|
பணக்காரன் ஒருவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. பெரும் கடனாளியாகி விட்டான். அவனுடைய ஒரே மகள் திருமணத்தை நடத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. கல்யாணச் செலவுக்காக யாரிடமாவது உதவி கேட்கலாம் என முடிவெடுத்தான். அவனது தந்தை, யாரிடம் உதவி கேட்கப் போகிறாய்? என்று கேட்டார். உறவினர், நண்பர், அக்கம்பக்கத்தினர் அனைவரிடமும் தான் என்றான். அவர்கள் பணம் கொடுக்க மறுத்தாலோ அல்லது மிகக் குறைவாக கொடுத்தாலோ என்ன செய்வாய்? என்றார். போயா போ! நீயும் உன் பணமும் என்று அவர்களிடம் கோபித்துக் கொண்டு வந்து விடுவேன் என்றான், முன்னாள் பணக்காரன். அதற்கு அவர், என் அருமை மகனே! யாரிடமும் கோபித்துக் கொள்ளாதே! ஒவ்வொருவரின் வீட்டுக்குச் செல்லும் போதும், உனக்கு அங்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை ஏற்கனவே கடவுள் தீர்மானித்து விட்டார் என்று எண்ணிக் கொள். அப்போது கோபத்திற்கு பதிலாக நன்றியுணர்வு வந்து விடும். அப்போது அங்கிருந்து மகிழ்ச்சியாக புறப்படுவாய் என்று அறிவுரை சொன்னார். கொடுப்பதற்குத் தான் என்பதில்லை! வாங்குவதற்கும் நல்ல மனம் வேண்டும் என்பதை உணர்ந்தான் மகன்.
|
|
|
|