|
சின்னமனூர் என்ற ஊரில், ஒரு தாத்தாவும், பேரனும் வாழ்ந்து வந்தனர். தாத்தா மிகவும் புத்திசாலி. பேரன் சஞ்சித் ஒரு அடி முட்டாள். எதையும் தானாக செய்வது அவனது வாழ்க்கையில் கிடையாது. எதைச் செய்வதென்றாலும் பிறரைக் கேட்டுத்தான் செய்வான். தாத்தாவுக்கு தனது பேரன் ஒரு முட்டாளாக இருக்கிறானே என்று மிகவும் கவலை. ஆனால், அவன்மேல் உயிரையே வைத்திருந்தார். தந்தை, தாய் எவரும் இல்லாத அச்சிறுவனை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். ஒருநாள் சஞ்சித்தை தனியாக அழைத்தார் அவனது தாத்தா. ""சஞ்சித், நீ எப்போதும் சிறுவனாக இருக்கப் போவதில்லை. எனவே இனிமேலாவது திருந்தி நட, என்று புத்திமதி சொன்னார். அவர் சொன்னதற்கெல்லாம் சஞ்சித் சரியென்று தலையாட்டினான். ஆனால் அவனது இயல்பில் எந்த மாற்றமும் இல்லை. ""இவனை சொல்லித் திருத்த முடியாது. ஏதாவது துன்பத்தில் அகப்பட்டு, தானாகத் திருந்தட்டும், என்று தனக்குத்தானே சொன்னார் தாத்தா. எனினும் தன் பேரனை நினைக்க, அவருக்கு மிகவும் கவலையாக இருந்தது. சில மாதங்களுக்குப் பின் தாத்தா, சஞ்சித்தை பக்கத்து ஊரில் உள்ள தன் நண்பரிடம் வேலைக்குச் சேர்த்து விட்டார். தினமும் அதிகாலையில் போய், மாலையில் திரும்புவான் சஞ்சித். நண்பரிடமிருந்தும் சஞ்சித் பற்றி அடிக்கடி புகார்கள் தாத்தாவுக்குக் கிடைக்கும்.
ஒருநாள் சஞ்சித்தின் முதலாளி வெளியூர் போய்விட்டார். அவரது மனைவி, காலையிலிருந்து சஞ்சித்திடம் ஓயாமல் வேலை வாங்கினாள். மாலையிலும் வேலை முடிய வெகுநேரமாகி விட்டது. தனது அசட்டுத்தனத் தாலும், அலட்சியத்தாலும், சிறிய வேலை செய்வதற்கே அவனுக்குப் பலமணி நேரம் எடுத்தது. அன்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது வெகு நேரமாகி விட்டது. சூரியன் மறைந்து, இருள் பரவ ஆரம்பித்தது. அங்கும், இங்கும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடந்தான் சஞ்சித். பாதி தூரம் வரும்போதே மிகவும் இருண்டு விட்டது. கொஞ்ச நேரத்திலே வானில் நிலவு ஒளி வீசியது. திடீரென்று சஞ்சித் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது. நிலவொளியில் பளபள வென ஒளி வீசிக் கொண்டிருந்தது ஒரு அழகிய சிறிய வெள்ளிப்பெட்டி. "முன்பு ஒருமுறை, வீதியில் இருக்கும் எந்தப் பொருளையும் தொடாதே என்று தாத்தா எச்சரித்தது அவனுக்கு நினைவில் வந்தது. ஆனால், சஞ்சித் தாத்தாவின் சொற்படி நடந்தால் தானே? வேகமாக ஓடிச் சென்று அந்தப் பெட்டியை எடுத்தான். நிலவொளியில் அதை ஆராய்ந்து பார்த்தான். வெள்ளியால் செய்யப்பட்ட பல வேலைப்பாடு நிறைந்த அந்தப் பெட்டியை மெதுவாகத் திறந்தான். உள்ளே இன்னுமொரு சிறிய பெட்டி. ஆவலுடன் அதையும் திறந்தான். சின்னஞ்சிறிய கம்பளிப்பூச்சி ஒன்று அதனுள் இருந்தது. அதைப் பார்த்த, சஞ்சித்திற்கு மிகவும் இரக்கமாயிருந்தது. மெதுவாக அதை எடுத்து நிலத்தில் வைத்தான்.
கம்பளிப்பூச்சி மெதுவாக ஊர்ந்தது. இடது பக்கம் மூன்று தடவையும், வலது பக்கம் மூன்று தடவையும் தனது தலையை அசைத்தது அந்தச் சிறிய கம்பளிப் பூச்சி. திடீரென்று படிப்படியாக வளர்ந்தது. மிகவும் பெரிய, பயங்கரமான பாம்பாக மாறி, சஞ்சித்தைப் பார்த்துச் சீறியது. அதைக் கண்ட சஞ்சித், பயத்தால் நடுங்கிப் போனான். பேச முடியாமல் நாவறண்டது. உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஓட முயற்சி செய்தான். ஆனால், கால்களில் பலமில்லை. பாம்பு பேசியது. ""ஏய் சிறுவனே! ஏன் என்னை விடுவித்தாய்? என்று கேட்டது. ""உன்மேல் இரக்கப்பட்டு விடுவித்த என்னை ஒன்றும் செய்து விடாதே, என்று அழுதவாறு கேட்டான். பாம்பு பலமாகச் சிரித்தது. ""எனக்குப் பிறர் மீது இரக்கப்படுவர்களையும், முட்டாள்களையும் தான் கொன்று தின்னப் பிடிக்கும், என்று சொன்னபடி, அவனை நோக்கி வந்தது. ""இது மிகவும் அநியாயம். வேறு யாரிடமாவது நீதி கேட்போம், என்றான் சஞ்சித். அதற்குப் பாம்பு சம்மதித்தது.
