|
பண்டரிபுரத்தில் ஞானேஸ்வரர் என்ற மகான் இருந்தார். அவரது சகோதரி முத்தாபா. அந்த ஊரில், கர்வம் மிக்க இன்னொரு மகானும் இருந்தார். அவர் பல நூறு ஆண்டுகள் தவம் செய்து, அரிய பெரிய சக்தியையெல்லாம் பெற்றார்.தான் பெற்ற சக்தியின் பலனாக, புலி ஒன்றின் மீது அமர்ந்து ஞானேஸ்வரர் வீட்டுப்பக்கமாக வந்தார். புலியைப் பார்த்து ஊரே நடுங்கி ஒடுங்கி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தது. முத்தாபா வீட்டு முன்பாக மகான் வந்தார்.என்ன இது! புலி மேல் வருகிறீர்! என்றாள்.450 ஆண்டுகள் தவம் செய்து, புலிகள் கூட எனக்கு கட்டுப்படும் நிலைக்கு கொண்டு வந்தேன், என பெருமை பேசினார் மகான்.முத்தாபா கலகலவென நகைத்தாள். ஏன் சிரிக்கிறாய்? என கொதித்தார் மகான். இதற்குப் போய் 450 ஆண்டுகளை வீணடித்திருக்க வேண்டுமா? ஒரே ஒரு பாவம் செய்தால் போதும். பேனாகவோ, பூச்சியாகவோ பிறந்து, இந்த புலியின் மீது ஒட்டிக் கொண்டிருக்கலாம். நீர் என்னடாவென்றால், அரிய பெரிய தவம் செய்து ஏறியதாகக் கூறுகிறீர்!என்றாள். மகானின் கர்வம் போன இடம் தெரியவில்லை.
|
|
|
|