|
கல்வித்துறை அதிகாரி சிவபாலன், அன்று பெருமாள் கோயிலுக்கு வந்தார். தீபாராதனை காட்டிய அர்ச்சகர், அர்ச்சனை செய்வதற்காக பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம் கேட்டார். தன் பெயரை மட்டும் சொன்ன அதிகாரி, ராசி, நட்சத்திரம், கோத்திரம் தெரியாமல், அருகில் நின்ற மனைவியைப் பார்த்தார். அவளும் விழித்தாள். அதிகாரியுடன் வந்த அவரது தந்தை சிவநேசன் சுதாரித்து, தன் மகனின் நட்சத்திரம், கோத்திரமெல்லாம் சொன்னார். அதன் பிறகு, அர்ச்சனை நடந்தது. பூஜை முடிந்து அவர்கள் கிளம்பி விட்டனர். அப்போது, சின்ன பட்டர் ரங்கநாதன், பெரிய பட்டர் வெங்கடாஜபதியிடம்,சுவாமி! வந்தவர் பெரிய கல்வி அதிகாரி என்கிறார். அவரது நட்சத்திரம், ராசி கூட தெரியவில்லையே! ஒருவேளை இவருக்கு ஜாதகமே குறிக்கவில்லை என்றால் அது விதிவசமென விட்டு விடலாம். இவருக்கு எல்லாம் தெரியும். தெரிந்ததைக் கூட சொல்ல முடியாமல் போனாரே! ஏன்? என்று கேட்டார்.
ரங்கநாதா! பெற்றவர்களின் வளர்ப்பைப் பொறுத்து தான் பிள்ளைகள் வளர்கிறார்கள். இவரை அதிகாரியாக்க வேண்டுமென நினைத்த இவரது தந்தை, அவரது படிப்பு விஷயத்தில் சரியாக இருந்தார். ஆனால், ஆன்மிக விஷயத்தில் தவறிவிட்டார். இந்த அதிகாரியை பார்க்கும் மற்றவர்கள், இவருக்கு தன் ராசி,நட்சத்திரமே தெரியவில்லை. இவர் கல்வித்துறையில் என்னத்தை சாதிக்கப் போகிறார் என்று தான் இகழ்வாகப்பேசுவார்கள். பெற்றவர்கள், இளமையிலேயே குழந்தைகளுக்கு இந்த அடிப்படை விஷயங்களை முதலில் கற்றுத்தர வேண்டும். அதன் பின் தான் படிப்பு என்ற நிலை வரும் வரை இந்த அதிகாரி மாதிரி விழிக்க வேண்டியது தான் வரும், என்றார். இவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே, விவசாயி ஒருவரும், இன்னும் சிலரும் வந்தனர். அவர்களுக்கு தீர்த்தம் கொடுத்தார் ரங்கநாதன். விவசாயிக்கு அதை என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை. அருகில் நின்ற மற்றவர்கள் அதைக் குடிப்பதைப் பார்த்து அவரும் சுதாரித்தபடியே குடித்தார். இதையும் ரங்கநாதனும், வெங்கடாஜலபதி பட்டரும் கவனித்தனர். அவர்கள் சென்றதும் இதுபற்றி விவாதித்தனர். ரங்கநாதா! பக்தி விஷயத்தில் படித்தவர், பாமரர் என்ற பேதமின்றி அறியாமையில் உள்ளனர். இந்த நிலை எப்போது மாறப்போகிறதோ! பெருமாளே! நீ தான் இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும், என்று மூலஸ்தானத்தில் இருந்த பெருமாளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே சொன்னார் பட்டர். எல்லாம் அறிந்த அந்த பரந்தாமன், எதுவுமே தெரியாதவன் போல சிரித்துக் கொண்டிருந்தான். |
|
|
|