|
பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகளுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. எல்லா மாணவர்களும் படிப்பில் மிகக்கவனமாக இருப்பீர்கள். இந்த சமயத்தில், நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதோ! இந்தக் கதையைப் படித்து விட்டு படிப்பைத் தொடருங்கள். அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக இருந்தான் இளைஞன் ஒருவன். அவனுக்கு எப்படியும் பிறப்பற்ற நிலை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பிறப்பற்ற நிலை அடைவது பற்றி ஒரு நூல் எழுதினான். அந்த ஏட்டுடன் ஒரு முனிவரைச் சந்தித்தான். முனிவரே நான் பிறப்பற்ற நிலை அடைவதற்கு நல்வழி காட்டுங்கள். இதில் எழுதி யிருப்பதெல்லாம் சரிதானா பாருங்கள் என்று வேண்டினான். அதைப்படித்த முனிவர் அவனைப் பாராட்டி விட்டு, நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். நீ அமைதியாகத் தனிமையில் அமர்ந்து அதை தியானம் செய்து வா என்றார். அந்த மந்திரத்தையும் உபதேசித்தார். அவன் வீடு திரும்பினான். வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்து வீடுகளில் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டுஇருந்தனர்.
எங்கும் இரைச்சலாக இருந்ததால், அவனால் வீட்டில் தியானம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தான். ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அங்கே போய் உட்கார்ந்தான். அங்கும் அவனால் சிறிதுநேரம் கூட தியானத்தில் அமர முடியவில்லை. இலைச் சருகுகள் காற்றில் அசைவதும், பறவைகள் கூச்சலிடுவதும் அவனுக்கு எரிச்சலை உண்டாக்கின. உலகில் எங்குமே அமைதி இல்லை என்ற முடிவுக்கு வந்தான். மீண்டும் தனக்கு உபதேசித்த முனிவரை நாடிச் சென்றான். முனிவரை நோக்கி, சுவாமி! உலகில் எங்குமே நிம்மதியாக அமர முடியவில்லை. வீட்டிலும் தனிமை இல்லை. காட்டிலும் தனிமை இல்லை. நான் எப்படி மந்திரம் சொல்வேன்? என்று வருத்தமாகக் கேட்டான். முனிவர் இளைஞனிடம், எந்த இடைஞ்சல் வந்தாலும் அதையெல்லாம் கடந்து ஒரு செயலில் ஆழ்கிறவனே இறைவனின் அருளைப் பெற முடியும். உன்னைச் சுற்றி என்ன நடந்தால் உனக்கென்ன! நீ உன் பணியில் கவனமாக இருந்தால் சுற்றுச்சூழல் உன்னைப் பாதிக்காது. முயற்சி செய்,என்றார். அவரது புத்திமதியை ஏற்ற இளைஞனும், அதன்படியே நடந்து வெற்றி பெற்றான். மாணவர்கள் தங்கள் சுற்றுப்புற சூழலைப் பற்றி கவலைப்படக்கூடாது. அம்மா டிவி பார்க்கிறாளே, தம்பி, தங்கைகள் விளையாடு கிறார்களே, தெருவில் கூச்சலாக இருக்கிறதே! புது சினிமா வந்திருக்கிறதே! என்ற புறச்சூழ்நிலைகளையெல்லாம் மறந்து, படிப்பில் ஆழ்ந்து விட்டால் உங்களை யாராலும் அசைக்க முடியாது.
|
|
|
|