|
ஞானி ஒருவர் தன் சீடர்களிடம், நான் நாளை தொலைதூர நாட்டிற்குப் பயணம் போகிறேன். மீண்டும் இங்கே திரும்ப மாட்டேன்! என்றார். தங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து போவதற்கு முன் குரு ஏதாவது அறிவுரை சொல்வார் என சீடர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மறுநாள் வழக்கம் போல் ஞானி எழுந்தார். குளித்தார். பிரார்த்தனை செய்தார். பழம் உண்டார். வந்தவர்களுடன் உரையாடினார். எல்லா வேலைகளையும் நேரம் தவறாமல் சரியாகச் செய்தார். எப்பொழுதும் போல் மதிய உணவு உண்டார். ஓய்வு எடுத்தார். பின் தன் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அதைக் கண்டு ஏமாற்றம் அடைந்த சீடர்கள், குருவே! நீங்கள் எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லப் போகிறீர்கள். போவதற்கு முன் எங்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்லக் கூடாதா? என்றனர். புன்னகைத்த ஞானி, அறிவுரையாக நான் உங்களுக்குச் சொல்லக்கூடியதைத் தானே இன்று முழுவதும் செய்து கொண்டிருந்தேன்! என்றார். எப்போதும் திட்டமிட்ட சரியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட சீடர்கள், ஞானிக்கு விடை தந்தனர். |
|
|
|