|
ஒரு வியாபாரிக்கு தொழிலில் நஷ்டம். கடன்தொல்லை தாளவில்லை. மனக் கஷ்டம் தீர ஒரு குருவிடம் ஆலோசனை தருமாறு வேண்டினார்.குரு கேட்டார். அதோ! அந்தப் பாதையில் ஒரு வண்டி வருகிற சத்தம் கேட்கிறது. அது என்ன வண்டியப்பா?.மோட்டார் சத்தம் கேட்கிறது. அநேகமாக கார் அல்லது வேன் ஆக இருக்கலாம்... குருவே. இன்னொரு வண்டியின் சத்தம் கேட்கிறதே! அது என்ன? வியாபாரி ஊன்றிக் கவனித்து விட்டு, அப்படி ஏதும் சத்தம் என் காதில் விழவில்லையே! என்றார். இப்போது குரு பதிலளித்தார். மகனே! பாதையில் வரும் ஒரு வாகனத்தை இன்னதென்று ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. இன்னொரு வாகனம் வருகிறதா... இல்லையா என்று கூட தெரியவில்லை. வாழ்க்கையும் இப்படித்தான். அங்கே அடுத்து வருவது என்ன என்று கணிக்க முடியாது. வண்டிச் சத்தத்தை வைத்து, ஓரளவு ஊகிப்பது போல, இப்படி செய்தால் இன்ன விளைவு ஏற்படுமென ஓரளவு ஊகிக்கலாம். ஆனால், அப்படித் தான் நடக்குமென அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆகவே, திட்டமிட்டு பணி செய்வது நம் கடமை. முடிவெடுக்க வேண்டியது அந்தக் கடவுளின் கடமை. கடவுளை நம்பு. இன்றைய இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு கடவுளை நம்பு. நாளை ஜெயிப்பாய். லாபமடைவாய், என்றார். வியாபாரிக்கு இப்போது தான் வாழ்வின் யதார்த்தம் புரிந்தது. |
|
|
|