளை அழைத்துச் சென்று, வயிறார உணவும், உடையும், நூறு பொற்காசும் கொடுத்தனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என ஆணையிட்டார். மந்திரி,மன்னா! இது தான் தப்புக்கு தண்டனையா? என்று ஆச்சர்யமாக கேட்டார். இது பஞ்ச காலம். அவளும் நாம் இருப்பதை அறியாமலேயே தவறு செய்தாள். இந்த பஞ்சகாலத்தில், ஓரறிவு உயிரான மாமரமே கல்லெறிந்தால் கனியைக் கொடுக்கிறது. ஆறறிவு படைத்த நாம் ஏதாவது கொடுப்பது தானே சரி! என்றான்.
|
|
|
|