|
ஒரு குடும்பஸ்தருக்கு கடன், முதிய பெற்றோர், பிள்ளைகள் வகையில் செலவு என ஏகக்கடமைகள் இருந்தன. வெறுப்பில், வீட்டை விட்டு வெளியேறினார். வழியில், ஒரு கோயிலில் சொற்பொழிவு...அங்கே அமர்ந்தார். இளமையிலேயே பெருமாளைப் பற்றிக் கொண்டால் பாவங்கள் தீரும், என்று சொற்பொழிவாளர் பேசினார். குடும்பஸ்தர் எழுந்தார். நான் சிறுவயது முதல் அவரைத் தான் வணங்கி வருகிறேன். ஆனாலும் நிம்மதியில்லை, என்றார். சொற்பொழிவாளர் சிரித்தார். உலக வாழ்க்கை பரந்தாமனால் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது. குழந்தைப் பருவம் கவலையில்லாதது. வாலிபம் மகிழ்ச்சிக்கானது. குடும்பஸ்தப் பருவம் கடமைக்கானது. வயோதிகம் கடமை முடிந்து ஓய்வுக்கானது. வாலிபப்பருவம் குளம் போன்றது. நீந்தி கடந்து விடலாம். குடும்ப வாழ்வோ கடல் போன்றது. ஆசை, நிராசை என்ற திமிங்கிலங்கள், சுறாக்கள் உழன்றபடியிருக்கும். நீந்திக்கரை சேர்வது சிரமம். அது ஒரு பிறப்பில் தீராது. பகவானை இன்னும் கெட்டியாகப் பிடி. பிறவிக்கடலை கடக்க அவர் அருள்வார், என்றார். குடும்பஸ்தருக்கு மனம் தெளிந்தது. வீடு திரும்பினார். |
|
|
|