|
ஒரு இளைஞன் சகவாச தோஷத்தால், நாத்திகவாதம் பேசினான். ஒருமுறை அவனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது. சுமை தாளாமல் கோயிலுக்குப் போனான். கடவுளே! இதுவரை உன்னை வணங்கியதில்லை. மாறாக திட்டி யிருக்கிறேன். இப்போது சுமை தாங்கவில்லை. நீ தான் இறக்கி வைக்கவேண்டும், என்றான். அங்கிருந்த ஒரு துறவியை குருவாக ஏற்றான். அவரது சீடர்கள், இவன் நேற்று வரை கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசியவன். சூழ்நிலையால் தடம்மாறி இங்கு வந்திருக்கிறான். இவனைப் போய் சீடனாக ஏற்றீர்களே! என்றதும், குரு சிரித்தார். எல்லாம் சகவாச தோஷம் தான் காரணம். இவனது நண்பர்கள் அப்போது அப்படி சொன்னார்கள். இதை அவன் ஏற்றான், இல்லை என்று சொல்ல எந்த அறிவும் தேவையில்லை. உண்டு எனச் சொல்லத்தான் அறிவும் வேண்டும், அனுபவமும் வேண்டும். தான் பட்ட கஷ்ட அனுபவத்தால் கடவுள் இருக்கிறார், தனக்கும் மேல் ஒரு சக்தியிருக்கிறது என்று நம்பி சரணடைந்திருக்கிறான். தீயோர் பக்கமிருந்தால் தீயவனாவதும், நல்லோர் பக்கமிருந்தால் நல்வழி போவதும் மனிதனின் இயல்பு. சிலர் எப்போதுமே எடுப்பார் கைப்பிள்ளை தான், என்றார். நல்வழி திரும்பியவனை ஏற்பதும், திருந்தியவனுக்கு திருப்பத்தை தருவதுமே கடவுள் வழி. அதுவே ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அருட்பணி. |
|
|
|