|
கொல்லி மலை அரசனும், அமைச்சரும் பேசிக் கொண்டிருந்தனர். அமைச்சரே! அறிவு உள்ளவன் எவ்வளவு காலம் பொறுமையாக இருப்பான்? என்று கேட்டான் அரசன். அரசே! வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையாக இருப்பான். காலத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டான், என்றார் அமைச்சர். இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்றான் அரசன். அரசே! ஒரு சோதனை வைப்போம்!என்ன சோதனை? அரசே! நம் படைத் தலைவர்களில் கொடியவன் வேங்கையன். அவனைச் சிற்றரசனாக நியமியுங்கள். அவன் அங்கே கொடுமை பல செய்வான். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும், என்றார் அவர். அதன்படியே தென் மலைப் பகுதிக்கு அரசன் ஆனான் வேங்கையன். அவன் கொடுமைகளும் அதிகம் ஆயின. வீதியில் செல்லும் போது கையில் சவுக்குடன் சென்றான். வழியில் யார் வந்தாலும் சவுக்கால் ஓங்கி அடித்தான். அவர்கள் அலறிக் கொண்டு ஓடுவதைப் பார்த்து மகிழ்ந்தான். நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக என்னை அடித்தீர்? என்று யாராவது கேட்டால் போதும், மேலும், சவுக்கடி விழும். சிறைத் தண்டனையும் கிடைக்கும். அங்கே நடப்பதை எல்லாம் ஒற்றர்கள் வழியாக அரசனும், அமைச்சரும் அறிந்தனர்.
ஓராண்டு சென்றது. வேங்கையனின் அரச பதவி பறிக்கப்பட்டது. எண்ணற்ற கொடுமைகள் செய்த அவனை வீரர்கள் ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். அவன் கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு முதியவர் ஒருவர் வந்தார். தன் கையில் இருந்த தடியால் அவனை ஓங்கி அடித்தார். வலியால் துடித்த அவன், நான் உமக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லையே... என்னை ஏன் அடிக்கிறீர்? என்று கேட்டான். நீ பதவி ஏற்ற முதல் நாள் உன் எதிரில் வந்தேன். காரணமே இல்லாமல் என்னைச் சவுக்கால் அடித்தாய். அதற்கு இப்போது பழி வாங்குகிறேன், என்றார் அவர். அது நடந்து ஓராண்டு ஆகிறதே. அப்போதே என்னைப் பழி வாங்கி இருக்கலாமே, என்று கேட்டான் அவன். அப்போது நீ அரசனாக இருந்தாய். எதிர்ப்பைக் காட்டி இருந்தால் மேலும், எனக்குத் துன்பம் தந்திருப்பாய். இன்றோ நிலைமை மாறி விட்டது. இப்போது உன்னை என்ன செய்தாலும் கேட்பார் இல்லை. அதனால் ஓராண்டிற்குப் பிறகு உன்னை அடித்தேன், என்றார் அவர். மாறுவேடத்தில் அங்கே இருந்த அரசனும், அமைச்சரும் இதைக் கேட்டனர். அமைச்சரே! நீர் சொன்னது உண்மைதான். அறிவு உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற காலம் வரும் வரை பொறுமையாக இருப்பர், என்றான் அரசன். |
|
|
|