|
நண்பர் நிலைகுலைந்து போயிருந்தார். திடீரென்று அவருக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டதாம். உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டுமாம். என்னையும் உடன் வரச் சொன்னார். நான் எதுக்கு..? என்று தயங்கினேன். தனியா போனா, மறதியில வக்கீல் வீட்டுக்குப் போயிடுவேனோன்னு பயமா இருக்கு! என்றார். போனேன். வரவர எதுவுமே நினைவு இருக்கமாட்டேங்குது, டாக்டர்! காலைல பேப்பர்ல படிக்கிற நியூஸெல்லாம் மத்தியானமே மறந்துடுது! என்றார். நண்பர். வெரிகுட்! அப்ப நீங்க கொடுத்துவெச்சவர்னு சொல்லுங்க! என்று வெடிச் சிரிப்பு சிரித்த டாக்டர், இப்ப வர்றதெல்லாம் என்ன சந்தோஷமான நியூஸாவா இருக்கு? கொலை, கொள்ளை, ஊழல், ஜெயில், பெயில்னு எல்லாம் குப்பைச் செய்திகள். உடனுக்குடன் மறந்துடறதே நல்லது! என்றார்.
பகல்லே சாப்பிடறது சாயந்திரம் சூரியன் அஸ்தமிக்கிறதுக்குள்ளே மறந்துடுதே டாக்டர்... அதுக்கென்ன சொல்றீங்க? என்னத்த சொல்றது? ஒண்ணு, உங்க வீட்டு மாமியோட கைமணம் ஓகோன்னு இருக்கணும்; அல்லது, வாயில வைக்க முடியாததா இருக்கணும். ரெண்டும் இல்லாம, ரெண்டுங்கெட்டானா சமையல் இருந்தா, இப்படித்தான் மறந்துபோகும்!-ஜோக் மூடிலிருந்து மாறவில்லை டாக்டர். அதைச் சற்றும் கவனியாதவராக, போன வாரம் பிரதோஷத்துக்கு சிவன் கோயிலுக்குப் போகணும்னு வீட்டை விட்டுப் புறப்பட்டேன், டாக்டர்! ஞாபக மறதியா அனுமன் சன்னதியில வந்து நின்னுட்டேன்னா பார்த்துக்குங்க! என்று நண்பர் சொன்னதை அக்கறையுடன் கேட்டுக் கொண்டார் மருத்துவர். நண்பரின் இந்த மறதிக்கு அவருடைய வயதுதான் முக்கியக் காரணம் என்பது அவருக்குப் புரியாமல் இல்லை. அதே மாதிரிதான் டாக்டர்... என்னோட நட்சத்திரப் பிறந்த நாள் அன்னிக்குக் கோயிலுக்குப் போனேன். அர்ச்சனைத் தட்டை வாங்கிக்கிட்ட குருக்கள், என் வீட்டுல இருக்கிற அத்தனை பேரின் பெயர், நட்சத்திரங்களைக் கேட்டார்...
உங்களுக்கு உங்க நட்சத்திரமே மறந்து போயிருக்குமே? சரியாச் சொன்னீங்க, டாக்டர்! நல்லவேளை, என் மனைவியோட நட்சத்திரத்தை மட்டும் கரெக்டா சொல்லிட்டேன். அட, ஆச்சரியமா இருக்கே! எப்படி?! அவளுக்கு ரேவதின்னு அவளுடைய நட்சத்திரத்தையே பெயரா வச்சது எனக்கு சவுகரியமா போச்சு! ஏன், டாக்டர், இதுமாதிரி ராசி, நட்சத்திரமெல்லாம்கூட மறந்துட்டா, எப்படி டாக்டர் கோயில்லே போய் அர்ச்சனை பண்றது? உண்மையான கவலையுடன் கேட்டார் நண்பர். டோன்ட் வொர்ரி! ஓய்வா இருக்கவேண்டிய இந்த வயசுல உங்களுக்கு மறதிங்கிறது கடவுளோட வரம்னு நினைச்சுக்குங்க! உடம்பு ஆரோக்கியத்தைப் பத்தி மட்டும் கவலைப்படுங்க! பை த பை... போறப்போ என்னோட ஃபீஸைக் கொடுக்க மறந்துடாதீங்க! என்று தமாஷாகக் கண் சிமிட்டிச் சிரித்த டாக்டர்... அப்புறம்...இனிமே எப்போ கோயிலுக்குப் போனாலும், அர்ச்சனையை சுவாமி பெயருக்கே பண்ணிடச் சொல்லுங்க. வீட்டுல நாலு பேரோட நின்னுடாம, உலகம் பூரா இருக்கறவங்களோட ÷க்ஷமத்துக்காக கடவுள்கிட்டே வேண்டிக்குங்க! என்றார். |
|
|
|