|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கபீர்தாசரும், கோபண்ணாவும்! |
|
பக்தி கதைகள்
|
|
கோபண்ணாவின் இல்லத்தில் அவர் தாய் தந்தையரால் மட்டுமின்றி அவரது பாட்டன் பாட்டிமார்களால் காலம் காலமாக வணங்கி வரப்பட்ட ஒரு ராம விக்ரகம் ஒன்று ஒரு பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதுபோல விக்ரகம் இல்லாத வீடுகளில் சாளக்ராமம் எனும் கல் இருக்கும். அந்தக் கல்லில் இறைவன் உறைந்திருப்பதாக, குறிப்பாக மகாவிஷ்ணு சாளக் ராமகல்லில் உறைந்திருப்பதாகப் பொருள். எனவே அதை பெரிதும் பக்தியுடன் போற்றி மிக பாதுகாப்புடனும் தூய்மையுடனும் வைத்திருப்பார்கள். அது மட்டுமல்ல... அந்த விக்ரகத்தை உயிருள்ள ஜீவனாகக் கருதி அதற்கு தினமும் நைவேத்யம் செய்வதும் வழக்கமாக இருக்கும். இப்படி நைவேத்யம் காணும் சிலாரூபமும், சாளக்ராமும் உள்ள வீட்டில் மகாலட்சுமியும் நிரந்தர வாசம் செய்வாள். அந்த இல்லமே ஒரு வைகுந்தமாகி விடுவதால் அங்கே நல்லதே நடந்து சவுபாக்யமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
மனிதர்களை கர்மத்தின் நிமித்தம் கட்டி வைக்க முயலும் கோள்கள் கூட இப்படிப் பட்டவர் இல்லங்களில் செயலற்றுப் போய் அவர்களுக்கு ஏவலாளியாக சேவகம் செய்யும். ஒரு நாள் தவறாமல் தொடர்ந்து பூஜையும் நைவேத்யமும் காணப்படும் இல்லங்களுக்கே உரிய சிறப்பு இது. இன்றும் நம் தேசத்தில் இதுபோல பல இல்லங்கள் உள்ளன. அந்த இல்லத்தவர்கள் முக்கிய காரணமாக வெளியூர் செல்ல நேரிட்டால் அந்த விக்ரகத்தையும், சாளக்ராமத்தையும் பாதுகாப்பாக உடன் எடுத்துச் சென்று, சென்ற இடத்தில் தங்கள் பூஜை மற்றும் நைவேத்யத்தைத் தொடர்வார்கள். அந்த விடாத பக்தி உணர்வும் முயற்சியும் தான் அவர்களையும் சராசரி மனிதனாக வைத்திராமல் ஒரு மேலான நிலைக்கு இட்டுச் செல்லும்.
அப்படிப்பட்ட ஒரு ராமவிக்ரகம் கோபண்ணாவின் முன்னோர்களாலும் பூஜிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு நாள் கோபண்ணா பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வயதானவர் வேடத்தில் கபீர்தாசர் கோபண்ணா இல்லத்துக்கு வந்தார். கோபண்ணாவோ பூஜையில் மும்முரமாய் இருக்க கபீர்தாசர் பொறுமையாக பூஜை முடியும் வரை காத்திருந்தார். பூஜை முடிந்து கோபண்ணா வரவும் கபீர்தாசரின் குருசோதனை தொடங்கி விட்டது. என்னப்பா... ஒரு வயதான யாத்ரீகன் வந்திருக்கிறேன். என்னை உபசரிக்காமல் பூஜையே குறியாக இருந்து விட்டாயே. யாத்ரீக உபசாரத்தை விட பூஜை பெரியது என்று உனக்கு யார் சொன்னது? என்று ஆரம்பித்தார். மன்னியுங்கள் சுவாமி.. நான் பூஜிக்கும்போது என்னையே மறந்து விடுகிறேன். அதனால்தான் உபசார எண்ணம் ஏற்படவில்லை... என்றார் கோபண்ணா.
