|
ஐயா! வடக்கு நாதரின் தங்கக் கண் தொலைஞ்சு போயிட்டது. கோயில் அதிகாரிங்க கோயில்ல சேவகம் செய்கிற எல்லாரையும் அடிச்சு கஷ்டப்டுத்துறாங்க. நீங்கதான் மனதுவெச்சு இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டணும்-சொன்னவர் பவ்யமாக பதிலை எதிர்பார்த்து தவித்திருந்தார்.வா, போவோம்-என தலக்குளத்தூர் பட்டத்ரி புறப்பட்டார். சோழி உருட்டி பிரச்னம் பார்க்கும் கலையை பரசுராமரிடம் கற்றவர் பட்டத்ரி. குளத்தில் குளித்து ஈர முண்டோடு வடக்கு நாதரின் கண் அணி எங்கே போயிற்றென்று சோழி உருட்டினார். காக்காய் செய்த வேலைக்கு பணி செய்கிறவங்களை இம்சிக்கலாமா? இன்ன தோப்பிலே, கிழக்கால இருக்கற இன்ன மரப்பொந்தில அந்தக் கண்மலர் இருக்கு. போய், தேடி எடுத்துட்டு வாங்க என்றார். பட்டத்ரி சொல்லி எது பொய்யாகி இருக்கிறது? இன்றும் அது மெய்யாயிற்று. கோயில் நிர்வாகிகள் தங்கள் அவசர நடவடிக்கைக்காகத் தலை கவிழ்ந்தனர்.
திருவதங்கூர் அரசர், நித்தமும் அனந்த பத்மநாப ஸ்வாமியைத் தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார். பத்ம தீர்த்தத்தில் நீராடி, அனந்த பத்மநாபரின் திருவடியில் வாளை வைக்கச்சொல்லி பெற்று வருவார். ஒருநாள் பட்டத்ரியிடம், பட்டத்ரி! நாளைக்கு நான் பத்ம தடாகத்தில் நான்கு புறம் உள்ள கடவுகளில் (படிக்கட்டுகளில்) எந்தக் கடவு வழியாக இறங்கி ஸ்நானம் செய்வேன்னு சொல்ல முடியுமா? என்று சவால் விட்டார். மகாராஜா! வாய் வார்த்தையாக எதையும் நான் சொல்லப்போவதில்லை. நாளைக்கு நீங்கள் இறங்கும் படிகளில் என் கணிப்பு இருக்கும் என்றார் நம்பூதிரி. மறுநாள் விடியற்காலையில் புஷ்கரிணிக்கு வந்தார் அரசர். நான்கு நேர் படித்துறைகளையும் விடுத்து ஒரு மூலைச் சுவரை இடிக்கச் சொல்லி அதன் வழி இறங்கத் தொடங்கினார். அப்போது அவர் காலில், ஓர் ஓலை நறுக்கு சிக்கியது. அதை எடுத்துப் படித்தார் மகாராஜா.
இடித்துப் படியில் இறங்க வேண்டுமென்பது அரசரின் தலைவிதி என்று அதில் எழுதியிருந்ததைக் கண்டு வெலவெலத்துப்போனார் அரசர். ஒருநாள் பட்டத்ரியிடம் ஒருவன் சில நங்கையரின் ஜாதகங்களைக் கொடுத்து, பொருத்தம் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவனது ஜாதகத்தை ஒரு சில விநாடிகள் பார்த்த பட்டத்ரி, எதிரே இருக்கிற பொய்கையில் ஸ்நானம் பண்ணி, கரையிலே இருக்கற ஆலமரத்தை மூணு தடவை பிரதட்சணம் பண்ணிட்டு வா என்றார். பட்டத்ரி வாக்குக்கு மறுவாக்கு ஏது? அப்படியே செய்தான் அவன். மூன்றாவது முறை வலம் வருகையில் தலை சுற்றி கீழே விழ, அவன் ஆத்மா அக்கணமே பிரிந்தது! மறுபிறவியில் திருமணம், விழுதுகளாக சந்ததிகள் எல்லாம் கிட்டும் என்று சூழ இருந்தவர்களிடம் மொழிந்தார் பட்டத்ரி. |
|
|
|