|
அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அந்த நண்பனின் வீட்டுக்குச் செல்வது அதுதான் முதல்முறை. நண்பனின் அம்மா அன்புடன் வரவேற்றார். சுக்குக் காபி குடிக்கிறீங்களா? நான் கலக்கும் சுக்குக் காபி நல்லா இருக்கும் என்றவர், டேய், நீயும் ஒரு வார்த்தை சொல்லுடா... என்றார் மகனைப் பார்த்து. நண்பனும், குடிடா! என்ன யோசிக்கிறே? சுக்குக் காபி பிடிக்கலேன்னா சொல்<<லு... வேற ஏதாவது கொண்டுவரச் சொல்றேன் என்றான். அதற்குள், அறைக்குள் இருந்து வெளிப்பட்ட நண்பனின் மனைவி என்னை வரவேற்றுவிட்டுக் கேட்டார்... சார்! உங்க கால் வீங்கியிருக்கே, ஏன்? ரொம்ப நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்தேன் என்று பதில் சொன்னேன். உடனே நண்பனின் மனைவி, வெந்நீரிலே கொஞ்சம் உப்பு போட்டு, வெதுவெதுப்பான நீரில் ஒரு இருபது நிமிஷம் காலை வெச்சிட்டிருந்தா சரியாயிடும் என்று டிப்ஸ் கொடுத்தார். உடனே நண்பனின் அம்மா, என் மருமகளுக்கு இந்த மாதிரி சின்னச் சின்ன உபயோகமான விஷயங்கள் நிறைய தெரியும்! என்று பாராட்டுதலாகக் கூற, நண்பனுடைய மனைவியின் முகத்தில் மலர்ச்சி. அதை நண்பன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. என் நண்பன் என்னைத் தனது அறைக்குள் கூட்டிச் செல்ல, அவன் மனைவியின் முகத்தில் வாட்டம்!
உள்ளே நுழைந்ததும், குரலைத் தாழ்த்திக் கொண்டு நண்பனிடம் கேட்டேன்... உன் மனைவி, அம்மா ரெண்டு பேருமே உன்னிடம் அங்கீகாரத்தை எதிர்பார்க்கறாங்க, நாலு வார்த்தை பாராட்டினால் தான் என்ன? நண்பனின் முகத்தில் குழப்பம் பிறகு. அம்மா நல்லாவே சுக்குக் காபி போடுவாங்கன்றது ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே! மலர்விழி நிறைய புக்ஸ் படிக்கிறா. அவளுக்கு வீட்டுக் குறிப்புகள் நிறையத் தெரிஞ்சிருக்கிறதுலயும் ஆச்சரியம் ஒண்ணும் இல்லை. அதுபோக, வீட்டில் இருப்பவர்களைப் பாராட்டுறது ரொம்பச் செயற்கையா இருக்காதா? எனக்கு வெளிவேஷம் போடத் தெரியாது! என்றான். உடனே நான், அப்படியில்லை. நல்ல விஷயங்களை வாய்விட்டுப் பாராட்டுவதும் நல்ல விஷயம்தான் என்று கூறிவிட்டு, சம்பாதியின் கதையை அவனுக்கு விவரித்தேன். சம்பாதி, ஜடாயு ஆகிய கழுகுகள் இருவரும் சகோதரர்கள். இளம் வயதில் இருவரும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டார்கள். யார் அதிக உயரம் பறக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு இடையேயான பந்தயம்.
