|
காகங்களின் பார்வை ஒரு பக்கமாக இருப்பது போல் ஒரு தோற்றம் தெரியும். இதற்கான காரணம் தெரியுமா? சீதையின் மடியில் ராமன் படுத்திருந்தார். அப்போது, இந்திரனின் மகனான ஜெயந்தன் காக வடிவெடுத்து சீதை மேல் கொண்ட மோக எண்ணத்துடன், அவளது மார்பில் கொத்தினான். ரத்தம் வழிந்தது. ராமன் கண்விழித்து, நடந்ததை அறிந்தார். பயந்து போன காகம் பறந்தது. ராமன் ஒரு தர்ப்பையை பாணமாக்கி எறிந்தார். ராமபாணம் தப்பியதில்லை. அது காகத்தை விரட்டியது. ஜெயந்தனை அவனது தந்தை கூட காப்பாற்ற முன்வரவில்லை. வந்தால் விபரீதமாகும் என்பதும் அவனுக்குத் தெரியும். வேறு வழியின்றி, காகம் ராமனிடமே சரண் அடைந்தது. காகமே! உன்னைவிட்டு விடுகிறேன். ஆனால், ராமபாணம் தப்பாது. அதனால் என்ன செய்யலாம் என்று நீயே சொல், என்றார். ராமா! அந்த அஸ்திரம் என் வலது கண்ணை மட்டும் பறிக்கட்டும். உயிர் பிழைத்துக் கொள்கிறேன், என்றான். கருணைக்கடலான ராமனும், அவ்வாறே செய்தார். அன்றுமுதல், காக இனம் ஒரு கண் பார்வை இழந்தது போல் சாய்ந்து பார்க்கின்றன.
|
|
|
|