இது சாமார்த்யமான பதில்... பூஜையின்போது நீ உன்னையே மறந்து விடுகிறாய் என்றால் நீ என்ன அத்தனை பெரிய ராம பக்தனா? நான் அப்படிச் சொல்லவில்லை... என்னையே மறந்து விடுகிறேன் என்று தான் சொன்னேன்... இது பாகவத அபசாரம்... அதற்கு தான் மன்னித்துவிட வேண்டினேனே?... அப்படி எல்லாம் உடனே என்னால் மன்னிக்க முடியாது. எங்கே நீ வணங்கும் அந்த ராமவிக்ரகத்தை நான் காணலாமா? தாராளமாக...-கோபண்ணா கபீர் தாசரிடம் பேழையிலுள்ள ராமவிக்ரகத்தைக் காண்பித்தார். அடடே... இது என்ன, ஆனாலும் மிகப்பழையதாக கருப்படைந்து போயுள்ளதே? இருக்கலாம்...ஆனால் எனக்குத் தெரிந்து ஏழு தலைமுறைகளாக வழிபடப்பட்டு வருகிறது சுவாமி. இப்படிக் கருப்படைந்த விக்ரகத்தை வழிபடக்கூடாது. இதை தூக்கிப்போடு. பளபளவென்று சொர்ணத்தால் ஆன தங்கராம விக்ரகத்தை நான் உனக்குத் தருகிறேன். நாளைமுதல் அதற்கு நீ பூஜை செய்... கபீர்தாசர் அப்படிச் சொல்லவும் கோபண்ணாவிடம் ஒரு பகீர் உணர்வு.
மன்னிக்க வேண்டும்... நான் இந்த ராம விக்ரகத்தின் பின் என் முன்னோர்களையும் ஒரு சேர பார்க்கிறேன். உங்கள் சொர்ண விக்ரகம் உங்களிடமே இருக்கட்டும். நான் இதையே பூஜிக்க விரும்புகிறேன்... என்றார். அட என்னப்பா நீ... தங்கராமனை விடவா இந்த கருப்பு ராமன் உனக்கு உயர்வாகப் போய்விட்டான்? மன்னிக்க வேண்டும் எம்பெருமான் ராமச்சந்திரனே பிறப்பால் கரியவன் தான்... எனவே கருப்பாக இருப்பதால் பாதகமில்லை... நீ பதிலுக்கு பதில் கூறி அபசாரத்தை தொடர்கிறாய். சரி... நான் தரும் தங்க ராமனை இந்த கருப்பு விக்ரகத்தோடு சேர்த்து வைத்துக்கொள்... வேண்டாம். தங்களுக்குரியது தங்களிடமே இருக்கட்டும். என்ன நீ... எதற்கெடுத்தாலும் பதில் கூறுகிறாய். இப்போது நான் என்ன செய்கிறேன் பார். என்ற கபீர்தாசர் பேழையில் இருந்த அந்த ராமவிக்ரகத்தை வேகமாக கையில் எடுத்தார். விறுவிறுவென்று வெளியேறத் தொடங்கினார். அதிர்ந்த கோபண்ணா பின் தொடர்ந்தார்-புலம்பவும் செய்தார்.
சுவாமி... என்ன இது... தாங்கள் இப்படி நடந்து கொள்வது அழகல்ல... என் விக்ரகத்தைத் தாருங்கள். முடியாது...இதை நான் குளத்தில் தூக்கிப்போடப் போகிறேன்...-என்றவர் அப்படியே கோபண்ணா வீட்டை ஒட்டியுள்ள குளத்திலும் தூக்கிப் போட அந்த விக்ரகப்பேழை குளத்து நீரில் மூழ்கியது. கோபண்ணாவுக்கு அதைப் பார்த்து மயக்கமே வந்து விட்டது. சுவாமி...என்ன காரியம் செய்து விட்டீர்கள்...இது மிகக்கொடுமை. என்று கண்ணீர் விட்டார். கவலையை விடு... இந்தா தங்கராமன். இந்த தங்கராமனை துதிக்க தங்கபுஷ்பங்களையும் தருகிறேன். இனி இதற்குப் பூஜை செய். சுவாமி...இந்த தங்கராமனை நான் பூஜிக்க முடியாது. எனக்கு என் முன்னோர்கள் வழிபாடு செய்த அந்த ராமன் தான் முக்கியம். பைத்தியக்காரா... இந்த தங்க விக்ரத்திலும் ராமபிரான்தானே இருக்கிறான்-பிறகென்ன? சுவாமி...என் ஐயன் இந்தத் தங்கத்தில் மட்டுமல்ல அவன் எல்லாவற்றிலும் நீக்கமற நிரம்பியுள்ளவன். எனவே தங்கத்தில் இருப்பதால் அதிக சிறப்பு என்று நான் கருதவில்லை... சிறப்பாகக் கருதாவிட்டால் பரவாயில்லை. நான் சொல்கிறேன் இனி நீ இந்த தங்கராமனைத்தான் பூஜிக்க வேண்டும். அப்படி எல்லாம் வற்புறுத்தாதீர்கள். இது உங்களுக்கு அழகல்ல...