இருவரில் ஜடாயு தன் சகோதரனை விடவும் சற்று உயரத்தில் பறந்தான். உடம்பெல்லாம் வெப்பம் தகிக்கத் தொடங்கியது. தான் உயர உயரப் பறந்து சூரியனையே நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. இன்னும் சற்று உயரத்தில் பறந்தால், ஜடாயு கருகிப்போயிருப்பான். ஆனால், அதற்குள்ளாக சம்பாதி அவனைவிட உயரமாகப் பறந்து சென்று, தனது இறக்கைகளை அகலமாக விரித்து, ஜடாயுவின் மீது நிழல் பரப்பி, அவனைக் காப்பாற்றினான். ஆனால், அதன் காரணமாக சம்பாதியின் இறக்கைகள் எரிந்துபோக, அவன் பூமியில் விழுந்தான். அதன்பிறகு, ஆயுள் முழுக்க அவன் இறக்கைகள் இல்லாமலேயே வாழ்ந்தான். மேலும், காலப்போக்கில் சகோதரர்கள் இருவரும் பிரியவும் நேர்ந்தது!
காலம் கழிந்தது. ஒரு நாள், சம்பாதி இருக்கும் இடத்துக்கு அனுமன். அங்கதன் முதலான வானரர்கள் சிலரும், கரடி அரசன் ஜாம்பவானும் வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்டதும், அவர்கள் யாரென்று அறியாமல், இன்றைக்கு நல்ல விருந்துதான் என்றபடி அவர்களை நோக்கி மெள்ள முன்னேறி வந்தார் சம்பாதி. சீதையை எங்கு தேடியும் கிடைக்காமல் களைப்புற்றிருந்த வானரர்களும் ஜாம்பவானும், உருவில் பெரிய சம்பாதியைக் கண்டு திடுக்கிட்டனர். ஜாம்பவான் தன் நண்பர்களிடம், கழுகுகளிடம்தான் ஒன்றுக்கு ஒன்று எத்தனை வித்தியாசம்! நாம் சோர்ந்துபோய் ஆதரவில்லாமல் இருக்கும் நிலையில், இந்தக் கழுகு நம்மைத் தின்ன வருகிறது. ஆனால், ஜடாயு என்ற கழுகோ சீதாதேவியைக் காப்பதற்காகத் தன் <உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்கு உத்தம குணம் கொண்டதாக இருந்தது. அதுவல்லவா மேன்மையான பறவை! என்றார். தன் சகோதரனின் பெயரைக் கேட்டதும் சம்பாதி திடுக்கிட்டார். ஜடாயுவுக்கு என்ன ஆனது? <உடனே கூறுங்கள் என்று பதறினார். ராவணனுடன் போரிட்டு ஜடாயு இறந்ததை ஜாம்பவான் மூலம் அறிந்து, சம்பாதி கதறினார். பிறகு ஒருவாறு தன் மனத்தைத் தேற்றிக்கொண்டு, எப்படியோ, என் சகோதரன் பற்றிய தகவலை நீங்கள் சொன்னதற்கு நன்றி. நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார்.
வானர வீரர்கள் நடந்ததை விவரித்தார்கள். உடனே சம்பாதியின் முகத்தில் ஒரு மலர்ச்சி! உங்களுக்கு உதவ எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி! இங்கிருந்து நூறு யோஜனை தொலைவில் இலங்கை என்றொரு தீவு இருக்கிறது. அதன் மன்னனான ராவணன், தன்னுடைய புஷ்பக விமானத்தில் பெண் ஒருத்தியைக் கவர்ந்து செல்வதைக் கண்டேன். அவள்தான் நீங்கள் சொல்லும் சீதாதேவியாக இருக்கவேண்டும் என்றார். அதன்பிறகே அனுமன் கடல் கடந்ததும், சீதையைக் கண்டு வந்து ஸ்ரீராமனிடம் விவரித்ததுமான முக்கிய நிகழ்வுகள் நடந்தன. கதையைக் கூறி முடித்ததும், நண்பன் சிறு புன்னகையுடன் என்னைப் பார்த்தான். இந்தக் கதையின் மூலம் என்ன சொல்ல வருகிறாய்? என்ற