|
மருதூர் என்ற நாட்டை விமலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அபூர்வ வேலைப்பாடுகள் கொண்ட ஜாடிகளை சேகரித்து வைப்பது பொழுதுபோக்கு. அவ்வகையில் முப்பது ஜாடிகளை சேகரித்து வைத்து, பத்திரமாக பாதுகாத்து, அவற்றை தினமும், பார்த்துப் பார்த்து ரசிப்பான். ஒருநாள் அரண்மனைப் பணியாளன் ஒருவன் அந்த மண் ஜாடிகளை தூசு துடைக்க எடுத்தான். அப்போது கைத் தவறுதலாக ஒரு ஜாடியை உடைத்து விட்டான். மண் ஜாடி உடைந்து போனதை அறிந்த மன்னன், அந்த அரண்மனைப் பணியாளனை ஒரு மாதம் சிறையில் அடைத்து, அதன்பிறகு அவனுக்கு மரண தண்டனை விதிக்குமாறு உத்தரவிட்டான். மன்னனின் தண்டனையைக் கேள்வியுற்ற அரண்மனைப் பணியாளனது மனைவி மிகவும் வருந்தினாள். அவள் அவ்வூரிலிருந்த ஒரு முனிவரிடம் சென்று நடந்ததைக் கூறினாள். முனிவரும் அவளது கணவனைக் காப்பாற்றுவதாகக் கூறி அரண்மனைக்குச் சென்றார். அவர் மன்னனிடம், ""மன்னா! நீ சேகரித்து வைத்திருக்கும் ஜாடியில் ஒன்று உடைந்து விட்டதாமே! அதனை நான் பழையபடி ஒன்றாக்கித் தருகிறேன், என்று கூறினார். அதைக் கேட்ட மன்னன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு முனிவரை ஜாடிகள் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் சென்ற முனிவர் ஒரு இரும்புத் தடியை எடுத்து, கண் ணிமைக்கும் நேரத்தில் மீதமிருந்த இருபத் தொன்பது ஜாடிகளையும் அடித்து உடைத்தார். முனிவர் இப்படிச் செய்வார் என்று மன்னன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. ""முனிவரே! என்ன செய்கிறீர்? நான் ஆசை ஆசையாக பாதுகாத்து வந்த மண் ஜாடிகளை உடைத்து விட்டீரே! நான் உமக்கு மரணத் தண்டனை வழக்கப் போகிறேன்! என்று ஆவேசமாகக் கூறினான் மன்னன். அதைக்கேட்ட முனிவர், ""மண் ஜாடிகள் என்றால் எப்போதேனும் ஒருநாள் உடைந்துதான் போகும். இருபத்தொன்பது ஜாடிகளை உடைத்தாலும் என் ஒருவனுடைய உயிர்தான் போகும். ஆனால், இந்த ஜாடிகளை நான் விட்டு வைத்தால், ஒவ்வொரு மண் ஜாடிக்கும் ஒவ்வொருவன் வீதம் விலைமதிப்பற்ற இருபத் தொன்பது மனித உயிர்கள் அல்லவா பறிபோகும்! அவர் களை காப்பாற்றவே நான் இவ்வாறு செய்தேன்! என்று பதில் கூறினார். முனிவரின் பேச்சைக் கேட்ட மன்னனுக்கு அறிவுக்கண் திறந்தது. அவன், "ஒரு சாதாரண மண் ஜாடிக்காக, மனித உயிரைக் கொல்ல நினைத்தேன் என்று வெட்கித் தலை குனிந்தான். அவன் தன் அறியாமை நீங்கிய வனாக முனிவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். மேலும், சிறையில் அடைத்து வைத்திருந்த அரண்மனைப் பணியாளனையும் விடுதலை செய்தான்.
|
|
|
|