|
வளமாக வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், காலப்போக்கில் பல பிரச்னைகளில் சிக்கி பணத்தை இழந்தார். அமைதி வேண்டி ஒரு துறவியிடம் முறையிட்டார். சுவாமி! பணக்காரனாக இருந்து ஏழையாகி விட்டேன். எல்லா துன்பத்திற்கும் காரணம் ஆசையே என்று உணர்ந்து விட்டேன். இவ்வளவு அடிபட்ட பிறகும், ஆசையைக் குறைக்கும் வழி தெரியவில்லை. அதிலிருந்து அடியோடு விடுபடுவது எப்படி? என்று கேட்டார். புன்னகைத்த துறவி,அப்பனே! எத்தனை வேளை சாப்பிடுகிறாய்? என்று கேட்டார்.பணக்காரனாக இருந்தபோது, நினைத்த போதெல்லாம் சாப்பிட்டேன். இப்போது மூன்று வேளை சாப்பிடுகிறேன்.... என்றார்.சரி! ஒருவேளை உணவை மறந்து விடு, என பதிலளித்தார். துறவியின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார் அவர்.சுவாமி! ஆசையைக் குறைக்க வழி கேட்டால், பட்டினி கிடக்கச் சொல்கிறீர்களே! என்றார். துறவி விளக்கினார். பசியை யாராலும் ஒழிக்க முடியாது. இது ஞானிக்கும் பொருந்தும். அஞ்ஞானிக்கும் பொருந்தும். பசியோடு இருப்பவனிடம், உணவையும், பணத்தையும் கொடுத்தால், முதலில் உணவையே கையில் எடுப்பான். பசியில் உணவைத் தவிர வேறெதிலும் எண்ணம் உண்டாகாது. அதனால், பட்டினி இருக்கப் பழகி விட்டால், ஆசையைக் குறைக்க கற்றுக் கொள்வாய், என்றார். ஆசையைக் குறைக்கலாம். அறவே போக்க முடியாது என்ற உண்மையை முன்னாள் பணக்காரர் புரிந்து கொண்டார்.
|
|
|
|