கேள்வி அவன் பார்வையில்! நான் தொடர்ந்தேன்... இன்னொரு விஷயத்தையும் உன்னிடம் சொல்ல வேண்டும். சீதாதேவி இலங்கையில் இருப்பது தெரிந்ததும், யாரேனும் ஒருவர் கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவானது. ஆனால், பரந்துவிரிந்த சாகரத்தை யாரால் தாண்ட முடியும்? அனுமன்தான் அதற்கு ஏற்றவர் எனத் தீர்மானித்தார் ஜாம்பவான். ஆனால், அனுமன் தயங்கினார். ஜாம்பவான் என்ன செய்தார் தெரியுமா? அனுமனின் பலத்தை அவருக்குச் சுட்டிக் காட்டினார். சிறுவயதில் அனுமன் செய்த குறும்புக் காரியங்களால், அவர் முனிவர்களின் சாபத்துக்கு ஆளாக நேர்ந்தது. வேறொருவர் சுட்டிக் காட்டும் வரையில் உனது பலத்தை நீ உணர்ந்துகொள்ள மாட்டாய் என்று சபித்திருந்தார்கள். இப்போது ஜாம்பவான் அனுமனின் பலத்தை, வீரத்தை அவருக்குச் சுட்டிக்காட்டியதுமே சிலிர்த்து எழுந்தார் அனுமன். பிறகு நடந்ததுதான் எல்லோருக்கும் தெரியுமே!
முதலாவது, ஜாம்பவான் தனது உள்ளக்கிடக்கையை மறைக்காமல் வெளிப்படுத்தியது. அதனால் அவர்கள் யார் என்பதை சம்பாதி தெரிந்து கொண்டான். அவர்களுக்குத் தன்னால் இயன்ற <உதவியைச் செய்தான். தகவல் தொடர்பு எத்தனை முக்கியம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இரண்டாவது, அனுமனின் பலத்தை அவனுக்கு அவர் எடுத்துச் சொன்னது. நாமும் ஜாம்பவான்களாகத் திகழவேண்டும். உன்னால் முடியும்; உனக்குத் திறமை இருக்கிறது என்று மனம் விட்டுப் பிறரைப் பாராட்ட வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களும் சந்தோஷம் தரும்; ஆனால், சந்தோஷம் என்பது சின்ன விஷயம் இல்லை! ஒருவரது செயலுக்காக நீ மகிழும் தருணத்தில், அதை உன் உள்ளத்தில் பூட்டிவைத்துக் கொள்வதால் பயன் இல்லை. உன் பாராட்டுதல் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்போது, அது அவர்கள் அந்த நல்ல செயலைத் தொடர்ந்து செய்வதற்கு ஊக்கமாக அமையும். உன்னை அறியாமல் நீயும் அப்படியான செயல்களைச் செய்யத் துவங்குவாய். நீ பாராட்டும்போது உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உன் மீது இன்னும் அன்பு கொண்டு, உன்னோடு இன்னும் நெருக்கமாக இருக்க ஆசைப்படுவார்கள் என்று கூறி முடித்தேன். அதே நேரம், மணக்கும் சுக்குக் காபியுடன் அம்மா வர, குடிச்சுப் பாரு! இன்னொரு கப் கிடைக்குமான்னு கேட்பே! எங்கம்மா போடும் சுக்குக் காபி அத்தனைப் பிரமாதமா இருக்கும் என்றான். அவன் அம்மாவின் முகம் மலர்ந்தது. அவனே தொடர்ந்து, கையில மருதாணி அழுத்தமா, சிவப்பா பத்தமாட்டேங்குதுன்னு உன் வொய்ஃப் சொன்னதா சொன்னியே... லேண்ட்லைனுக்கு அவங்களைப் பேசச் சொல்லு! என் வொய்ஃப் நூறு டிப்ஸ் தருவா. எங்கேர்ந்துதான் அத்தனையும் படிக்கிறாளோ! என்றான். என் கதை உடனடியாக அவனுக்குள் பலத்த மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். |
|
|
|