உனக்கு நான் குருவாக வந்துள்ளேன். என் பேச்சைக் கேட்டால் தான் நீ நல்ல சீடன். நான் குரு துரோகம் செய்ய விரும்பவில்லை. அதேசமயம் என் முன்னோர்களையும் மதிக்க விரும்புகிறேன். சரி... நான் ஒரு வழிசொல்கிறேன் கேட்பாயா? சொல்லுங்கள் நான் இப்போது உனக்கு ராமநாமத்தை உபதேசம் செய்கிறேன். பின் நீ அதைக் கூறி குளத்தில் மூழ்கிய விக்ரகத்தை அந்த ராமனிடமே கேள். அவன் தந்தால் அதையே பூஜிப்பாய். அப்படி தராதபட்சத்தில் இந்த தங்கராமனை ஏற்க வேண்டும். சரியா? இது என்ன சோதனை...என் பேச்சைக் கேட்டு அந்த ராமன் வரவேண்டுமே? நீ உண்மையான பக்தி செய்திருந்தால் வருவான். இல்லாவிட்டால் என் பேச்சைக் கேள். இப்போது நீங்கள் சொன்னபடி நான் செய்தாலும் உங்கள் பேச்சை கேட்டதாகத் தானே பொருள். ஆம்...குருநாதன் பேச்சைக் கேட்பதில் தவறில்லையே. அதுவும் சரிதான்... சரி தாங்கள் எனக்கு மந்த்ரோபதேசம் செய்யுங்கள். இனி நடப்பதெல்லாம் அவன் சித்தம். நன்றாகக் கேட்டுக்கொள். குளத்தில் மூழ்கிய ராமன் வராவிட்டால் என் பேச்சைக்கேட்டு, அதன்படி மட்டுமே நீ நடக்க வேண்டும்.
உத்தரவு சுவாமி... இவ்வேளையில் எனக்கு ஒரே பலமான விஷயம் நான் செய்த பூஜையைவிட என் முன்னோர்கள் செய்ததுதான். அதற்கு ஒரு சக்தி இருப்பது உண்மையானால் நாங்கள் பூஜித்த அந்த ராமனே நிச்சயம் வருவான். என்ற கோபண்ணாவுக்கு கபீர்தாசரும் மந்த்ரோபதேசம் செய்வித்தார். எந்த மந்த்ரோபதேசத்தை திருடி அடைந்தாரோ அதைத் தேடிவந்து அளித்தார் கபீர். அப்படி அளித்ததன் பின்னே பல நுட்பமான பொருள் உள்ளது. கோபண்ணாவும் உபதேசம் பெற்ற நிலையில் கண்ணீர் மல்க தன் வீட்டு ராமவிக்ரகம் தன் வசப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கத் தொடங்கினார். அந்த பிரார்த்தனைக்கு ராமபிரானும் செவி சாய்த்திட மூழ்கிய குளத்திலிருந்து அப்படியே மேலே வந்து மிதக்கத் தொடங்கிய அந்தப் பேழை கோபண்ணா நோக்கியும் வந்தது. கோபண்ணாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. கிழவராக இருந்த கபீர்தாசரும் சுயஉருவம் கொண்டு புன்னகை பூத்தார். சுவாமி நீங்களா? நானேதான்...என்ன கோபண்ணா அதிகம் சோதித்து விட்டேனா?
சுவாமி...சோதனை என்னும் பெயரால் என்னை ஆட்கொண்டல்லவா அருள் செய்துள்ளீர்கள்... உண்மைதான்..நீ பொருளாசை பொன்னாசை இல்லாதவன்! அதே சமயம் குருவின் கட்டளையையும் மீறாதவன். உன்முன்னோர் வழியையும் விடாமல் பக்தியிலே தெளிவுடையவனாகவும் இருக்கிறாய். ராமபிரானின் திருமந்திர உபதேசத்திற்காக மட்டுமல்ல அவனே உன்னை வழி நடத்துபவன் என்பதை உனக்கு உணர்த்தவே இந்த நாடகம்-என்றார் கபீர்தாசர். அடுத்த நொடியே கோபண்ணாவும், சுவாமி...என்பொருட்டு கருணை செய்த ராமபிரானின் தரிசனமும், அவன் கருணை மொழிகளையும் நான் கேட்க முடியுமா? என்று தான் கேட்டார். |
|
|
|
|