|
விடிந்தால் எதிரி நாட்டுடன் மிகப் பெரிய போர் நடைபெற உள்ளது. எதிரியும் படை பலம் மிக்கவனாக இருப்பதால், போரில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கடினமாக இருந்தது. நேச நாட்டு மன்னருக்கு இப்போரில் எப்படியாவது வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என்ற வெறி. அதற்காகத் தன் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு யோசனை அவருக்கு தோன்றியது. அமைச்சரை அழைத்தார். ""இந்தப் போரில் நமக்கு உதவி செய்ய பக்கத்து நாட்டு மன்னரிடம் கேட்டுப் பார்த்தால் என்ன? என்று கேட்டார். நல்ல யோசனைதான் மன்னா. ஆனால், உடனடியாக அதற்குச் சம்மதிப்பாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் விடிந்தால் போர் நடக்க இருக்கிறதே! என்று ஐயம் வெளியிட்டார் அமைச்சர். ""ஏதாவது பணமோ, பொருளோ லஞ்சமாகக் கொடுத்து அவரை வளைத்துப் போட முடியுமா? என்று கேட்டார் மன்னர். ""மன்னா, அந்தத் தவறை மட்டும் கண்டிப்பாகச் செய்து விடாதீர்கள். ஏனென்றால், பக்கத்து நாட்டு மன்னர் மிக ஒழுக்கமானவர்.
லஞ்சம், ஊழல் என்றால் நம்மை எதிரியாகப் பாவிக்கத் தொடங்கி, நம் எதிரியோடு கைகோர்த்துக் கொண்டு விடுவார், என்று எச்சரித்தார் அமைச்சர். பொழுது விடிந்தது. மூன்று தினங்கள் தொடர்ந்து கடுமையான போர். பக்கத்து நாட்டு மன்னரின் படைகள், நேச நாட்டுப் படைகளுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியதால், வெற்றியைப் பெற முடிந்தது. வெற்றிக் களிப்பில் இருந்த மன்னர் அரண்மனையில் மிகப் பெரிய விருந்து நடத்தினார். அந்தக் களிப்பின்போது அமைச்சர் மெல்ல அரசரின் அருகே சென்று, தாங்கள் எப்படிப் பக்கத்து நாட்டு மன்னரை வளைத்துப் போட்டீர்கள்? அந்த ரகசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டார். ""எதிரி நாட்டு மன்னன் கொடுக்கச் சொன்னதாக கொஞ்சம் பணத்தை நம் ஒற்றன் மூலம் பக்கத்து நாட்டு மன்னரிடம் கொடுக்கச் சொன்னேன். இதனால் சினமடைந்த அந்த மன்னர், நமக்கு நண்பராகி விட்டார் என்றார் கண்ணைச் சிமிட்டியவாறு. |
|
|
|