எப்படியாயினும் அவனைக் கொன்று தின்னவே அது முடிவெடுத்தது. இருவரும் அருகிலிருந்த மாமரத்திடம் போயினர். தங்களது வழக்கைச் சொன்னார்கள். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட மாமரம், ""பாம்பு சொல்வதுதான் சரி. மனிதர்கள் நன்றி கெட்டவர்கள். பிஞ்சும், பழமாக நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஆனால், அவர்களோ எனது இலைகளைப் பிய்த்தும், கிளைகளை வெட்டியும், கல்லால் அடித்தும் துன்புறுத்துகின்றனர். எனவே, மனிதனாகிய இவனும் கொல்லப்பட வேண்டியவனே, என்று தனது தீர்ப்பைக் கூறியது. பாம்பு பயங்கரமாகச் சிரித்தது. கோபத்துடன் சீறியபடி, சஞ்சித்தைக் கொல்ல வந்தது. சஞ்சித் பலமாக அழத் தொடங்கினான். தன்னைக் கொல்ல வேண்டாம் என்று பாம்பிடம் கெஞ்சினான். பாம்பு எதையும் கேட்கத் தயாராக இல்லை. தனது கொடிய பற்களைக் காட்டியவாறு சஞ்சித்தை நெருங்கியது. அப்போது எதிர்பாராமல், தாத்தாவின் குரல் கேட்டது. ""சஞ்சித் நீ எங்கிருக்கிறாய்? ஏன் அழுகிறாய்? என்று கேட்டவாறு வந்த தாத்தா, பயங்கரமான ராட்சஷப் பாம்பைக் கண்டு வெலவெலத்துப் போனார். தனது பேரன் அசட்டுத்தனமாக ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்டான் என்பதை உணர்ந்தார். தன்னை சமாளித்தவாறு, ""என்ன நடந்தது? என்று மெதுவாகக் கேட்டார். சஞ்சித் நடந்ததை எல்லாம் சொன்னான். எல்லாவற்றையும் கேட்ட தாத்தா, பலமாகச் சிரித்தார்.
பின்னர் சஞ்சித்தைக் கோபத்துடன் பார்த்து, ""இவ்வளவு நாளும் அசடாக இருந்தாய். இப்போது பொய்யும் சொல்கிறாயா? என்று கேட்டார். அதைக் கேட்ட சஞ்சித்தின் கவலை பலமடங்காகியது. நான் சொன்னது உண்மை என்று சொல்லி அழுதான். பாம்பு அவன் கூறியது உண்மைதான் என்று தாத்தாவிடம் சொன்னது. ""நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறீர்கள். ஒரு கம்பளிப் பூச்சி எவ்வாறு, இவ்வளவு பெரிய பாம்பாக மாற முடியும்? என்று ஏளனமாகச் சொன்னார் தாத்தா. பாம்பு மீண்டும், தான் மந்திரவாதி ஒருவனால், வெள்ளிப் பெட்டியில் சிறைப்படுத்தப்பட்டு இருந்ததையும், சஞ்சித் காப்பாற்றியதையும், பிறருக்கு இரக்கப்படும் மனிதனையே தான் தின்பதாகவும் விளக்கமாகக் கூறியது. ""பாம்பாரே! நீங்கள் கூறியது எல்லாம் உண்மை என்று நிரூபிக்க முடியுமா? இவ்வளவு பெரிய பாம்பு, கம்பளிப்பூச்சியாக எப்படி இந்தச் சின்னஞ் சிறிய பெட்டியில் இருக்க முடியும்? நீங்கள் அதை நிரூபித்தால் இவனை தாராளமாகச் சாப்பிடலாம், என்றார் தாத்தா. ""இதோ ஒரே நொடியில், என்று பாம்பு மகிழ்ச்சியுடன் சம்மதித்தது. கம்பளிப் பூச்சியாக மாறி வெள்ளிப் பெட்டிக்குள் சென்றது. கண் மூடித் திறப்பதற்குள் தாத்தா அந்தப் பெட்டியை வேகமாக மூடினார். தன்னிடமிருந்த கயிற்றால் பலமாக அதை மூடிக் கொண்டார். அருகில் பாழடைந்த ஒரு கிணற்றில் வேகமாக வீசி எறிந்தார். சஞ்சித் இப்போது தான் நிம்மதியாக பெருமூச்சு விட்டான். தனது தவறைப் புரிந்துக் கொண்டான். அசட்டுத்தனமான செயல்களால் நேரும் துன்பங்களை நேரில் அறிந்துக் கொண்டான். அன்றிலிருந்து திருந்தி வாழ்ந்தான். அவனது புத்திசாலித் தாத்தாவும் மனம் மகிழ்ந்தார். |
|
|
|